கவிஞர் சரவணாவின் கவிதை – ஒரு பார்வை (பகுதி 1)

கவிஞர் சரவணாவின் 'ஆண்மைகள் கதறிக் கெஞ்சுகிறது' என்ற கவிதையை வாசித்தேன். இது ஒரு அருமையான கவிதை. நல்ல வெளிப்பாடு. இதில் எங்கும் விரசமே இல்லையே! தலைப்பு வேண்டுமானால் கொஞ்சம் Harsh ஆக இருக்கலாம். கவிதைக்குத் தலைப்பும் முக்கியம். செய்தியை அளவாக எச்சரிக்கையுடன் தந்திருக்கிறார்.

பெண்கள் பாலியல் துன்பத்திற்கு ஆளாகாமல் தற்காத்துக் கொள்ளவும், ஆண்களை பாலியல் உணர்ச்சியைத் தூண்டாவண்ணமும் இருக்க என்னென்ன செய்யக் கூடாது என்றும், பெற்றோர்கள் பிள்ளைகள் விசயத்தில் பெண்களானாலும் சரி, ஆண்களானாலும் சரி கவனமாகச் செயல்பட வேண்டும் என்றும் கருத்துரைக்கிறார்.

பெண்கள் எப்படி இருந்தால் மதிப்பும், மரியாதையும் வரும் என்றும், எந்தெந்த சந்தர்ப்பங்களில் ஆணுக்கு மனத்தடுமாற்றம் ஏற்படும் என்பதை மாறி மாறி ஒவ்வொரு பத்தியிலும் அடுத்தடுத்த செய்தியாகச் சொல்கிறார்.

வன்புணர்ச்சியின் வாயிலாக பெண்களின் கற்பைச் சூரையாடுபவன் ஆணல்ல... அரக்கன்.. என்றும் முதலிலேயே சொல்லிக் கண்டிக்கிறார்.

வன்புணர்வுகள் நெருப்புத் தீவிரவாதம் என்பதையும் சரியே என்றும் ஒத்துக் கொள்கிறார்.

சமூகக் குற்றங்களில் ஈடுபடும் பெண்களுக்கே அன்றி .... நடுத்தர வர்க்க இன்றும் நெறிமையாய் தோழமையாய் இருக்கும் என் தோழிகளுக்கு அல்ல என்பதை கொட்டக் கொள்ள எழுதியிருக்கிறேன்...என்றும் கூறுகிறார்.

பெண்கள் எப்படியெல்லாம் இருந்தால் அழகென்றும், எப்படியெல்லாம் இருந்தால் கவ்ர்ச்சியென்றும் வரையறுக்கிறார். பழைய திரைப்படங்களில் கதாநாயகிகள் சீரான உடையுடுத்தி, காதலன் காதலி ஒருவருக்கொருவர் நெருங்கியும் நெருங்காமலும் நாகரீகமாக நடித்து வந்தார்கள். சற்றுக் கவர்ச்சியாகக் காட்ட வில்லியாக நடிக்கும் நடிகைகள், உதாரணமாக டி.ஆர்.ராஜகுமாரி, எம்.என்.ராஜம், ராஜ்ஸ்ரீ, விஜயலலிதா, ஜெயமாலினி போன்றோர் சற்று பளபளப்பான ஆடையணிந்து உதட்டைச் சுழித்து, கண்களைச் சுழற்றி வளைந்து நெளிந்து ஆடிவருவார்கள். அவ்வளவே. அவர்கள் அங்கங்கள் எடுப்பாகத் தெரியும்படி வருவதேயில்லை.

இன்று நடிக்கும் கதாநாயகிகளோ, அந்தக் கால வில்லி நடிகைகளைவிட மிக கவர்ச்சியாக ஆடையணிந்து, இடை தெரிய, தொடை தெரிய, திரைப்படங்களிலும், பொது மேடைகளிலுமே தோன்றுகிறார்கள். தொலைக்காட்சியில் வரும் பல நிகழ்ச்சிகளிலும் காணலாம். கதாநாயகிகளே குத்தாட்டம் என்ற நடனங்களிலும் கவர்ச்சியைக் காட்டுகிறார்கள்.

பாடல் காட்சிகளில் கதாநாயகிகள் அரைகுறை ஆடைகளிலும், நாயகர்கள் முழுப்பேண்ட், சட்டை அணிந்தும் வருகிறார்கள். 23.01.13 தேதியிட்ட ஆனந்த விகடன் 'பிரியாணி ப்ளேபாய்' என்ற பகுதியில் (கார்த்தி-ஹன்சிகா) உள்ள இரண்டு படங்கள் பாருங்கள். யார்தான் மனம் பேதலிக்க மாட்டார்கள்!

பொதுவாகவே ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து வந்த காலங்கள் உண்டு என்பதை நாமறிவோம். அரசர்களுக்கு அந்தப்புரம் என்றும், பல மனைவியரும் உண்டு.

தற்காலத்தில் நாகரீக வளர்ச்சியின் பயனாகவும், வளர்ந்து வரும் மக்கட் பெருக்கத்தின் காரணமாகவும் ஒருவன் ஒருத்தி என்றும், ஒரு பிள்ளை போதுமே என்ற நிலை நிலவி வருகிறது. பொருளாதார நிலையிலும் அதிகப் பிள்ளைகள் பெற்று வளர்த்து ஆளாக்கவும் முடியவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியைச் சமாளிக்கவும் இயலவில்லை.

ஜனவரி 13, 2013 தேதி ஹிந்து நாளிதழில் ஆகான்ஷா கார்க் என்ற டில்லியைச் சேர்ந்த பெண் ’போதும் போதும்’ (Enough is enough) என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். பேருந்துகளில் பெண்கள் தலையிலிருந்து கால் வரை போர்த்துக் கொண்டு சென்றாலும் கூட, அவர்களின் ஷால் அல்லது துப்பட்டா நழுவும்போது அவளைச் சுற்றி இருக்கும் ஆண்கள் ‘ஹல்லோ மேடம், ..ச் ..ச், ஹே ப்யூட்டி, எங்கே போறீங்க மேடம்’ என்பது போன்ற் மன வருத்தமும், பயப்படும்படியுமான பல சங்கேத ஒலிகளை, அவர்கள் கண்களில் எக்ஸ்-ரே மெஷின் இருப்பது போன்ற ஊடுருவும் பார்வையுடன், எழுப்புவதாகச் சொல்கிறார்.

பஸ் மற்றும் ஷேர் ஆட்டோ போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிக்கும் போதும் (வேகத்தடை வந்து விட்டால் போதும்) கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, அத்தகைய ஆண்கள் பெண்கள் மேலே சாய்வதும். கை கால்களை உரசுவதும் சாதாரணம் என்றும் சொல்கிறார்.

பஸ்சிலும், ஆட்டோவிலும் பயணிக்கும்போது, பிற வாலிபர்கள் கூறும் அசிங்கமான வர்ணனைகளையும், சொற்களையும் காதுகளில் விழாமலிருக்க, பாட்டுக் கேட்கும் கருவியைக் காதுகளில் மாட்டி உச்ச ஸ்தாயியிலும் வைத்துக் கொள்வாராம். அத்தகைய வர்ணனைகளைக் கேட்க நேர்ந்தால், மனம் வேதனைப்படுவதுடன், மனத்தளவில் ஆயிரம் முறை சாக வேண்டியிருக்கும் என்றும் கூறுகிறார். அல்லது கோபப்பட்டு சண்டைக்கு நின்றால், பஸ்சில் ஒரே பெண்ணாக சுமார் 25-30 பேரையாவது, ஆட்டோவாக இருந்தால் 6-7 பேரையாவது சமாளிக்க வேண்டியிருக்கும் என்றும் சொல்கிறார்.

பெண்ணைப் பெற்ற பெற்றோர்கள் பெண்ணை அனுப்பிவிட்டு, பெண் பள்ளிக்கு அல்லது அலுவலகத்திற்கு சென்றாளா என்பதை விட, உயிரோடும், பத்திரமாகவும் சென்றாளா என்பதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. திரும்பவும் வீட்டிற்கு வந்து சேரும் வரை வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது என்றும் சொல்கிறார். .

பெண்களை, ஆண்களுக்கு பாலுணர்வைத் தூண்டும் வகையில் இல்லாதபடி ஆடை அணிந்து வர வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். சில நேரங்களில் ஆண்கள் மார்பு தெரிய சட்டைப் பித்தான்களைத் திறந்து விட்டும், அவர்களுடைய உள்ளாடைகள் தெரியும்படி பேண்ட் அணிந்து வரும்போது, நாங்கள் அவர்களை வர்ணனை செய்து கேலி செய்யவோ, பாலியல் தொல்லை கொடுக்கவோ நினைப்பதில்லையே! என்றும் கூறுகிறார்.

சமீபத்தில் தமிழ்நாட்டில் உதவி செய்யப்போன 16 வயதான பக்கத்து வீட்டு பையனை 42 வயதுடைய பெண் பாலியல் பலாத்காரம் செய்ததாக செய்தி. அக்காவின் கணவனை அடைய வேண்டுமென பாலுணர்வுடன் அலையும் பெண்ணை ஒரு தமிழ் திரைப்படத்தில் காட்டினார்கள். பொதுவாக பெண்களுக்கு inhibition ம் எச்சரிக்கை உணர்வும் அதிகம். எனவே ஆண்களை பெண்கள் பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் மிகக் குறைவே.

நாகரீகம் எவ்வளவுக்கெவ்வளவு முன்னேறியிருக்கிறது என்கிறோமோ, மக்களிடம் அவ்வளவுக்கு முரண்பட்ட சிந்தனைகளும், செயல்பாடுகளும் நடைபெறுகின்றன. தவறு செய்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்ததாகாது. உறுதியான, விரைவான நீதிமன்ற நடவடிக்கைகளால் தாமதிக்காது குற்றவாளிக்கு தண்டனை அளித்து நீதி வழங்கவேண்டும் என்றும் கூறுகிறார்.

ஒவ்வொரு குடிமக்களும் தவறுகள் நடக்கும்போது தட்டிக் கேட்கவும், காவல்துறைக்கு புகாரளிக்கவும் வேண்டும். ஒவ்வொரு பெண்ணுக்கும் சுதந்திரமாகவும், பாதுக்காப்பாக வாழவும் உரிமையுண்டு. அந்த நிலை வரவேண்டும் என்கிறார்.

டில்லி மருத்துவ மாணவி பாலியல் வன்முறையின் தொடர்ச்சியாக பெண்களின் கற்பைச் சூரையாடிய குற்றங்களுக்கு ரசாயன ஆண்மையிழப்பு செய்ய வேண்டும் என்று பத்திரிக்கைகளில் பேச்சு அடிபடுகிறது. அதுபற்றி அஹமதாபாத்தைச் சேர்ந்த பாலியல் மருத்துவ நிபுணர் டாக்டர்.பரஸ் ஷா, ‘ரசாயன ஆண்மையிழப்பு என்பது குறிப்பிட்ட ஆணுக்கு medroxy-progesterone acetate (MPA) என்ற மருந்தை கொடுத்தால் பாலுணர்வு குறைந்தும், ஆணுறுப்பின் விரைப்புத்தன்மை இழப்பும் ஏற்படும் என்கிறார். இதை 3 மாதங்களுக்கு ஒருமுறை தண்டனைக் காலம் வரை அல்லது ஆயுள் முழுவதும் கொடுக்க வேண்டும். மாற்றாக testesterone என்ற மருந்தைக் கொடுத்தால் மீண்டும் பாலுணர்வைத் தூண்டவும் முடியும். எனவே இதை நடைமுறையில் செயல்படுத்துவது சிரமம் என்றும் கூறுகிறார்.

எனவே, பாலியல் குற்றம் (Rape) உறுதி செய்யப்பட்டால் அறுவை சிகிச்சை மூலம் விரைப்பையில் உள்ள Testes ஐ எடுப்பதுடன், ஆணுறுப்பையும் சிறிதளவு வெட்டி (Partial amputation) அகற்றிவிடவும் வேண்டும் என்று கடுமையாகப் பரிந்துரைக்கிறார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் திருட்டு மற்றும் வழிப்பறி குற்றம் செய்ததற்காக பொது இடத்தில் வைத்து தூக்கிலிடப்பட்டதாகச் செய்தி.

விரிந்து வீழ்ந்த கறுப்பருவியாய் முடிக்கற்றையுடன் கவர்ச்சியுடனும், அதீதப் பூச்சுடனும் அதீத வனப்புகளில் காணும்போதும், பிடி கவராக் களிறு போலத் திரியும் கட்டுப்பாடற்ற மனம் முதிர்ச்சியடையாத இளைஞர்களின் தவறான போக்கிற்கு தேவதைகள் போன்ற எழில் தோற்றத்துடன் திறந்த வயிறும் திமிறும் மார்புமாக அங்கம் தெரிய வலம் வரும் இளம்பெண்கள் தூண்டுகோலாக அமைய வேண்டாம் என்று மட்டுமே கவிஞர் சரவணா அறிவுறுத்துகிறார். இவர் ஆண்மைகள் கதறிக் கெஞ்சுகிறது ..... என்று மருகி, ஆதங்கப்பட்டு கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறார்.

ஆண்மைகள் கதறிக் கெஞ்சுகிறது ..... என்று இக்கவிஞர் வேண்டுவதெல்லாம்,

இது கொழுப்பூசியேற்றிக்
கூத்தடிக்கும் பெண்ணாதிக்க
கிருமிகளுக்கே.. என்றும் தெளிவுபடச் சொல்கிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jan-13, 12:00 am)
பார்வை : 183

மேலே