இடைவெளியில் திரியும் கவிதை...

என்னை மாதிரிதான் நீயும்.

எனக்கு மனிதன் என்று ...
யார் பெயர் வைத்தார்கள் என்பது
தெரியாதது போலவே...
உனக்கு யார்...
பாம்பு, பல்லி, கரப்பான் ...என்றெல்லாம்
பெயர் வைத்தார்கள்
எனத் தெரியவில்லை.

என் பெயருக்கும்...
உன் பெயருக்கும்
காரணங்கள் நமக்குத் தெரியாதது போலவே...

தெரியவில்லை நமக்கு
நாம் விஷமங்கள் நிறைந்த உலகில்
வாழ்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களும்.
**********************************************************************
கிராமங்களில்தான்
இன்னமும் இருக்கிறது திசைகள்.

முகவரிகள் விசாரிக்கப்படும் போது...
கிராமங்களில் அவை
திசைகளால் அடையாளப்படுத்தப் படுகின்றன.

இங்கு...
நான் வாழும் நகரங்களில்
அடுக்குமாடிக் குடியிருப்புகளிலோ....

திசைகள் தெரிவதில்லை.
நீங்கள் அறிந்திராத பக்கத்து முகம் போல.

கஷ்டமாகத்தான் இருக்கிறது...
திசைகளைத் தொலைத்த இடத்தில்...
வாழ்ந்து கழிப்பது.
********************************************************************
எனது கவிதைகள்
என்னைச் சொல்வதாய்
எப்போதும் நினைப்பு எனக்கு.

வாழ்க்கையைத் தராத கவிதைகளோடு
எப்படி வாழ்வது ...
என்கிற அங்கலாய்ப்பு உனக்கு.

கனவுக்கும் வாழ்க்கைக்கும்
இடையில் சேராத கைகளுடன்
திரியும் நம்மை....

ஒரு கேவலப் பார்வையாய் பார்க்கிறது...
கண் சாய்த்து...கிளையிலாடும்
பறவை ஒன்று.
*********************************************************************

எழுதியவர் : rameshalam (2-Feb-13, 9:33 pm)
பார்வை : 124

மேலே