நான் ஒரு மாடு !-கே.எஸ்.கலை
என்பும் சதையும் சேர்ந்த கூடு
எனக்குப் பெயர் தான் பசுமாடு
என்னால் வளர்வது எத்தனை வீடு
எனக்கேன் இங்கு இத்தனை கேடு ?
கொடியும் செடியும் மட்டும் தின்று
கொட்டிலில் எந்தன் கன்றினை ஈன்று
கொடுத்திடும் பால்தான் உனக்கும் நன்று
கொன்றெனைத் தின்பது நிற்பது என்று ?
ஐந்தறிவோடு பிறந்தது என் விதி
ஆறறிவிற்கு கெட்டதேன் தன் மதி ?
ஆவினம் எங்களின் இந்தக் கதி
அன்பிலார் செய்திடும் அற்பச் சதி !
உதிரத்தை பாலாய் உருமாற்றி - உன்
உயிரினைக் காத்திடும் உறவானேன்-
ஊனினை விரும்பிய உன் மனது
ஊனமாய் ஆனது இச் செயலால் !
அன்னைக்கு ஈடான சேவை செய்தும்
அன்பற்ற செயலால் அறுத்து உண்டால்
அன்னையை கொன்று தின்பதைப் போல்
அறிவிலி உனக்கும் படவில்லையா ?
வாயிலா ஜீவன் எங்களுக்கு
வலியினைச் சொல்ல வழியில்லை
நீ இதை அறியும் நாள் வந்தால்
பசுவதை அழிக்க முன்வருவாய் !