கோபமெனும் கொடிய நோய்
![](https://eluthu.com/images/loading.gif)
தொள்ளாயிரம் முறை முயன்றும்
தோல்வியே அடைகிறேன்!
ஆயிரம் முறை அடக்கியும்
அடங்க மறுக்கிறது!
கவிதை வரை
என்றனர் சிலர்!
காரம் குறை
என்றனர் பலர்!
கவிதை வரைந்தும்,
காரம் குறைத்தும்
கடைசிவரை கட்டுப்படவில்லை!
இசை மழையில் நனை
என்றனர் சிலர்!
இறைவனை நினை
என்றனர் பலர்!
இரண்டையும் முயற்சித்தும்
இதுவரையில் பலனில்லை!
நூறு வரை
எண்ணச் சொன்னார்கள்!
எண்ணி முடிப்பதற்குள்
என்பது முறை
எட்டிப் பார்த்தது!
தியானம் பயில்,
வானம் வசப்படும் என்றார்கள்!
வசப்படவில்லை வானம், மாறாக
வசைபட்டது என் வாயில்!
உடற்பயிற்சி, யோகா
உதவும் என்றார்கள்!
உருண்டு பிரண்டு பார்த்தும்
உருப்படியான மாற்றமில்லை!
பாதகமில்லை,
காதல் செய் என்றார்கள்!
பழகிப்பார்த்து
பயந்தோடினாள் காதலி!
மருத்துவம் தவிர வேறு
வழியில்லை என்றனர்!
வெறுத்துப்போன மருத்துவர்
தற்போது வேறு தொழில்
செய்வதாய்க் கேள்வி!
என்னதான் செய்வது?
எப்படித்தான் வெல்வது?
கோவிலாய் இருந்த மனதை
கோரமாய் மாற்றி வைத்த
கோபமெனும் கொடிய நோயை!