மெழுகுவர்த்தி தரும் வாழ்க்கைத் தகவல்' (KG மாஸ்டர் )

ஒரு மெழுகுவர்த்தியின் தன்மையைப் பார்ப்போம். மெழுகும் திரியும் அதன் சேர்க்கை. இவையிரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. மெழுகுவர்த்தியில் மெழுகுக்குள் திரி செலுத்தப்பட்டிருக்கும். மெழுகு, திரியை மிக இறுக்கமாகப் பற்றியிருக்கும். தானாக அது ஒளியைக் கொடுக்காது. ஒருவர் அதன் தலையில் தீ வைக்க வேண்டும். தீ வைத்ததும் திரியும் அழிந்து மெழுகும் அழிந்து வெளிச்சத்தைத் தீ வைத்தவருக்குக் கொடுக்கும். தன்னை இழந்து வெளிச்சத்தைக் கொடுக்கிறது என்று அதைப் பயன்படுத்துபவர் பெருமை பேசிக் கொள்வார். இப்போது இந்த விடயத்தை வாழ்க்கைக்குள் கொண்டு வருவோம். சிறு வயதில் இருந்தே மனித சமூகம் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், தத்துவங்களையும், சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும் திரியாக்கி எமக்குள் செலுத்திவிடும். திரியை வைத்தவர்கள் தலையில் தீயை வைத்துவிட்டு சுகத்தை அனுபவிப்பார்கள். நாம் சூடு தாங்காமல் உருகி உருகி வாழ்க்கையை அழித்துக் கொண்டிருப்போம். சுகத்தை அனுபவிப்பவர்கள் தொடர்ந்து அதை அநுபவிப்பதற்காக 'பார்த்தீர்களா இந்த மெழுவர்த்தியை, தன்னை அழித்து பிறருக்கு வெளிச்சம் கொடுக்கிறது' என்று பெருமைப் படுத்துவது போல் கூறிக் கொண்டிருப்பார்கள். எமது வாழ்க்கை முடிவுக்கு வரப் போகின்றது என்றதும் அந்த எஞ்சியதால் தலைக்கு மேலே திரியுடன் திரிபவர்களது தலையில் தீ வைத்து கொண்டிருப்பார்கள். பாவம் இந்த மெழுவர்த்தி மனிதர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதைப் புரியாதவர்கள். நாம் வாழ்வதன் மூலம் தான் மற்றவர்களையும் வாழவைக்க முடியும் என்ற அடிப்படையை உணராதவர்கள். எமது வாழ்க்கைக்கு மெழுகுவர்த்தி தரும் தகவல் இது தான். 'ஏ மனிதா! நான் ஒரு ஜடம். திரியை வைத்தவர்கள் தீயை வைப்பார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஒருவேளை உனக்கும் ஆரம்பத்தில் அது தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் தீயை வைத்து சூடு வாங்கும் போதாவது புரிந்து கொள்ளலாமே? நீ ஜடம் அல்லவே? தலையில் தீ வைத்தவருக்கு நான் வெளிச்சத்தைக் கொடுக்கிறேன் என்பதை விட உனது வாழ்க்கையில் ஒரு திருப்பத்தைக் கொடுக்கிறேன் என்பது தான் உண்மை'. - நன்றியுடன் KG

எழுதியவர் : கவிஞர் இனியவன் (29-Jan-13, 5:50 am)
பார்வை : 241

மேலே