எண்ணங்களை எழுதுகிறேன் - 1

ஏண்டா தீபாவளிக்கு ஊருக்குப்போகவில்லை என்ற கேள்வி? சென்னை கோவை மதுரை எல்லா திசையிலும் ஒலிக்கின்றது..

தியாகராய நகர், புரசை வாக்கம்...
காந்திபுரம் ஒப்பணகார வீதி..
வடக்கு வாசல்.. கிழக்கு வாசல்.
மேல மாட வீதி ரதவீதி என....

ஒவ்வொரு வருடமும்
வெவ்வேறு ஊர்களின் கூட்டங்களில்
நெருக்கியடிக்கப்படும் மூங்கில் பைகளுக்கு மத்தியில் என் தீபாவளியை தொலைத்துப்போயிருக்கிறேன்....

சின்ன வயசுன்னா இன்னும் தீபாவளிக்கு நான்கு நாள் தான் இருக்கு.. மூன்று நாள் தான் இருக்கு என ஆர்ப்பரிக்கும் மனசு... இப்பல்லாம் கொஞ்சம் பதறுது என்றாள் அக்கா... பாவம் அவளை குடும்பஸ்திரி ஆக்கிவிட்டது காலம்...

எல்லாரும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துச்சொல்கிறார்கள். அட்வான்ஸ் கேட்டால் முறைக்கிறார் முதலாளி. வேதனையை மென்று துப்புகிறான் நண்பன்...!

ஏழெட்டு வருடம் முன்னால்...

வந்தது வந்துடடோம் அப்படி அந்த மைக்ரோவேவ் ஓவன் விலையாவது கேட்டுப்போவோமே?,
என்றொரு பெண்மணி ஜனக்கூட்டத்தில் கணவனிடம் கேட்க...

வீட்டுக்கு போகும் போது நடந்து போகனும்ன்னு ஆசை இருந்தா சொல்லு, அந்த கணவன் டைமிங்காக கவுண்டர் கொடுத்தது இன்றைக்கும் சிரிப்பை கொடுக்கும்..

இன்றைக்கு என் மனைவி எல்.சீ.டி விலை கேட்க்கப்போவோமா என்கையில்.. சிரிப்பு வருவதில்லை.

பட்சணங்கள் செய்வதில் நம்மூர் மக்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. இங்கெல்லாருக்கும் அடையார் ஆனந்த பவனும் , கிருஷ்ணா ஸ்வீட்டும் தான் விதி என்றாகிவிட்டது.

இங்கென்றால் இங்கு தான் .. எந்த ஊரென்றெல்லாம் அடையாளப்படுத்த விரும்பவில்லை. எல்லா ஊரின் காற்றையும் தண்ணீரையும் குடித்திருக்கிறேன். என்பதால்.

தீபாவளி பட்சணங்கள் என்றதும் நாவின் இரு ஓரமும் ஈரம் சுரக்கிறது.

அம்மா சுட்ட தீபாவளி முறுக்குக்கு அத்தனை ருசி சின்னச் சின்னதாய் எள் முனையை சுமந்து அது ஒரு தனி வாசனையைக் கொடுக்கும் .

சில வாரம் காற்றடைக்காத டப்பாவுக்குள் வைத்தாலும் நமுத்துப் போகும் போது மறு வாரம் கடுங்காபியில் ஒடித்து மிதக்கவிட்டு குடிக்க கொடுப்பாள் ஆச்சி! எங்க ஊரு பக்கமெல்லாம் பாட்டியெல்லாம் கிடையாது ஆச்சி தான்.

அதிரசம் ஆஹா! அதை மறந்து போனேனே?
பனைவெல்லப் பாகில் உருகும் மாவை உள்ளங்கையில் தட்டி கொதிக்கும் எண்ணெய்க்குள் நீச்சலடிக்க விட்டு பக்குவமான நிறத்தில் சுவையாக பொறித்தெடுப்பதில் சித்தி சாமர்த்தியக்காரி...

நான் மட்டும் வித்யாசமாய் ஓமப்பொடி கேட்பேன்,. செய்யும் போது கிட்டவே நின்றால் சூடு வைப்பேன் என்று அம்மா மிரட்டினால் தூரமாய் நின்று நாவில் கண்ணீர் வடிப்பேன். மொத்தமும் எனக்குத்தான்.

விகடன் தீபாவளி மலரை தீபாவளி அன்றே படித்துவிடவேண்டும் என்பதில் மூழ்கிக் கிடக்கும்
சின்ன அத்தையின் உச்சந்தலையில் வெந்தயம், சின்னவெங்காயம், ஓமம், சீரகம் கருவேப்பிலை பொறித்த தீபாவளி எண்ணை வழிந்தோடும். ..

நானும் கடந்த மூன்று வருஷங்களாக தீபாவளி நாட்களின் நினைவுகளை கவிதையாக எழுத ஆரம்பித்து அது கட்டுரை அளவுக்கு நீண்டு. பின் வரலாற்று சிறுகதை போல சிறகு முளைத்து எங்கேயோ போய்தான் நிற்கிறது. நானென்ன செய்ய...

சரி வெடி கதைக்கு வருவோம்..

ஓலை வெடி என்று ஒன்றுண்டு தெரியுமா. தெரிந்திருக்கும் முக்கோண சாயலில் பனைஓலைக்குள் வைத்த வெடியை பகட்டாய் பற்றவைத்து தூக்கி வீசும் தோரணையும்...

கல்குண்டு செய்து விட்டெறிந்து வெடிக்க வைத்தே கிளவி வீட்டு மண்சுவரைச் சாய்த்து போட்டதும்,
காலிச்சிரட்டைகளுக்குள்ளே வெடிகளை வைத்து ஹரி. படம் போல வானத்துக்கு பறக்கவிடுவதும் கல்வெட்டுச்சாதனைகள்.

புத்தாடை எடுத்துக்கொடுத்து பெரியமனிதன் தோரணையில் அண்ணன் எப்டிடா இருக்கு என்பான்...
என்னடா கலர் இது கன்றாவி போ,.. எங்கடா எடுத்த எனக் கடுப்படிக்கும் போது அடிக்க வருவான்..

உங்களுக்கெல்லாம் தெரியாது சட்டை பாக்கெட்டுக்குள்
படத்துக்குப் போக முன்னூறு ரூபாயைச் சொறுகி வைத்து இருப்பான்.

நிறைய ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. என சினிமாத்தனமாக சில வருடங்களுக்குப்பின்
எனச் சொல்லாவிட்டாலும் நிச்சயமாய் உருண்டுதான்விட்டன.!

முகநூல் காலங்கள் என்ற இந்த காலக்கட்டம் நிறைய முகங்களையும் நிறைய வாழ்த்துக்களையும் . நிறைய குரல்களையும் கூட்டுசேர்த்து வைத்திருக்கிறது...

ஊருக்குப்போகவில்லை என்பது சில ஆண்டுகளாக எனக்கு நானே போட்டிருக்கும் வேலி. அதை முறிக்க சில நிமிடங்கள் போதும். முறித்து ஒன்றும் ஆகப்போவதில்லை.

இராமர் வருவாரென்று எந்த பரதனும் இல்லை... இராஜ்ஜியம் வருமென்று எந்த ராமனும் இல்லை.

நரகாசுரன் இறந்தே விட்டானாம்.. ஆண்டாண்டுகளாக இறக்கும் அவனுக்கு ஏது அழிவு. ரா-ஒன் படத்தில் கேட்ட வசனம் இது...


அலைப்பேசியில் அயல் நாட்டு எண் .
ஈழத்து சிநேகிதி.. இடம்பெயர்ந்த தேசத்தில் இருந்து.

“பண்டிகைக்கார மக்களுக்கு வாழ்த்துச் சொல்லிடுங்கோ! எப்படி இருக்கீயள் அண்ணா, அங்க நாட்டில் மக்கள் எப்படி இருக்காகள், அண்ணி குழந்தையள் எல்லாம் சுகம் தானே! ”

பாவம் அவள் பேசி முடிக்கும் வரை யாரும் சப்தமான வெடிகள் போட்டுவிடக்கூடாதே பதறுது மனசு. யுத்தச் சத்தமென அவள் பயந்து போவாள்...

- கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன் . (4-Feb-13, 3:40 am)
பார்வை : 322

மேலே