முஸ்லீம் நண்பரின் ஆதங்கம்
நானொரு முஸ்லீம்தான்.
இருப்பினும் இந்தியாவின் மற்றவர்களிலிருந்து நான் கொஞ்சம் வித்தியாசப் படுபவன். இந்தியாவில் இந்துக்களின் ஜனத்தொகைதான் மிகமிக அதிகம். இதில் எந்த முஸ்லீமுக்கும் மாற்றுக் கருத்து இருந்திட முடியாது. அதிலும் ஒரு 10 சதவிகித இந்துக்கள் மட்டுமே கொஞ்சம் தங்களின் மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருப்பவர்கள். மற்ற அனைத்து மக்களும் மதத்தின்பால் அந்த அளவுக்கு தீவிரமுடையவர்கள் அல்ல. மேலும் அவர்கள் முஸ்லீம்கள் என்றும் கிருத்துவர்கள் என்றும் பிரித்து நினைத்து வாழ்பவர்கள் இல்லை. எம்மதமும் சம்மதம் என்ற உயர்ந்த சிந்தனை உள்ளவர்கள். ஆனாலும் அவர்களுக்கும் ராமர் ஒரு தெய்வமாகவே தெரிகிறார். இந்துதர்மம் சுமார் 5000 வருடங்களுக்கு முன்பே ராமரை ஒரு இறை தூதராகக் கொண்டும், அவரின் பிறப்பு நடந்தது அயோத்தி என்றுமே சொல்லிவந்திருக்கின்றது. அதனாலேயே அவர்களுக்கு அயோத்தி ஒரு முக்கியமான தெய்வ ஸ்தலமாக கருதி துதித்து வந்திருக்கின்றார்கள். முஸ்லீம் மன்னர்களால் கைப்பற்றப்பட்ட மற்றபல இடங்களைப் பற்றின எந்த கேள்விகளையும் இந்துக்கள் கேட்பதில்லை, என்பதினையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். ஆகவே பாபர் மசூதி பிரச்சனையினை முஸ்லீம் தலைவர்களும், இந்துக்களின் தலைவர்களும் அமர்ந்து பரஸ்பரம் நட்பு காட்டி, விட்டுக்கொடுத்து ஒரு சுமூகமான முடிவினை எடுக்க வேண்டும். இந்த ஒரு பிரச்சனை மட்டுமே தீர்வு காணப்பட்டால் இந்தியாவிலுள்ள அத்தனை இந்து-முஸ்லீம் பிரச்சனைகளையும் தீர்த்து ஒரு இனிமையான இந்தியாவினை உருவாக்கிட வழி வகுக்கும்.
மற்றும் இந்திய முஸ்லீம்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். மற்ற நாட்டு முஸ்லீம்கள் எவரையுமே நம்மால் கட்டுப்படுத்திட முடியாது. அது நமக்கும் தேவையில்லாத ஒன்று. நம் நாடு முன்னேற நம் சமூகம் என்ன செய்திடல் வேண்டும் என்பதினை சிந்தித்திடல் வேண்டும்.
1) தீவிரவாதிகள் அல்லது அதற்கு உதவிட முனையும் எந்த முஸ்லீமுக்கும், அந்த அமைப்புகளுக்கும் நம் இந்திய முஸ்லீம்கள் உதவிடக் கூடாது.
2) கடத்தல், கருப்புப்பணம் தொடர்பான பரிமாற்றம், போன்ற சமூகத்திற்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாதவாறு தனியொரு முஸ்லீம் அமைப்பினை உருவாக்கி கட்டுப்படுத்திட உதவவேண்டும்.
3) இந்தியாவினுள் வாழ்ந்துகொண்டு பாக்கிஸ்தான் விளையாட்டு குழுவை ஆதரித்துக் கைகோர்க்கக்கூடாது.
4) ஒவ்வொரு மானிலத்திலும் ஒன்றோ இரண்டோ முஸ்லீம் அமைப்புகளைமட்டும் வைத்துக்கொண்டு மற்றவைகள் அனைத்தினையும் அவற்றுடன் இணைத்திடல் வேண்டும். அந்த அமைப்புத் தலைவர்கள் மட்டுமே எந்த சமூகப் பிரச்சனையானாலும் பேசித்தீர்க்க அனுமதித்து அனுப்பப்பட வேண்டும்.
5) ஒவ்வொரு இந்தியனுக்கும் எந்த ஒரு முஸ்லீமாலும் தீமை எதுவும் நடந்திடாது என்ற உத்திரவாதம் கிடைத்திடுமாறு நடந்திட வேண்டும்.
6) முஸ்லீம் பெண்களும் மற்ற மதத்தின் பெண்களைப்போல கல்வி, மற்ற வகைகளிலும் சுதந்திரமாக வாழ வழிமுறைகள் ஏற்படுத்தித்தர வேண்டும்.
7) குடும்பக் கட்டுப்பாடு தவறான ஒரு விஷயமல்ல என்பதினை நம் மக்களுக்கு போதித்து உணர்த்திடவேண்டும்.
8) முஸ்லீம்களின் கல்வி வளர்ச்சி 100 சதவிகிதம் என்கிற வகையில் முன்னேறிட வழிவகுக்க வேண்டும்.
இவ்வாறான வகையில் இந்திய முஸ்லீம்கள் ஒரு கொள்கையோடு வாழ்க்கையினை அமைத்துக்கொண்டால், நாடும் நல்லமுறையில் முன்னேற்றம் காணும், நாமும் முன்னேறுவோம். இது உறுதி.
இப்படிக்கு அப்துல் சமது, சங்கர்நகர்.