நின்னையே கதி என்று நினைக்கறேனடா....!

வயல்களையும் விட்டு
வாய்க்கால்களையும் விட்டு விட்டு - உன்
வற்றாத அன்பைப் பார்த்து வந்தேன்!

கருவேல மரங்களை விட்டு
கரிசல் காடுகளையும் விட்டு விட்டு - உன்
கலங்கமில்லாத கருணையைப் பார்த்து வந்தேன்!

பருத்திக் காடுகளையும் விட்டு
பாவல் பந்தல்களையும் விட்டு விட்டு - உன்
பொய்யில்லாத புன்னகையைப் பார்த்து வந்தேன்!

தென்னந்தோப்புகளையும் விட்டு
மாந்தோப்புகளையும் விட்டு விட்டு - உன்
மாசில்லா மனதைப் பார்த்து வந்தேன்!

பச்சைப் புல்களையும் விட்டு
பால் தரும் பசுக்களையும் விட்டு விட்டு - உன்
புனிதமான பாசத்தைப் பார்த்து வந்தேன்!

ஆலமரங்களை விட்டு
ஆடும் மயில்களையும் விட்டு விட்டு - உன் உயிரின்
ஆழத்தைப் பார்த்து வந்தேன்!

குளத்தையும் விட்டு
குலத்தையும் விட்டு விட்டு - என்
குலதெய்வமே நீ என உன்னை நம்பி வந்தேன்.....!

எழுதியவர் : நா.வளர்மதி. (5-Feb-13, 7:57 pm)
பார்வை : 204

மேலே