மீள் பதிவு -- சாம்பல் காடு பகுதி 7
இது கருணை யாசகம் கேட்கும் நோக்கில் படைக்கப்பட்ட படைப்பு அல்ல. உணர்வுகளை எழுதி காசாக்கும் வியாபார நோக்கான மீள் பதிவும் அல்ல. மனிதகுலம் மனிதத்தில் தழைக்க வேண்டும்.
இனியாவது நாம் உயிர்த்தியாகங்களை பார்வையாளராக நோக்காதிருக்கும் சிந்தனை பெறுவது அவசியம் என்பதை எல்லோரும் உணரும் தருணத்திற்காக ஏங்கும் நினைவில் வந்த படைப்பும் மீள்பதிவும்.
மனித உருவத்திலிருந்த
கோபால கிருஷ்ணநாயுடுயென்ற மிருகம்
தீக்குச்சியை உரசி
குடிசையின் மேல் போடுகிறான்.
குப்பென்று
பற்றிக்கொண்டது குடிசை.
கொளுந்து விட்டு எரிகிறது
நெருப்பு.
கொளுந்துவிட்டு எரியும்
நெருப்பிலே,
அந்த
ராட்சச தந்தூரி அடுப்பிலே
வைக்கோல்கள் கொண்டுவந்து போடப்படுகின்றன.
விறகுகளும் சுள்ளிகளும்
தீனியாக போடப் படுகின்றன.
தீ நாக்கு
சுவைத்து சுவைத்து
மக்களை விழுங்கியது.
மரண ஓலம்...
மரண ஒலம்...
உலகையே உலுக்கியெடுத்த
மரண ஓலம்.
வாழ்நாள் முடிந்தும் கூட
வரலாற்றைத் தாண்டி ஒலிக்கும்
மரண ஓலம்.
அந்த
பரந்த வயல் காடுகளைத் தாண்டி
மனிதகுலத்தின்
மரணக்குரல்
உலகமெங்கும் பரவுகிறது.
மனித குல வரலாற்றில்
எல்லா மக்களும்
அப்போதுதான்
சேர்ந்து அழுதார்கள்.
அரக்கர் குலம்
சுற்றி நின்று சிரிக்கிறது.
ஆறு இளைஞர்கள்
குதித்து வெளியேறுகிறார்கள்.
அரக்கர்கள் கண்களில்
மாட்டிக் கொண்டனர்.
நாலு பேர் ஒடிவிட்டனர்.
இரண்டுபேர் மாட்டிக் கொண்டனர்.
கைவேறு கால் வேறாக
வெட்டப்பட்டு
துண்டு துண்டாக
நெருப்பில்
தூக்கி எரியப்பட்டனர்.
ஒரு தாய்
தனது
இரண்டு பிள்ளைகளையும்
தூக்கி வெளியே எறிகிறாள்.
அவள்
உள்ளேயே எரிகிறாள்.
அந்த வீரப்பெண்ணின்
இரத்த சம்பந்தம் எதையும்
விட்டுவைக்க
அரக்கர்களுக்கு மனமில்லை.
அந்தப்
பச்சைக் குழந்தைகளிரண்டையும்
தூக்கி
ஈவு இரக்கமின்றி
கை கால்களை பிய்த்து
மீண்டும் நெருப்பிலே
தூக்கிப் போடுகிறார்கள்.
இதயத்தை தொலைத்தவர்கள்
தங்கள் கரைப் பற்களைக்காட்டி
காடே அதிரும்படி
கடைசியாய் ஒருமுறை
சிரித்துக் கொண்டார்கள்.
மனிதகுலத்தின் மரண ஓலம்
ஒரு மணிநேரத்தில்
நிரந்தரமாய் அடங்கிவிட்டது.
உலகமே
அமைதியில் மூழ்கியது.
ஊருக்கு ஒதுக்குப் புறத்தில்
எதோவொரு வயல்காட்டில்
ஒரு நாய்
குரைத்துக் கொண்டிருப்பது மட்டும்
நன்றாகக் கேட்டது.
^^^^^^^^^^^^^^^^^^
படைத்தவர்: சுந்தரபாண்டியன் (திருப்பூர்)
நாள்: 29-12-2012: நேரம்: 09:15:58
பார்வை: 43 ( 11-01-13 ன் படி)
பொறுமை காத்து வாசித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் என் மனதார்ந்த நன்றிகள்.
இந்த படைப்புக்கு நான் செலுத்த நினைத்த அஞ்சலி நிறைவுற்றது.
ஆயினும் அந்த மனித உயிர்த் தியாகங்களுக்கு எத்தனை அஞ்சலி செலுத்தினாலும் எத்தனை கோடி நெஞ்சகளிலும் ரணம் ஆறாது.
மனிதம் தழைக்கும் போது மட்டுமே அந்த உயிர்களின் ஒப்பற்ற தியாகங்கள் இந்த புவியில் பயன் பாட்டில் வரும்.
கண்ணீர் மல்க இந்த படைப்பின் மீள்பதிவை நிறைவு செய்கிறேன் – இது போன்ற படைப்புகள் வர நிர்பந்திக்கும் சூழல்கள் இந்த புவியில் இனி ஒரு பொழுதும் நிகழாதிருக்க….. ஆழ்ந்த வேண்டுதலுடனே…. கனத்த நெஞ்சுடனே….
பண்புடன் மங்காத்தா