நேதாஜி மரணம்...! சுமார் 800 கோப்புகள் இன்னும் ரகசிய அறையில்...?
நேதாஜி மரணம்...! சுமார் 800 கோப்புகள் இன்னும் ரகசிய அறையில்...?
அவருக்கு உண்மையில் என்னநடந்தது.?. என்ன நடந்திருக்கலாம்..?. இந்திய அரசு எதை ஏன்? எப்படி? மறைக்கிறது!..?. அவசியம் வாசியுங்கள் 'போராளிகளின் மரணம் மரணமாகாது 'நேதாஜியின் மரணம் குறித்த விஷயங்களை சேகரித்து வைத்திருப்பவரும், அகில இந்தியப் பார்வார்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளருமான தேவப்பிரதா பிஸ்வாஸ் சமீபத்தில் புதுச்சேரி வந்திருந்தார். அவருடன், மாநிலங்களவை உறுப்பினரான பரூண் முகர்ஜியும் இருந்தார்.
”பிரபாகரன் அறையில் நேதாஜியின் படமும் புலியின் படமும் இருக்கும்” என்றபடி ஈழம் பற்றிய நினைவுகளில் அமிழும் பிஸ்வாஸும் முகர்ஜியும் நேதாஜி பற்றிய மர்மங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள். ”நேதாஜியின் மரணம் சட்டப்படி உறுதி செய்யப்பட்டுவிட்டதா?” ”ஆகஸ்ட் 18, 1945-ல் தைவான் தலைநகர் தாய்பேய் விமான நிலையத்திலோ, அதற்கு அருகாமையிலோ நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை. எப்படியென்றால், நேதாஜி மரணம் குறித்து இந்திய அரசால் அமைக்கப்பட்ட முகர்ஜி கமிஷனிடம், அமெரிக்க உளவுத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் இதனை உறுதிபட அமெரிக்கா தெரிவித்துவிட்டது.
தைவான் நாட்டு அரசும், ”தன் நாட்டு எல்லைக்குள் அன்று அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை” என்று கூறிவிட்டது. ஜப்பான் அரசும், ”சுபாஷ் சந்திரபோஸ் என்ற பெயரிலோ இச்சிரோ உக்குடா (நேதாஜிக்கு சூட்டிய புனைபெயர்) என்ற பெயரிலோ எவரும் இறந்து சுடுகாட்டில் எரிக்கப்படவில்லை” என்று தெரிவித்துவிட்டது.
‘நேதாஜியினுடையது’ என்று ஜப்பானிய கோயில் ஒன்றில் வைக்கப்பட்ட அந்தச் சாம்பல் மற்றும் எலும்புகளை டி.என்.ஏ பரிசோதனை நடத்தவிடாமல் இந்திய அரசு தடுத்துக் குழப்பியது உலகுக்கே தெரியும். இறுதியாக, முகர்ஜி கமிஷனும் ஆகஸ்ட் 18, 1945- ல் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்று அரசுக்கு அறிக்கை அளித்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், எந்தவித காரணமும் கூறாமல், தானே நியமித்த முகர்ஜி கமிஷன் அறிக்கையை ஏற்க முடியாது என்று இந்திய அரசு நிராகரித்ததுதான்” என்கிற தேவபிரதா பிஸ்வாஸ், “நேதாஜி தொடர்பான ஏராளமான ஆவணங்களை பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஆகிய மூன்றும் சேர்ந்து அழித்து ஒழித்துவிட்டன.
இதை நீதிபதி முகர்ஜி கமிஷனே சுட்டிக்காட்டி உள்ளது என்றார். “எல்லா ஆதாரமும் அழிந்து விட்டதா? என்று கேட்டோம். இல்லை, சுமார் 800 ஃபைல்கள் ‘ரகசிய ஃபைல்கள்’ என்று முத்திரை குத்தப்பட்டு மத்திய அரசிடம் உள்ளன. எல்லா நாடுகளிலும் குறிப்பிட்ட சில ஆண்டுகள் மட்டுமே ரகசிய ஃபைல்களாக வைத்திருந்து, பின்னர் ஆய்வாளர்களுக்காக ‘பொது ஆவணமாக’ அறிவிப்பார்கள். இந்தியாவிலும் அப்படித்தான். ஆனால், இந்த 800 ஃபைல்களையும் நிரந்தரமாக ரகசிய ஃபைல்களாக இந்திய அரசு வைத்துள்ளது.
இது பகிரங்கப் படுத்தப்பட்டால் நேதாஜிக்கு நேர்ந்தது என்ன என்பதை உலகம் அறிந்து கொள்ளும்” என்கிறார். ”இதை யாரும் பார்க்க முடியாதா என்ன?” “எனக்குக் காட்டி னார்கள். ஆனால், அதைப்பற்றிப்பேசவோ, மேற்கோள் காட்டவோ கூடாது” என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டார்கள்” என்கிறார் பரூண் முகர்ஜி. ”நேதாஜி உயிருடன் இருந்தார் என நீங்கள் சொல்லி வந்தீர்கள்? அரசு இறந்து விட்டதாகத்தானே கூறி வந்தது?” என்ற கேள்விக்கு பதிலளிக்கும் பிஸ்வாஸ், ”மறைந்த பிறகு, நாட்டின் உயர் தலைவர்களை கௌரவிக்கும் பாரத ரத்னா விருதை மத்திய அரசு நேதாஜிக்கு அளித்தது.
அது பற்றி உச்ச நீதிமன்றத்தில் சர்ச்சை எழுந்தபோது, அங்கே நேதாஜி இறந்ததை நிருபிக்கமுடியவில்லை. எனவே, மத்திய அரசு பின்வாங்கிக்கொண்டது. அதுமட்டுமல்ல. கொடுத்த பாரத ரத்னாவையே திரும்பப் பெற்று ஜகா வாங்கியது. இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால், ஆகஸ்ட் 18,- 1945-ம் ஆண்டு, விமான விபத்தில் நேதாஜி கொல்லப்பட்டதாக ஜப்பானியர் உதவியுடன் கட்டுக்கதை சொல்லப்பட்டது. நேதாஜியைப் பின் தொடரும் நேச நாட்டுப் படைகளிடம் இருந்து அவரைக் காப்பாற்றவே இக்கதை புனையப்பட்டிருக்கலாம். அதேசமயம், சோவியத் யூனியனுக்குள் நேதாஜி நழுவிச் சென்றிருக்கக்கூடும்’ என்றும் சொல்லப்பட்டது.
ஆனால், ‘பைசியாபாத் நகரில் வாழ்ந்து வந்த ஒரு துறவிதான் நேதாஜி’ என்கிற கிசுகிசு கிளம்பியபோது நிலைமையே தலைகீழாக மாறியது. ‘கும்நாமி பாபா’ என்பதுதான் அந்தத் துறவியின் பெயர். அவர், மிகமிக மர்ம யோகியாக வாழ்ந்து வந்தார். திரைக்குப் பின்னிருந்தே மக்களைச் சந்தித்தார். வெளியே எங்கும் தலைகாட்ட மாட்டார். அவர் மறைந்தபோது, நேதாஜி மறைந்துவிட்டார் என்ற செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது.
இதன் காரணமாக, ‘அவருடைய உடைமைகளை சீல் வைத்து, பைசியாபாத் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்குமாறு’ உத்திரப்பிரதேச நீதிமன்றம் ஆணையிட்டது. பிறகு, டிசம்பர் 22, 2001-ல்தான் முகர்ஜி கமிஷனுக்காக அந்த சீல் உடைக்கப்பட்டது. பகவான்ஜி ஒரு வங்காளி. ஆனால், ஆங்கிலம், இந்துஸ்தானி, சமஸ்கிருதம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் அவர் புலமை பெற்றிருந்தார்.
நேதாஜி அணிவது போலவே வட்ட வடிவ மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார். தங்க வாட்சும் அணிந்திருந்தார். 1945-ல் நேதாஜி மறைந்ததாக சொல்லப்பட்ட இடத்தில் அவரது மூக்குக் கண்ணாடியோ, தங்க வாட்சோ அகப்படவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
பகவான்ஜி, பார்ப்பதற்கு நேதாஜி போலவே இருப்பார். நேதாஜி போலவே பேசுவார். அந்த வயதில், அவரது உயரமும் தோற்றமும் நேதாஜியை வெகுவாக ஒத்திருந்தது. பல் இடுக்கும், வயிற்றின் கீழே இருந்த தழும்பும்கூட ஒத்திருந்தது. நேதாஜியின் குடும்பப் புகைப்படங்கள் அந்தத் துறவி வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. நேதாஜியின் பெற்றோரின் அரிய புகைப்படங்கள் மட்டுமல்ல, அவருடைய தந்தையார் பயன்படுத்திய குடையும் அங்கிருந்தது. இந்தத் துறவியின் சீடர்களாக இந்திய தேசிய ராணுவத்தின் உளவுப்பிரிவு தலைவராக செயல்பட்ட டாக்டர் பவித்ரா மோகன் ராய், லீலா ராய், சுனில் தாஸ், திரிலோக்நாத் சக்ரவர்த்தி ஆகிய நேதாஜியின் நெருங்கிய கூட்டாளிகள் இருந்தனர்.
நேதாஜி மரணம் குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு கடந்த 2002-ம் ஆண்டு ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில், இருவருடைய எழுத்தும் நடையும் ஒரே மாதிரி இருந்ததாக குறிப்பிட்டிருந்தது. ஓவ்வொரு ஆண்டும் நேதாஜியின் பிறந்த தினமான ஜனவரி 23-ல்தான் பகவான்ஜியின் பிறந்த நாளையும் கொண்டாடுகிறார்கள். குறிப்பாகச் சொல்லவேண்டு மானால், பவித்ரா மோகன்ராய் உள்ளிட்ட நெருங்கிய கூட்டாளிகளே கொண்டாடினார்கள். 1971-ம் ஆண்டு, நேதாஜியின் மூத்த சகோதரர் சுரேஷ் போஸுக்கு நேதாஜி மரணம் குறித்து இரண்டாவதாக அமைக்கப்பட்ட கோஸ்லா கமிஷன் விடுத்த சம்மனின் ஒரிஜினல்கூட பகவான்ஜியின் உடைமைகளுடன் இருந்தது.
1985-ல் துறவியார் மறைந்தபோது, கல்கத்தாவில் இருந்த டாக்டர் பவித்ரா மோகன் ராய், ‘நான் மட்டும் வாய் திறந்தால் நாடே பற்றி எரியும்’ என்று சொல்லியிருக்கிறார். இன்றைக்கு நேதாஜி உயிருடன் இல்லை. ஆனால், நான்தான் நேதாஜி என்று பலபேர் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். எனவே, அதைப் பற்றி நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. 1945, ஆகஸ்ட் 18-ல் நேதாஜி இறக்கவில்லை என்பது மட்டும் உறுதி” என்கிறார். ”நேதாஜி ரஷ்யா சென்றதாக சொல்கிறார்களே! அந்த மர்மமும் விலகவில்லையே?” ”இதுதான் மிக முக்கியமான விஷயம். அந்த நேரத்தில் வியட்நாம் விடுதலை பெற்றிருந்தது.
வியட்நாம் அதிபர் ஹோசிமின்னுக்கும், நேதாஜிக்கும் நெருங்கிய நட்பு இருந்ததால் அவர்தான் நேதாஜியை பாதுகாத்திருக்க வேண்டும். அதுதான் உண்மையும்கூட.” என்கிறவர், நேதாஜி வரலாறு மட்டுமல்ல. இந்திய விடுதலைக்காக போராடிய இந்திய தேசிய இராணுவத்தின் வீரம் செறிந்த வரலாற்றைக்கூட இந்திய அரசு வெளியிடவில்லை. சுதந்திரப்போரின் உண்மை வரலாற்றை வெளியிட, இந்திய அரசு ஏன் மறுத்து வருகிறது என்பது புரியவில்லை. நேரு பிரதமராக இருந்தபோது, இந்திய சுதந்திர வரலாற்றை எழுத ‘இராதா வினோத்பால்’ என்ற அறிஞரை கேட்டுக்கொண்டது. அவரும் வரலாற்றின் கையெழுத்துப்படியை நேரு அரசிடம் ஒப்படைத்தார். அதுவும் புத்தகமாகி வெளியே வரவில்லை. அப்படி வந்தால், பல உண்மைகள் வெளிப்படும்” அழுத்தமாகச் சொல்கிறார் தேவப்பிரதா பிஸ்வாஸ்.
யார் யாரெல்லாம் இந்த உண்மைகளை கண்டுபிடித்து உலகத்திற்கு சொல்லப் போகிறார்கள்...அல்லது இந்திய மக்களுக்காவது சொல்லுவார்கள் என்று நம்புவோம்...?
சங்கிலிக்கருப்பு