கவிஞர் சரவணாவின் கவிதை – ஒரு பார்வை (பகுதி 2)
இக்கருத்தையேதான், 'கற்பைத் தொலைக்காதீர்' என்று கே.எஸ்.கலை தன்னுடைய கவிதையில் சொல்கிறார்.
வேலைக்குச் செல்லும் பெண்ணே - காம
வேட்கையைக் கூட்டும் வகையில் - ஆடை
வேஷம் நீ போட்டுச் சென்றால்
வேதனைதான் உனக்கு மிஞ்சும்!
தொப்புளும் மார்பும் காட்டி
தொடையையும் இடையையும் திறந்து
தொழிலுக்கு அணியும் ஆடை – அது
தெருவிலே போவோனுக்கு விருந்து! என்றும்,
அத்தகைய தீய எண்ணங்களை ஏற்படுத்தும் ஆடைகளை அணிந்து சென்று
திணவிற்கு வெறிபிடித்த நாய்கள் -அதற்கு
திமிரோடு உணவளிக்கும் நிலையை உருவாக்காதீர்கள் என்றும் கூறுகிறார்.
பெற்றெடுத்த பெற்றோரே கொஞ்சம் வாரீர்
பெற்ற பிள்ளை வளர்ப்பதற்கு நீரும் பயில்வீர்
கற்ற கல்வி மட்டும் கரை சேர்க்காது
கற்பைக் காத்திடப் பாடம் புகட்ட வேண்டும்!
கல்வியென்று சொல்லிப் போகும் பிள்ளை
கற்கச் சென்று செய்வதென்ன தேடிப் பாரும்!
கட்டிளம் வயதுடையாள் அவளும் – தன்
கணவனுக்கு ஒத்திகை பார்க்கக் கூடும்!
உடுத்திடும் ஆடை கவனி – அவள்
உரைத்திடும் வார்த்தையும் கவனி!
என்று பெற்றோர்க்கும் ஆலோசனை கூறுகிறார். இவர் பெண்களுக்கு 'கற்பைத் தொலைக்காதீர்' என்று அறிவுறுத்துகிறார்.
பள்ளிக் குழந்தைகளுக்கு பிறந்த நாள் போன்ற விசேட நாட்களில் கவர்ச்சியான புத்தாடை அணிவித்து, உதட்டுச் சாயம் மற்றும் முகத்தில் ஜிகினா தடவி பள்ளிக்கு அனுப்புவதை பார்த்திருக்கிறேன். இது பள்ளி வாகனங்களிலோ, பொது போக்குவரத்து வாகனங்களிலோ செல்லும்போது ஓட்டுனர், உதவியாளர் மற்றும் பிற ஆண்களிடமிருந்து தொல்லைகள் வர வாய்ப்புண்டு.
சரி, கவர்ச்சியாக ஆடை அலங்காரங்கள் செய்யாமல், அங்கங்கள் தெரியாமல் சாதாரணமாக உள்ள ஏழைகள், ஆதரவற்றோர், மனநலம் குன்றியவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதில்லையா என்று கேட்கலாம். உடன் பாதுகாப்பான உறவினர்களும், வசிக்க பாதுகாப்பான இடங்களும் இல்லாததே காரணம், அவர்களுக்கு பாதுகாப்பும், அடைக்கலமும் தர வேண்டியது அரசின் கடமை.
தற்கால திரைப்படங்களில் வரும் பாடல் காட்சிகள் கதாநாயகிகள் அரைகுறை ஆடைகளுடன் ஆபாச அசைவுகளுடன் பாலுணர்வைத் தூண்டும் வகையிலேயே இருக்கின்றன. கதைப்படி தேவை இல்லையென்றாலும் கனவுக் காட்சிகளாக அமைத்து விடுகிறார்கள்.
தந்தை மகளுக்கும், சகோதரன் சகோதரிக்கும் பாலியல் தொல்லைகள் கொடுப்பதாகவும் செய்திகளில் பார்க்கிறோம்.
படிப்பறிவில்லாத முரடர்களும், மனச்சிதைவு உள்ளவர்களுமே பாலியல் வன்முறையில் ஈடுபடுகின்றனர். குற்றச செயல்களில் ஈடுபடுபவர்கள் பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. தண்டனைகளிலிருந்து சட்ட ஓட்டைகளின் வழியாக எளிதில் தப்பி விடுகின்றனர்.
பாலியல் தவறு செய்தவர்களை விசாரித்து விரைவில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும், இதுவே தவறு செய்ய நினைப்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்.
என்று ஒரு நாள் இரவில் நம் நாட்டில் பெண்கள் தனியாக பத்திரமாக செல்ல முடிகிறதோ அன்றுதான் சுதந்திரம் பெற்றதாக அர்த்தம் என்று மகாத்மா காந்தி சொன்னார். அந்த நாள் எப்பொழுது வரப் போகிறது?
பெண்கள் கூந்தலை நன்றாக முடிந்து, பூச்சுகள் அதீதமாக இன்றி அங்கங்கள் எடுப்பாகத் தெரியாவண்ணம் தகுந்த ஆடைகளால் மூடி தகுந்த பாதுகாப்பான துணையுடன் பள்ளிக்கோ அலுவலகத்திற்கோ செல்ல வேண்டும்.
முடிந்த வரை இருட்டு முன் பகல் நேரத்திலேயே வீடு வந்து சேர்ந்து விடவேண்டும்.
கூட்டமில்லாத வாகனங்களில் அறிமுகமில்லாத பேர்களுடன் செல்லக் கூடாது.
தனிமை வேண்டியோ வேறு காரணங்களுக்காகவோ பெண்கள் போக்குவரத்து வசதியில்லாத புறநகர் பகுதிகளுக்கு அகால நேரங்களில் எந்தக் காரணம் கொண்டும் செல்லக் கூடாது.
வீட்டை விட்டுச் செல்லுமுன் எங்கு செல்கிறோம் என்பதை பெற்றோர், சகோதரர், கணவனுக்குத் தெரிவிக்க வேண்டும்.
வழிதவறும் ஆண்களுக்கு இயல்பாக உள்ள அதீத ஹார்மோன்கள்தான் தவறான எண்ணத்தையும், நடவடிக்கைகளையும் தூண்டுகிறது. இத்தகைய செயல்களில் ஈடுபடும் இளைஞர்களின் வளர்ப்பும், அவர்களின் நடவடிக்கைகளும், நண்பர்களும் பெற்றோர்களால் கவனிக்கப்படுவதில்லை; பெற்றோர்களால் கவனிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள, தவறான செயல்களை செய்யக் கூடாது என்ற எண்ணத்தைக் கொடுக்கும் inhibition மதுவருந்துவது மற்றும் போதைப் பழக்கங்களால் மறைந்து விடுகிறது. எனவே மதுவிலக்கு கட்டாயம் இந்தியா முழுவதும் அமல்படுத்த அகில இந்திய அளவில் நாடாளுமன்றத்திலும், அனைத்து மாநில சட்டமன்றத்திலும் சட்டமியற்ற வேண்டும்.
ஆண்பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள் 14 வயதிலேயே பருவ வளர்ச்சி பெற்று விடுகிறார்கள். தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள், வலைத்தளங்கள் வழியாக பாலுணர்வும் விரைவிலேயே தெரிய வருகிறது. எனவே 14 வயது முதல் 25 வயது வரை உள்ள அனைத்து பேர்களின் நடவடிக்கையையும் பெற்றோர்களும் அரசும் கண்காணிக்க வேண்டும்.
வருங்காலம் பிள்ளைகள் நல்ல குடிமக்களாக, ஆண்கள் நாகரீகமாக பெண்களை மதிப்பவர்களாகவும், பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகாமல் இருக்கவும் வேண்டும் என விரும்பி இதை என் ஆலோசனையாக பதிவு செய்கிறேன்.