அமெரிக்கர்களும் ....விடுதலைப் புலிகளும்...! ஓர் ஒற்றுமை...?!

அமெரிக்கர்களும் ....விடுதலைப் புலிகளும்...! ஓர் ஒற்றுமை...?!

பூமிப்பரப்பில் காணப்படும் அமெரிக்கப் போர் வீரர்களின் இடுநிலங்கள்..!

உலக நாடுகள் பல வற்றில் காணப்படுகிற போரில் உயிர் நீத்த அமெரிக்கப் போர் வீரர்களுக்கான இடு நிலங்களின் எண்ணிக்கை 24 என்று மதிப்பிடப்படுகிறது. இவர்களிற் பெரும் பாலானோர் முதலாம் இரண்டாம் உலகப் போர்களில் உயிரிழந்தவர்களாவர். மிகப் பெரும் எண்ணிக்கையிலான அமெரிக்கப் போர் வீரர்களின் இடுநிலங்கள் பிரான்சில் காணப்படுகின்றன. அவை பதினொன்றிலும் கூடுதலாக இருக்கின்றன.

“மனித மேன்மையும் நீதியும் நிலை பெறுவதற்காகவும் உலகம் சுதந்திரத்தை அனுபவித்து அமைதியைப் பெறுவதற்காகவும் இவர்கள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டார்கள், எல்லாவற்றையும் கொடுத்தார்கள்” (These endured all and gave all, that Honour and Justice might prevail and that the world might enjoy Freedom and inherit Peace) என்று இவர்கள் பற்றிய மகுட வாசகம் குறிப்பிடுகிறது.

உலகளாவிய அமெரிக்கப் போர்வீரர்களின் இடுநிலங்களும் அவற்றின் சிறப்பான பாரமரிப்பும் முதலாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா வல்லரசாகவும் போர்களின் வெற்றி தோல்வியைத் தீர்மானீக்கும் இராணுவ சக்தியாகவும் இடம்பெறுவதை எடுத்துக் காட்டுகின்றன.

அமெரிக்காவின் இராணுவவலு அதனுடைய மக்கள் தொகை, பொருளாதார பலம், படைக்கலத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இருந்து பிறந்தது. அமெரிக்கா சாயும் பக்கம் இரு உலகப் போர்களிலும் நேச நாடுகளின் வெற்றியை உறுதி செய்தது. அதற்காக அமெரிக்கர்கள் கொடுத்த உயிர் விலையை இந்த இடுநிலங்கள் காலம் காலமாக உணர்த்துகின்றன.

சர்வதேச சங்கம் (League of Nations) ஐக்கிய நாடுகள் சபை (UNO) என்பன அமெரிக்காவின் தலைமையில் உருவாக்கப்பட்டன. அந்தத் தலைமை இராணுவ வெற்றி மூலம் உறுதி செய்யப்பட்டது. சர்வதேச சங்கத்தை உருவாக்குவதற்கு உழைத்தவர் அமெரிக்க அதிபர் வூட்றோ வில்சன் (Woodrow Wilson) ஆவார்.

ஆனால் உள்நாட்டு அரசியல் காரணமாக சர்வதேச சங்கத்தில் அமெரிக்கா உறுப்பு நாடாக இணையாமல் போய்விட்டது. இந்த முதலாவது உலக அமைப்பு தோல்வி அடைவதற்கு இது முக்கிய காரணமாக அமைந்தது. ஐநா சபையை உருவாக்குவதற்கு உழைத்த அமெரிக்க அதிபர் பிறாங்கலின் டெலானோ ரூஸ்வெல்ற் (Franklin Delano Roosvelt) அமெரிக்காவை ஐநா உறுப்பு நாடாக இணைப்பதில் வெற்றி கண்டார். அது ஐநாவை வலுப்படுத்தியது.

உலக விவகாரங்களில் அமெரிக்க அரசின் தீவிர ஈடுபாட்டின் ஒரு முக்கிய சின்னமாக அமெரிக்கப் போர் வீரர்களின் இடுநிலங்கள் இடம்பெறுகின்றன. பெல்ஜியம், இங்கிலாந்து, பனாமா, இத்தாலி, லுக்செம்பூர்க், பிலிப்பீன்ஸ், மெக்சிக்கோ, ஜேர்மனி, பிரான்சு, நெதர்லாந்து, ஜப்பான் வட ஆபிரிக்காவின் டூனிசியா, அமெரிக்கா ஆகியவற்றில் இந்த இடுநிலங்கள் (US Military Cemetaries) அமைக்கப்பட்டுள்ளன.

இடுநிலப் பாரமரிப்பில் அமெரிக்கா நிகரற்று விளங்குகிறது. தூர இடங்களில் முதல் தேடலுக்குக் கிடைக்காத உடல்களையும் எச்சங்களையும் தேடிப் பெறுவதற்கு அமெரிக்க அரசு கடும் பிரயத்தனம் எடுக்கிறது. இது அந்த நாட்டின் தேசியக் கொள்கையாகவும் ஒருவராவது விடுபட்டுப் போகக் கூடாது என்ற உன்னத விதியாகவும் அமைகிறது.

பிரான்சில் நோர் மான்டித் தரையேற்றத்தில் (Normandy invasion June 1944) உயிர்நீத்த வீரர்களுக்கு பிரிட்டானியில் இடுநிலம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின் திருப்புமுனைப் படை நடவடிக்கையான இதில் ஏராளம் அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

இவர்களில் 4410 பேரின் உடல்கள் பிறிட்டானியில் (Brittany, France) நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. மிகக் கூடுதலான உடல்கள் 113.5 ஏக்கர் நிலத்தில் 10,489 இராணுவத்தினர் மீளாத் துயில் கொள்கின்றனர். சின்னஞ் சிறிய நாடு லுக்செம்பூர்க்கில் 50,5 ஏக்கர் நிலம் அமெரிக்க வீரர்களுக்காக ஒதுக்கப் பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கப் படைகளை ஜேர்மன் தலைநகர் பேர்ளின் வரை நடத்திச் சென்ற ஜெனரல் பற்றன் (Gen Patton) மிகவும் மர்மமான முறையில் கொல்லப்பட்டார் என்பது வரலாறு. அமெரிக்க ஜெனரல்களில் மெக் ஆர்தருக்கு (Mac Arthur) அடுத்தபடியாக மிகவும் கவர்ச்சியான கதாநாயக அஸ்தஸ்துப் பெற்றவர் ஜெனரல் பற்றன்.

பெல்ஜியம் நாட்டிலும் மிகக் கூடுதலான முதலாம் இரண்டாம் உலகப் போர்களில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டாம் உலகப் போரில் சாவடைந்த 7,992 வீரர்கள் ஹென்றி சப்பல் (Henri Chapelle) இடுநிலத்தில் புதைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க இடுநிலங்களின் அமைப்பு வித்தியாசமானது. சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்கு மேல் பரந்த புல்வெளி மாத்திரம் பச்சைப் பசேல் என்று காணப்படுகிறது. சடலத்தின் தலைப் பகுதியில் அடையாளமிடும் சிலுவை நாட்டப்படுகிறது. இதை ஹெட்ஸ்ரோன் மார்க்கர் (Headstone Marker) என்று அழைக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் துயிலும் இல்லங்களில் மாவீரர்கள் விதைக்கப்பட்ட குழிக்கு மேலால் கல், சீமெந்து கொண்ட ஒடுங்கலான நீள் சதுரக் அமைப்பு உருவாக்கப்பட்டு மாவீரரின் பெயர், பிறப்பு, இறப்பு திகதிகள், பதவி என்பன பொறிக்கப்பட்ட பலகை வைக்கப்படுகிறது.

உடல் கிடைக்கப் பெறாத புலி வீரர்களுக்குத் துயிலும் இல்லங்களில் நினைவுக் கற்கள் நிறுத்தப்படுகின்றன. அதில் அவர்களுடைய பெயர், பிறப்பு,இறப்புத் திகதிகள், பதவி என்பன பொறிக்கப்படுகின்றன. கரும்புலிகளின் உடல் கிடைப்பதில்லை என்ற படியால் அவர்களுக்கும் இப்படியான நடு கற்கள் துயிலும் இல்லத்தில் நிறுத்தப்படுகின்றன.

தமிழர்களுடைய நடுகல் நிறுத்தும் பாரம்பரியம் மிகவும் தொன்மையானது. கி.மு 2ம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் தனிப்பெரும் வீரர்களுக்கு நடுகல் நாட்டும் வழக்கம் இருந்துள்ளது. காலப்போக்கில் அவை வழிபாட்டு இடங்களாக வளர்ச்சி பெற்றன.

ஆரம்ப காலத்தில் புலி மாவீரர்களின் வித்துடல்களை எரியூட்டும் வழக்கம் இருந்தது. ஆதிகாலத் தமிழர்களின் வழக்கப்படி வித்துடல்களை மண்ணில் புதைக்கும் வழக்கத்தை பின்பு புலிகள் மேற்கொண்டனர். ஒரு சில காலம் எரியூட்டுதல், புதைத்தல் ஆகிய இரண்டும் சமகாலத்தில் நடைபெற்றன. பிற்பாடு துயிலும் இல்லத்தில் விதைக்கும் வழக்கம் மாத்திரம் நடை முறைக்கு வந்தது.

1982ம் ஆண்டு நவம்பர் 27ம் நாள் தொடக்கம் 2008ம் ஆண்டு யூன் 31ம் நாள் வரை வடக்கு கிழக்கில் புலி மாவீரர்களின் 18 துயிலும் இல்லங்கள் இருந்தன. இவற்றில் 16,953 ஆண்களும் 4,695 பெண்களுமாக 21,648 மாவீரர்கள் துயில் கொண்டனர். நான்காம் ஈழப் போர் தீவிரம் அடைந்த பிறகு வீரச்சாவடைந்தோர் எண்ணிக்கையும் அவர்களுடைய பால் விவரமும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் மாவீரரின் எண்ணிக்கை இரு மடங்கு ஆகியதை உறுதி செய்ய முடியும்.

கடும் போர்ச் சூழலில் புலிகளால் வித்துடல்களை துயிலும் இல்லங்களில் விதைக்க முடியவில்லை. களத்திற்கு அருகாமையில் அடையாளம் இடப்பட்ட இடத்தில் பாதுகாப்பாக விதைத்தனர். அமைதி ஏற்பட்ட பிறகு அவை தோண்டி எடுக்கப்பட்டு வைபரீதியாக துயிலும் இல்லங்களில் விதைக்கப்பட்டன. இந்த நடைமுறை இந்திய இராணுவத்திற்கு எதிரான போரின் போது பின்பற்றப்பட்டது.

நான்காம் ஈழப் போரின் இறுதிப் பகுதியில் ஆங்காங்கே விதைக்கப்பட்ட வித்துடல்களை துயிலும் இல்லங்களுக்குக் கொண்டுவரும் அவகாசம் கிடைக்கவில்லை. அது மாத்திரமல்ல எதிரியானவன் மாவீரர் துயிலும் இல்லங்களைப் புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கியதோடு சடலங்களையும் அநாகரிகமான முறையில் புறந்தள்ளி விட்டான்.

நவீன போரியல் வரலாற்றில் இந்தக் காட்டுமிராண்டிச் செயலுக்கு நிகரான இன்னொரு சம்பவம் இதுவரை நடைபெறவில்லை. எதிரியானாலும் அவனுடைய உயிரற்ற உடலுக்கு மரியாதை செய்வது போரியல் மரபு. பெல்ஜியம் நாட்டின் மீது படையெடுத்த ஜேர்மன் இராணுவத்தினரின் கல்லறைகள் பெல்ஜியத்தின் அரசால் பாதுகாக்கப்படுகின்றன. இன்று வரை அவை நல்ல நிலையில் உள்ளன.

புலிகளின் துயிலும் இல்லங்கள் சிங்கள இராணுவத்தால் அழிக்கப்பட்ட போது நாகரிகம் பற்றிப் பேசும் உலக நாடுகள் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. போர் வீரர்களின் சடலங்களுக்கு அதியுயர் மதிப்பளிக்கும் அமெரிக்கா கூட இந்த விடயத்தில் அக்கறை காட்டவில்லை.

பெரும் நாகரிகப் பின்புலத்தைக் கொண்ட சீனா சிங்கள அரசு அழித்த கோப்பாய் துயிலும் இல்லத்தில் ஒரு பாரிய இராணுவத் தலைமையகத்தை கட்டிக் கொடுத்திருக்கிறது. அமெரிக்காவின் அசமந்தப் போக்கிலும் பார்க்க இது மிகவும் கூடுதலான காட்டுமிராண்டித்தனம்.

அமெரிக்காவின் தேசிய போர் வீரர் நினைவாலயம் (National Shrine) வேர்ஜீனியா மாநிலத்தின் ஆர்லிங்ரனில் (Arlington National Cemetary, Virginia) காணப்படுகிறது. இதில் 285,000 சடலங்கள் புதைக்கப் பட்டுள்ளன. அமெரிக்க உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து மே 1864ம் ஆண்டு இது திறக்கப்பட்டது.

அன்று தொட்டு இன்று வரை நல்லடக்கம் நடைபெறுகிறது. அமெரிக்கா ஈடுபட்ட உள்நாட்டு வெளிநாட்டுப் போர்கள் அனைத்தையும் சேர்ந்த போர் வீரர்கள் இங்கு புதைக்கப்படுகின்றனர். இதில் மத, நிற, பால், இன வேறுபாடுகள் பார்க்கப்படுவதில்லை. போரில் இறந்தவர்கள் தொடக்கம் முதுமையில் இறந்த வீரர்களும் இங்கு துயில் கொள்கின்றனர்.

நாளொன்றுக்குச் சராசரி 25 சடலங்கள் ஆர்லிங்ரனில் அடக்கம் செய்யப்படுகின்றன. ஆர்லிங்ரன் தேசிய இடுநிலத்தில் புதைக்கப்படுவதை அமெரிக்கர்கள் பெரும் பேறாக எண்ணுகிறார்கள். இரட்டைக் கோபுரத் தாக்குதலின் போது இராணுவத் தலைமையகம் பென்ரகன் (Pentagon) மீதும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 184பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 64பேர் ஆர்லிங்ரனில் புதைக்கப் பட்டுள்ளனர். முன்னாள் அதிபர் கெனடியும் இங்கு தான் அடக்கம் செய்யப் பட்டுள்ளார். அவருடைய கல்லறையில் அணையாத் தீபம் (Eternal Flame) எரிந்து கொண்டிருக்கிறது.

ஆர்லிங்ரன் தேசிய இடுநிலத்திற்கு வருடமொன்றுக்கு 4.5 மில்லியன் மக்கள் பார்வையாளர்களாகவும் நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களாகவும் வருகின்றனர். பார்வையாளர்களிற் பலர் கெனடியின் கல்லறையையும் “யார் என்று அறியப்படாத போர் வீரனின்” (The Tomb of the Unknown Soldier) நினைவாலயத்தையும் பார்வையிட வருகின்றனர்.

இந்த நினைவாலயத்தின் பின்னால் இருக்கும் கருத்து பின்வருமாறு. போhக்; களத்தில் ஊர் பெயர் அடையாளம் தெரியாத ஒரு வீரனின் சடலத்தைத் தெரிவு செய்து நினைவாலயம் அமைக்கிறார்கள். அவன் யார் என்பது “ இறைவனுக்கு மாத்திரம் தெரியும்” (Known But to God) என்ற பின்னணிக் கருத்து முக்கியமானது.

இவனைக் கவுரவிக்கும் போது எல்லாப் போர் வீரர்களும் கவுரவிக்கப்படுகிறார்கள். ஆர்லிங்ரனின் நினைவாலயத்திற்கு 24 மணி நேரமும் அமெரிக்க இராணுவத்தின் மூன்றாவது காலாட் படை வீரர்களால் கவுரவப் பாதுகாப்பு (Honour Guard) வழங்கப்படுகிறது. இந்த நினைவாலயத்தில் முதலாம் இரண்டாம் உலகப் போர்கள் கோரியப் போர் ஆகியவற்றை சேர்ந்த மூன்று சடலங்கள் அடக்கம் செய்யப் பட்டுள்ளன.

யார் என்று அறியாத போர் வீரனுக்கு கல்லறை அமைத்து அதியுயர் மரியாதை வழங்கும் மரபு முதலாம் உலகப் போருக்குப் பிறகு இங்கிலாந்தில் உருவானது. போர் களத்தில் இருந்து இங்கிலாந்திற்குக் கொண்டு வரப்பட்ட சடலத்தில் யார் என்று தெரியாது (Not Known) என்று குறிப்பு அடங்கிய கடதாசி இணைக்கப் பட்டிருந்தது.

இதில் இருந்து இந்த மரபு தோன்றியது. இங்கிலாந்தும் பிரான்சும் சமகாலத்தில் இந்த மரபைத் தோற்றுவித்தன. இன்று பெரும்பாலான உலக நாடுகளில் யார் என்று அறியப்படாத போர் வீரனுக்கு நினைவாலயம் எழுப்பும் மரபும் அதற்கு மரியாதை செய்யும் மரபும் காணப்படுகிறது.

1975ம் ஆண்டு முடிந்த வியற்னாம் போரில் 58,220 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களுக்கான நினைவாலயம் மிகவும் வித்தியாசமானது. இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடித்த பருமனனா கருங்கல் பலகைகளில் இந்த வீரர்களின் பெயரும் பதவியும் பிற விபரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த பலகைகள் செங்குத்தாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தியா வாயில் (India Gate) என்ற பிரிட்டிசார் 1931ம் ஆண்டு அமைத்த கட்டிடம் இந்தியாவின் தேசியச் சின்னமாக இடம்பெறுகிறது. அது தலைநகர் புது டில்லியின் மைய்யப் பகுதியில் காணப்படுகிறது. அது பிரிட்டிசாரால் அனைத்து இந்தியா போர் நினைவாலயம் (All India War Memorial) என்று அழைக்கப்பட்டது.

முதலாம் உலகப் போரிலும் மூன்றாவது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போரிலும் கொல்லப்பட்ட 90,000 இந்திய இராணுவத்தின் யார் என்று அறியப்படாத போர் வீரனின் நினைவாலயமாக அது இடம்பெறுகிறது.

1971ம் ஆண்டு தொடக்கம் இந்தியா வாயில் வளைவின் கீழ் அணையாத தீபம் அமர் ஜோதி என்ற பெயருடன் உயிரிழந்த இந்திய வீரர்களுக்காக எரிந்து கொண்டிருக்கிறது. பிரதமர் இந்திரா காந்தி இந்த நினைவாயத்தில் 1972ம் ஆண்டு சனவரி 26ம் நாள் நாட்டின் சார்பில் வணக்கம் செலுத்தினார்.

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (27-Jan-13, 5:57 pm)
பார்வை : 253

சிறந்த கட்டுரைகள்

மேலே