நான் ரசித்த திருமணம்.
ஓங்கி உயர்ந்த மலையதன் சரிவில்
கோங்கு மரங்களும் தெங்கத் தருக்களும்
நீங்குக பிரிவினை என்றே இணைந்து
பாங்குடன் நின்றன அடுக்குப் பாறையில்
அடுக்குப் பாறையை மணவறை ஆக்கி
கடுங்குளிர் பனியின் போர்வைத் திரையில் நெடுநெடுவென வளர் தென்னம் பெண்ணவள்
உடுத்தி இருந்தாள் பசுங் கல்யாணப் பட்டு.
கல்யாணப் பெண்ணை பார்த்திட வந்த
நல்யானை துதிக்கையைத் தூக்கிப் பிளிறிட
நீலக் கடல்வாழ் நட்சத்திர மீன் வடிவில்
நின்ற மேகங்கள் அட்சதை தூவிட
அட்சதை தூவிய வெண்குளிர் பெண்டுகள்
கட்டுகள் அறுக்கத் தாவிய பனிப் புயல்
மொட்டெது மலரெது எனப் பிரிக்காமல்
பொட்டுப்பூக் கம்பளம் போர்த்தது ஆங்கே.
போர்த்திய திரையிடை பார்த்திடத் தோற்று
ஆர்ப்புகள் இன்றி அவ்விடம் எழுந்த
பகலவன் தனது கீற்றில் ஒன்றினை
அகல விரித்தான், நீட்டி வீசினான்.
நீட்டி வீசிய ஒளியதன் விளைவால்
வாட்டுங் குளிர்நீங்கி வலிமை பெற்றவள்
வண்ண முகத்தில் பொலிவு கூடிட
கண்களைச் சிமிட்டிக் காதலில் சிரித்தாள்.
காதலில் சிரித்ததைக் கண்ட விலங்கினம்
வாதுமை மரத்தில் இருந்த புள்ளினம்
சாதகம் செய்திட்ட சோபனப் பாடலில்
பாதகம் இன்றியே கச்சேரி நடந்திடும்.
கச்சேரி கேட்ட கமுகும் பாக்கும்
பச்சை விசிறியிலை பதமாய் ஆட்ட
ராகம் தாளம் பல்லவி சேர்ந்து ஆங்கே
சாகசம் செய்ததில் இசைத்தரம் உயர்ந்தது
உயர்ந்து வளர்ந்த பெண்ணவள் மார்பில்
பெயர்ந்து விழும் போல் தொங்கிய குலைகள்
பயந்து அண்ணந்து பார்த்தவர் கண்களோ
மறந்தும் விலக்கிட மறுத்து நின்றன
மறுத்த அத்தனை கண்களும் தன்மேல்
உறுத்திய பார்வையில் நாணிய பெண்ணவள்
சறுக்குப் பின்னலை சகட்டு மேனிக்கு
அறுந்திடும் வகையில் ஆட்டினாள் இடைவரை.
இடையில் வழியும் தேநிற பிசினை
கடைந்துக் கொத்தும் கொண்டைப் பறவை
அடைந்தேன் இன்பம் என்பது போலே
சிலிர்த்துதன் சிண்டை சிவ்வெனப் பறந்தது.
சிவ்வெனப் பறப்பவை, சில்லெனப் பூப்பவை
எவ்வகைப் படைப்பும் குழுமிய இடத்தில்
ஒப்புமை இல்லா அழகியின் திருமணம்
தப்பிதம் இல்லாமல் தனியே நடந்தேறியது..