வீழ்த்த காத்திருக்கும் முற்றம்!

மண்மீதான அதீத கற்பனைகளுடன்தான்
ஒவ்வொரு நாளுக்குள்ளும் நுழைகிறேன்
தினமும் எதிர்மறைகளை ஒளித்தபடி
என்னை உள்வாங்கிக் கொள்கிறது பொழுதுகள்

காலை வாரிவிடும் காலமென்பதால்
மிக அவதானத்தோடுதான்
அடியெடுத்து அணுகுகிறேன்
இருந்தும் என்னை பசப்பி,பாசாங்கித்து
என் அனுமானங்களை
தகர்த்தெறிந்தபடி தினமும்
பெரும் கடப்பாறைகளை
கொண்டுவந்து என் முற்றம் எங்கும்
முளைக்க வைத்து விடுகிறது காலம்

வாழ்வை ஒரு பூச்செண்டு போல்தான்
வாங்கி வந்தேன்
ஆனால் அது ஊதி உருப்பெற்று
எப்போது வேண்டுமானாலும்
வீரியத்தோடு வெடித்து சிதறி விட
தயார் நிலையிலிருக்கும்படி
தயாரிக்கப்பட்ட
போராயுதம் போலவே போய்விட்டது

இளவு பிடித்த வாழ்க்கை
இலகுவாகிவிடும் என்றுதான்
ஒவ்வொரு நொடியும்
இலவுகாத்த கிளிபோல் இருந்தேன்
அதற்கான தோற்றப்பாடுகள் யாவும்
தோற்கும் பாடுகளாகியதே அன்றி
ஆச்சரியப் படும்படியாக
இதுவரை அறிய ஏதுமில்லை

நான் போகிறேன்........
எனது கனவுகளை
பகிர்ந்துகொள்ள தக்கபடி
நீங்கள் இல்லையென்பதால்
எல்லை மீறிய உங்கள் நாகரீகத்தோடு
ஒத்துப்போக எனக்கு உடன்பாடில்லை

அவசர மனிதர்களோடு
ஒன்றித்து ஜீவிப்பதென்பது
என்னைப்போல்
சாதாரணமானவர்களுக்கு
சாதாரணமானதல்ல என்பதை
எனது முற்றம் அடிக்கடி
கால்வாரி கற்பிக்கிறது
என் இயலாமையை சுட்டியபடி!

அதனால் நான் போகிறேன்
எனது முற்றம் இடரி என்னை
வீழ்த்துவதர்க்குள் நான் விடைபெறுகிறேன்.


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (17-Jan-13, 12:19 am)
பார்வை : 124

மேலே