காலம் நிகழ்வுகளின் நகர்வு ( KGமாஸ்டர் )
காலம் தனக்கென்று தனித்துவமான இயக்கத்தில் ஈடுபட்டுகொண்டிருக்கிறது. இந்த நகர்வு என்பது நிகழ்காலத்திலேயே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டிருக்கும் நிகழ்காலத்தினால் பின்தள்ளப்படுபவை இறந்தகால நிகழ்வுகளாகிவிடுகின்றன. எனவே, உண்மையில் எமது வாழ் காலம் என்பது நிகழ் காலத்திலும் அந்த நிகழ் காலத்தைப் பின்தள்ளுவதிலுமே அமைந்துவிடுகின்றது என்பது தான் உண்மை. இந்தக் காலப்பகுதியே நிகழ்காலத்தில் இடம்பெறுகின்ற பிறப்புக்கும் நிகழ் காலத்தில் இடம்பெறுகின்ற இறப்புக்கும் இடையிலான காலப்பகுதியாகும். அதாவது நமது வாழ்வியல் நிகழ்வுகள் அனைத்தும் நிகழ்காலத்திலேயே இடம்பெறுவதால்தான் 'நிகழ்வு' என்கிறோம்.
எனவே காலம் பற்றிய தெளிவான பார்வை எப்படி அமையவேண்டும் என்பதை சிறிது விரிவாக ஆய்வு செய்வது அடிப்படைத் தேவையாகின்றது. நமது வாழ்வின் ஆரம்பமும் முடிவும் எமது கையிலில்லை என்பதை நாம் எல்லோரும் அறிந்து வைத்துள்ளோம். நமது வாழ்க்கை காலாவதியாகும் நாள் இதுதான் எனக் குறிப்பிடப்பட்ட ஒன்றாகவும் அமைவதில்லை. ஆனால் வாழ்வின் எல்லையை நன்றாக நெருங்கிவிட்டோம் என்ற நிலைக்கு வந்தவுடன் நாம் கடந்துவந்த பாதையைப் பார்ப்போமாயின் எமக்குக் கிடைப்பதெல்லாம் முற்றுமுழுதான ஏமாற்றமே. இத்தனை ஆண்டுகள் என்ன செய்தோம் என்ற வினாவுக்கு விடை தெரியாமல் தவிக்கின்றோம். அதுமட்டுமல்ல இனியிருக்கும் காலம் வரையாவது (ஏதோ மிகுதியாக இருக்கும் காலம் இவ்வளவு எனத் தெரிந்தவர்கள் போல்) ஏதாவது எதிர்காலத்திற்காகச் செய்யவேண்டும் என இன்னுமொரு தவறைச் செய்துவிடுகின்றோம். காலம் எமக்காகக் காத்திருப்பதில்லை. நாமும் காலத்திற்காகக் காத்திருக்க முடியாது. காத்துக் காத்துக் கை தவறிப்போன காலமும் பயனற்றதாகிவிட்டது. அதுமட்டுமன்றி நாம் காலாவதியாகும் திகதியும் நம்மிடம் இல்லை. அதனால் எமக்கு உள்ள ஒரேயொரு வாய்ப்பு நிகழ்காலம் ஒன்றேதான்.
எனவே நிகழ்காலத்தில் வாழவேண்டும். நிகழ்காலத்தில் வாழமுடியாத எவரும் வாழ்வதில்லை. நீண்ட காலம் உயிர்வாழ்வோம் என்ற எதிர்பார்ப்பின் மூலம் எத்தனையோ விடயங்களைப் பின்தள்ளிப்போட்டுவிட்டு இறுதியில் ஏமார்ந்து போனவர்கள் பல கோடி. இவர்கள் எதிர்காலம் என்ற கற்பனை உலகிற்கு நிகழ்காலத்தைப் பலி கொடுத்தவர்கள். நமது வாழ்வின் குறிக்கோளை அடைவதற்கு மிகவும் உத்தரவாதமான காலமாக அமைவது நிகழ் காலம் மட்டுமே. ஏனெனில் நிகழ்வுகளின் நகர்வு நிகழ்காலத்தில் மட்டுமே.