போடா தடியா...!!!

தற்போதெல்லாம்
நீண்ட நாட்கள் இடைவெளியானபோதும்
உன்னுடைய அருகாமை
வாய்க்கவில்லை...

முப்பொழுதும் பெயர் சொல்லியே
ஒருமையில் அழைத்திருந்தேன்...
விளையாட்டாய் உன்னை வலிக்கும் அளவுக்கு
தலையில் கொட்டி இருக்கிறேன்..

விளையாட்டுச்சண்டைகளில் நான் உன்னை
வென்றதே அதிகம் என கர்வமாயிருந்தேன்...
நீ கோபித்துக்கொண்டு தொடர்ந்து
சிலபல நாட்கள்

பேசாமல் என்னை தவிர்க்கும்
போதெல்லாம்...
உனக்காக எதையும் விட்டுக்கொடுத்து
பழம் விட்டுக்கொள்ளச்சொல்லி
நச்சரித்திருந்தேன்...

ஞாயிறு தினங்களில் என்னை விளையாட்டில்
ஏமாற்றியவனிடம் நீ சண்டையிடுவது
பின் அவன் முதுகில் கை வைத்து
உன்கை மீதே அடித்துவிட்டு

அவனை அடித்ததாக பொய் சொல்லி
என்னை ஏமாற்றியதாக சமாதானப்படுத்தி
இருப்பாய்..

நான் அத்தனை முட்டாளுமில்லை
ஆனாலும் உன் பாசத்தில்
நம்பியது போல அழகாய் நடிக்கும் என்னை
நீ கண்டு பிடித்ததே இல்லை...

உன் இரட்டை ஜடைகளைக்கண்டால்
விளையாட்டுக்காக இழுத்துவிடும்
என்கைகளை அடிக்க ஓங்குவதாய்
எட்ட முயற்சித்து தோற்றுப்போகையில்

“பாருங்கம்மா இவனை ” -என நீ
சிணுங்குவாய்... சின்னப்பையன் தானே
என என்னையே அம்மா என்னையே ஆதரிக்க
உன் முகத்தில் குடியிருக்கும் ஏக்கமும்

இயலாமையில் “போடா தடியா”
என்ற உன் திட்டுக்களும் எனக்கு
அத்தனை சந்தோஷம் கொடுக்க நான் சிரித்துக்கொண்டு உன் இயலாமையை இன்னும் அதிகரிக்கச்செய்வேன்...

உன் ரெக்கார்ட் நோட்டில் என் கையெழுத்தும்
நான் வரைந்து கொடுத்த “ஆக்டோபஸ்”
படமும் அழகாக இருக்கிறதென்று
உன் தோழிகள் என்னை முகஸ்துதி
பாடும் போது வெட்கத்தால் நான் குழைந்து போகையில்

நீ குறும்பாய் ஒரு சிரிப்பும்
கள்ளப்பார்வையுமாய் என்னை
பார்ப்பாயென எனக்குத்தெரியும்
ஆம்! அதையே நீ எப்போதும் செய்திருந்தாய்...

இப்போதும் அதையே நீ செய்வாயா? என
நான் அறிந்திருக்கவில்லை ஆனால்
உன் தோழிகளுக்கெல்லாம் மணம் முடிந்ததென
மட்டும் அறிந்திருந்தேன் ஏக்கமாய்!ஹாஹா....

கடைசியாக நாம் எப்போது சண்டையிட்டுக்கொண்டோம்?
நினைவிருக்கிறதா உனக்கு ... சத்தியமாக எனக்கில்லை...

ஆனால் மனம் தினம் தினம் ஏங்குகிறது
உன்னோடான செல்லச்சண்டைகளுக்கும்

அதன் பின்பான நம் சமாதானத்தில் எனக்கு நீ வைக்கும்
அதிகபங்கு வைக்கப்படும் மிட்டாய்களுக்குமாய்...!!!

நான் என்னவோ ஆசையாய் புலம்புகிறேன்
நீ என்னவோ உன் இரு குழந்தைகளையும்
திட்டிக்கொண்டிருப்பாய்
சண்டை போடாதீங்க...!!! என்று ..

[]சகோதரிக்கு....எழுதியவை[]

-கவிதைக்காரன்.

எழுதியவர் : -கவிதைக்காரன்! (9-Feb-13, 2:09 am)
பார்வை : 158

மேலே