அப்ஸல் குரு – நீதிக்கு தூக்கு!

அப்ஸல் குரு – நீதிக்கு தூக்கு!
11 Feb 2013

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிவிடலாம்! ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது! என்பது நீதியின் தர்மம்! ஆனால், ஆயிரங்குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் பொழுது அப்பாவிகள் தொடர்ந்து தண்டிக்கப்படுகின்றார்கள் என்பதன் அண்மை உதாரணம்தான் அப்ஸல் குரு.

பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்ஸல் குருவை தூக்கிலிட்டதன் மூலம் அரசு அளிக்கும் செய்திதான் என்ன? தீவிரவாதத்துடன் எவ்வித சமரசமும் கூடாது என்பதா? சட்டம் தன் கடமையை சரியா நிறைவேற்றும் என்பதா? எனில், இதர சில கேள்விகளுக்கும் நாம் பதில் தேட கடமைப்பட்டுள்ளோம்!

பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மன்னிக்க முடியாத அதிகபட்ச தண்டனைக்குரிய தேசத் துரோகம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்த தாக்குதல் யாரால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது என்பதில் பலத்த சந்தேகம் நிலவுகிறது. அதேவேளையில் அதிகபட்ச தண்டனை (capital punishment) என்பதை நிர்ணயிக்க நாம் இந்நாட்டில் எழுதி வைக்கப்பட்டுள்ள சட்டங்களைத்தான் அளவுகோலாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

அப்ஸல் குரு வழக்கில் பாரபட்சமும்,பழுதுகளும் நிறைந்த விசாரணை நடைபெற்றதாகவும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு சட்ட உதவி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுந்தது. அப்ஸல் குரு அப்பாவி என்பதை அருந்ததி ராய் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்கள்.

போலீஸின் விசாரணை ஊனமான, பலகீனமானது என்று கூறியது வேறு யாருமல்ல! உச்சநீதிமன்றம் தான் கூறியது. பாராளுமன்றத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி என்று போலீஸ் குற்றம் சாட்டிய டெல்லி பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் கிலானியை உயர்நீதிமன்றம் குற்றமற்றவர் என கூறி விடுதலைச்செய்தது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு நபரான ஷவ்கத்திற்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை உச்சநீதிமன்றம்தான் ரத்துச் செய்தது. ஆனால், சமூகத்தின் கூட்டு மனசாட்சியை (Total Conscience of the Society) திருப்திப் படுத்த மரணத்தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிச் செய்தது. சமூகத்தின் கூட்டு மனசாட்சிக்கு எதனை அளவுகோலாக உச்சநீதிமன்றம் எடுத்துக்கொண்டது? என்ற கேள்விக்கு பதில் இல்லை.

அன்று உச்சநீதிமன்றம் கூறிய சமூகத்தின் கூட்டு மனசாட்சிக்கு இன்று சங்க்பரிவாரை திருப்திப்படுத்த அப்ஸல் குருவை தூக்கிலிட்டதன் மூலம் விளக்கம் அளித்துள்ளது ஐ.மு அரசு!

குடும்பத்தினருக்கு கூட தெரியாமல் ரகசியமாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கருணை மனு நிராகரிக்கப்பட்டால் அதனை நீதிமன்ற மீளாய்வுக்கு(judicial review) உட்படுத்தும் அரசியல் சாசன உரிமை அப்ஸல் குருவுக்கு மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அஜ்மல் கஸாபுக்கும் இந்த உரிமை மறுக்கப்பட்டது. தீவிரவாத தாக்குதலுக்கு அநியாயமாக பழி சுமத்தப்பட்டவரை மட்டும் தண்டித்து சமூகத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த அரசு அவசரம் காட்டியபொழுது, இந்த தேசத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயலும் உண்மையான குற்றவாளிகள் மற்றும் அவர்களது சூழ்ச்சிகளுக்கு எந்த தீர்வும் காணப்படவில்லை.

சமூகத்தின் கூட்டு மனசாட்சியை கட்டமைப்பதில் இன்று தேசத்தில் பல்வேறு குண்டுவெடிப்புகளின் மூலம் தீவிரவாதத்தை கட்டியெழுப்பிய ஹிந்துத்துவா சக்திகளின் பங்கு முக்கியமானதாகும். அவர்களின் அரசியல் பிரதிநிதியான பா.ஜ.கவின் வாயை மூட இந்த மரணத் தண்டனையின் மூலம் ஐ.மு அரசு சாதித்திருக்கலாம். அதன் பிரதிபலனை அடுத்த பொதுத் தேர்தலில் ஆதாயமாக மாற்றவும் ஆளுங்கட்சி கருதியிருக்கலாம். ஆனால், சர்வதேச அளவில் மரணத்தண்டனைக்கு எதிராக வலுவான குரல்கள் எழுப்பப்பட்டு வரும் வேளையில், பெரும்பாலான நாடுகள் தூக்குத் தண்டனையை வாபஸ் பெற்றுள்ள சூழலில் உலகின் பெரிய ஜனநாயக தேசமான இந்தியாவின் இமேஜை இத்தண்டனை பாதிக்கும்.

கஷ்மீரின் முக்கிய நகரங்களில் கொந்தளித்த மக்கள் இந்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்பியுள்ளனர். 1984-ஆம் ஆண்டு மக்பூல் பட்டை தூக்கிலிட்டது கஷ்மீரில் கொந்தளிப்பை உருவாக்கியது. ஒரு தேசம் தனது குடிமக்களிடம் கருணையும், தயவும் காண்பிக்கும் பொழுதே உண்மையில் அந்த தேசம் வலுவானதாக மாறும். அரசியல் லாபம் கருதி அப்பாவி அப்ஸல் குருவை தூக்கிலிடுவதில் அவசரம் காட்டியவர்கள் சட்டத்தின் கடமையை(?) நிறைவேற்றுவதற்கிடையே இதனை மறந்துவிட்டார்கள் போலும்!

நன்றி கட்டுரையாளருக்கு....

பகத்சிங் மற்றும் ராஜகுரு சுகதேவ் வெடிகுண்டு வீசினார்கள் அன்றைய பாராளுமன்றத்தில்...பிரிட்டிஷ்காரர்கள் நடத்திய பாராளுமன்றத்தில்...கடந்த 2001 - ஆம் ஆண்டு நடத்திய பாராளுமன்ற தாக்குதலுக்காக அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற ஏனைய ஐவரும் நடந்த சண்டையில் கொல்லப்பட்டனர். நமக்கு வரும் சந்தேகம் எல்லாம் என்னவெனில், பகத்சிங் தேசபக்தர் என்றால்...எதற்காக..? இந்திய பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தினார்கள் என்ற முழு விபரத்தை மத்திய அரசு வெளியிடவேண்டும்...ஜம்மு காஷ்மீர் மாநிலம் தனிநாடு வேண்டும் என்று கோரிக்கைக்காக பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தினார்களா...? அல்லது சும்மா பாகிஸ்தானில் இருந்து வந்து பொழுது போக்கிற்காக தாக்குதல் நடத்தினார்களா..?

கடந்த பல பத்து வருடங்களாக நடக்கும் தீவிரவாத பயங்கரவாத என்று சொல்லக்கூடிய சம்பவங்களைப் பார்த்தல் ...நடந்த குண்டுவெடிப்பு முதல் பாராளுமன்ற தாக்குதல் வரை காஷ்மீர் தனி நாடு கோரிக்கையை முன்வைத்தே நடந்தவைகளாக ஏன் இருக்கக் கூடாது என்று தான் நினைக்க தோன்றுகிறது...இந்த வெடிகுண்டு சம்பவனகளை வைத்தே மாநில உரிமைகளும் தனி மனித உரிமைகளும் பறிக்கப்பட்டு கொடும் சட்டங்கள் இயற்றப்படுகின்றன..மத்தியில் அதிகாரத்தை குவித்து ஒற்றை நடைமுறை சட்டங்களை கொண்டு வருவதற்கு கிட்டத்தட்ட அனைத்தையும் செய்து முடித்து விட்டார்கள்...இலங்கையைப் போல ஓட்டுப்போடும் ஜனநாயகமும் இருக்கும்..ராணுவமும் மக்கள் மத்தியில் இருக்கும்...இந்தியாவில் காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்கள்...தற்போது ஒரிசா, உத்திராஞ்சல் போன்ற மாவோஸ்ட் கள் ஆதிக்கம் நிறைந்த பகுதி என்று கூறிக்கொண்டே...

அந்த காஷ்மீர் பிரச்சனையை தீர்க்காமல் சும்மா பயங்கரவாதம்..... தீவிரவாதம் என்று சொல்லி மக்களை திசை திருப்பவும் நாட்டை ஏமாற்றவும் மட்டுமே முனைகிறதா காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஏனைய கம்யூனிஸ்ட் கட்சிகளும் என்று எண்ண தோன்றுகிறது. இஸ்லாமியர் விசயங்களில் பிராந்திய கட்சிகள் தொடங்கி தேசியக் கட்சிகள் வரை கள்ள மௌனத்தை கடைபிடித்து வருகிறார்கள்...அந்த அளவிற்கு ஆர்.எஸ்.எஸ். கருத்துக்களை கொண்டவர்களால் இந்திய அரசு நடத்தப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது...ஒருவேளை அதுதான் உண்மையாகக் கூட இருக்கலாம்.

'சமூகத்தின் கூட்டு மனசாட்சி' என்ற புதிய சொல் படுபயங்கர விபரீதத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற அஞ்ச வேண்டியுள்ளது...
இன்றைய சமூகம் இந்து பாசிசமாக உள்ளது. முஸ்லிம்களுக்கு ஓட்டு உரிமை வழங்கக் கூடாது என்று வி.ஹெச்.பி.யின் தலைவர் அசோக் சிங்கால் வெளிப்படையாக கூறுகிறார். அரசின் பங்காளிக் கட்சி / இயக்கம் தான் இந்த வி.ஹெச்.பி.,இவர்கள் சொல்லிவிட்டார்கள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏனைய சங் பரிவார் அமைப்புகள் வெளிப்படையாக சொல்லவில்லை..விஷயம் அவ்வளவு தான். இன்றைய ஊடகங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ளார்கள் காவி கூட்டத்தை.... காவிகளை உள்வாங்கியவர்கள்...எனவே ஊடகங்கள் தான் முதலில் முஸ்லிம்களின் மீது வெறுப்பை கக்கி உமிழ்ந்து வருகின்றது.

இன்றைய இந்தியாவில் இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்று 99 சதவீதத்தினர் கூறுகிறார்கள்..
நினைக்கிறார்கள்..இவர்கள் அனைவரும் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் தான் என்ற கூற்று பாமரன் ..(எழுத்தாளர் பாமரன் அல்ல...) தொடங்கி ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் என்று அதிகாரம் படைத்தவர்கள் வரை நினைக்கிறார்கள் என்று கருதலாம்....சிறந்த உதாரணம் விஸ்வரூபம் படத்தின் தணிக்கைக் குழு....தணிக்கைக் குழுவில் இருக்கும் அனைவரும் இந்து பாசிச கருத்துக்களை உள்வாங்கியவர்கள்...என்று கருதலாமா..?

இந்திய மக்கள்...தமிழ் மக்கள் இந்த பாசிசத்தை உணராமல் இதற்கு பலியானால்...நாளை தமிழ் பேசுபவன்...( இன்றைக்கே ஆரம்பித்து விட்டார்கள் தமிழ் பேசும் கூட்டத்தினரை நோக்கி எனபது வேறு விஷயம்...) தாழ்த்தப்பட்டவன்...மீனவர்கள்..என்று தொடங்கி அனைவரும் பலியாக நேரிடும்...சமூகத்தினரை அடக்கி ஒடுக்கி அரசுக்கு எதிரான கடும் கோபத்தை தனித்து கொள்வார்கள்..அல்லது மடைமாற்றி விடுவார்கள்...அந்நிய நாட்டிற்காக மட்டும் அரசை நடத்துபவர்கள்...என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (11-Feb-13, 3:37 pm)
பார்வை : 154

மேலே