விடியல் காணாமல் விழி உறங்காது - (ஹுஜ்ஜா)
சாதி என்ற சாக்கடையால்
வேண்டாத மக்கள் ஆனோம்.
தீண்டாமை தீப்பிளம்பால்
தீக்கிரையாக்கப்பட்டோம்.
அந்த நெருப்பில் குளிர்காயும்
அநியாயக் காரர்களே!
குற்ற உணர்ச்சி ஏதுமில்லா
குள்ளநரி கூட்டங்களே!
குலையறுத்த தலைவர்களுக்கு
குடை பிடிப்பதை நிறுத்திவிட்டு
தலை சாய்ந்து போகாமல்
தலை குனிய வைத்திடுவோம்!
சுடர் விளக்கை அணையச்செய்த
சூனியத்தை கண்டறிந்து
சூழ்ச்சியை முறியடித்து
சுதந்திரத்தை சுவாசிப்போம்!
அடக்குமுறை அச்சுறுத்தல்
அட்டூழியம் அத்துமீறல்
அனைத்தையும் எரித்துவிடும்
அக்னியாய் மாறிடுவோம்!
சொல்லொணா துன்பங்கள்
சூழ்ந்து கொண்ட போதிலும்
சுயநினைவை இழக்காமல்
சுதாரித்து எழுந்திடுவோம்!
குத்தி கிழித்த கத்தியையும்
குறி பார்த்த அம்பினையும்
வரி போட்ட சாட்டையையும்
நொறுக்காமல் விழிமூடோம்!
வடுக்கள் கொஞ்சம் மறையட்டும்
வலிகள் சற்றே குறையட்டும்
இரத்த சுவடுகள் காயட்டும்
இருண்ட இதயம் ஒளிரட்டும்
மீண்டு வந்து சாதியின்மேல்
மிதித்து நடை பயின்றிடுவோம்!
துளிர்த்து வந்து தீண்டாமையை
துரத்தி விரட்டி அடித்திடுவோம்!