அதிகாலை அழகுகள்.....
என் அறை
கண்ணாடி சன்னலில்
முகம் பார்த்திட வந்திடும்
அதன் அலகால் கொத்தியே
உரக்க கத்தியே-என்
உறக்கம் களைந்து
எழுந்து நிற்கும் வேளையிலே
தன் முகம் மறைத்து ஓடிடும்
செம்பூக பறவை ஓர் அழகு....
அதிகாலை ஆதவனின்
அழகில் மயங்கி
வெட்கத்தால் சிவந்து
விரிந்து சிரித்து நிற்கும்
செம்பருத்தி பூ ஓர் அழகு...
பனியோடு காதல் விலகாமல்
பிரிய மனமில்லாமல்
புல்வெளி தாங்கி நிற்கும்
கண்ணீர் துளி ஓர் அழகு.....
துள்ளி குதித்து ஓடி வந்து
தாவியே மாதுளை மரத்தின்
கிளைகளில் ஏறியே அதன்
கனிகளில் அமர்ந்து சிறிய வாயாலே
சிறிது சிறிதாய் கடித்துண்ணும்
ஸ்ரீராமனின் அருள் பெற்ற
அணிலார் ஓர் அழகு...
மஞ்சள் உடை தரித்து
அருகே செங்கலும் சாமியாய்
மகமாயியாய் மாறியும்
மாற்றியும் விட பட்டதால்
வீரமாய் நிற்கும்
வேப்பமரம் ஓர் அழகு...
ஆடைகள் அனைத்தும்
கிழிந்திருந்தாலும்- காற்றின் இசைக்கு
கவலையின்றி நடனமாடும்
வாழை இலைகள் ஓர் அழகு...
அதன் மலரில் தேன் அருந்த
ஓடிவரும் தேன்சிட்டு ஓர் அழகு...
பூந்தோட்டத்தின் பூவழகு...
பூவிதழ் அழகு-பசியால்
புசிக்க புயலாய் பறந்து
வரும் தேனீ ஓர் அழகு...
வாசலில் போட்ட
மாக்கோலம் அழகு....
அதை உண்ண வரும் எறும்புகள்
ரசித்திடாத ஓர் அழகு...
அதைக்கண்டு ரசிக்கும்
அன்னை உள்ளமோ பேரழகு....
-PRIYA