நண்பர்கள்....
உலக உறவுகளும் உணர்வுகளும்
ஒன்று கூடிப் பெற்ற
பெரும்புதையல்
நட்பு!!
இருதிணை, ஐம்பால், மூவிடத்திற்கு
உட்படாத ஓர் உன்னத உணர்வு
நட்பு!!
வாழும் வாழ்க்கைக்கு வேண்டுமானால்
நரை, திரை, மூப்பு இவை வந்து
வடிகால் இடலாம்!
நட்பு சூழ்ந்த மனத்திற்கு
ஏதடா? இதெல்லாம்...
மேகம் கறுத்து மின்னல் வெளுத்து
இடிஎடுத்து வரும்
பெருமழையிலே
ஒரே குடையிலே
ஆறு தலைகள் ஒன்றிப் போனால்,
நனையாத பகுதியே தென்படாது!
ஆயிரம் தான் நனைந்தாலும்
நம் நட்பு மட்டும் இதயத்தின் ஓரத்தில்
இதமாய்க் குளிர்க்காயந்துக்
கொண்டிருக்கின்றது!
சிறு வயதில் மிதிவண்டிப்பயிற்சி !
அதன் பின்னே உட்கார உன் உயிரே பணயம்!
சிறு சிராய்ப்புகளுடன்
வீட்டிற்குச் சென்றால் ,
மறைத்தாலும் மாட்டிக்கொண்டு
திக்குமுக்காடச் செய்யும்
அம்மாவின் அர்ச்சனைகள் !!
அப்பப்பா!
நரை தோன்றி நரம்புகள் புடைத்த
இப்பொழுதும் நினைத்தால் கூட
நம் பொக்கை வாய்களில் எல்லாம்
முத்துக்கள் தெறிக்கின்றன!
இன்றும் தேநீர்க்கடை மேசைகள்
நமது நட்பின் சுயசரிதையை
எழுதிக்கொண்டிருக்கின்றன !
கவியரசு கண்ணதாசனின் எழுதுகோல்,
வீடு வரை உறவு, வீதி வரை மனைவி,
காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?
என்பதற்கு விடை எழுத மறந்துவிட்டது,
!!நண்பர்கள்!! என்று!!!