கர்ப்பகாலம். [இது ஒரு காதல் கடிதம்]
கர்ப்பகாலம்.
[இது ஒரு காதல் கடிதம்]
சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர்
திருமணமான ஏழெட்டு மாதங்களில்
கர்ப்ப நிமித்தமாய்
அவளைத் தாய்வீடு அனுப்பிவிட்டு
அடியேன் தனித்திருந்த காலம்.
அந்தக் கர்ப்பகாலத்தில் நான் அவளுக்கு
எழுதிய கடிதம்!
அன்று நான் எழுதிய கடிதம்
இன்று "காதலர் தினத்தில்"
காதலர் யாவர் உள்ளத்திலும்
உவகைஊட்ட விழையும்,
பாலு குருசுவாமி.
நீயே ! நீயே! என்
நெஞ்சிலும் நினைவிலும் , ஏன்
துஞ்சிடும் பொழுதிலும்
நீயே! நீயே!
என் கருத்திலே வந்தாய்:
என்மகனைக் கருவிலே கொண்டாய்.
உருத்துடன் ஒருகடிதம் எழுதினேன் உனக்கு.
வானொலியில் வீணை இசைக்கிறது; அந்தத்
தேனொலி எனக்கு ரசிக்கவில்லை!
உன் நினைவல்லால் வேறொன்றை
என் உள்ளம் புசிப்பதுமில்லை.
என் ஆவி வசிப்பதெல்லாம்
உண்மையாக உன்னோடுதானே!
உன்னை அன்பு செய்ய
உமை அவள் ஆணையிட்டாள்.
"உன் மகனை சுமப்பவளை"
"மனதிலே சுமந்திரு" என
மனதார வாழ்த்திட்டாள்.
உனைக் காணும் ஆர்வம்
கடலினும் பெரிதாய்
இவ்வுடலினுள் உள்ளது.
உனைக் காணாத கொடுமையோ
உப்பும் உவர்ப்புமாய்
உள்ளத்தை அரிக்கிறது.
இமைகாதலன் தன்னிரு கரத்தாலும்
கண் என்பாளைத் தழுவி மகிழ்கிறான்!
அன்புபெருகி ஒருதூசுகூட அவள்மீது படாமல்
அவளைக் காக்கிறான்!
உமைக்காதலன் நான் உன்திசைநோக்கி
ஒருபெருமூச்சு விடுகிறேன்.
"நீபோய் அவள்இதயத் திரையில்
ஒரு இன்னிசை உண்டாக்கு"
என்றுஎன் மூச்சினை அனுப்புகிறேன்.
அந்த இசையின் பின்னணியில் நீ
ஓராயிரம் தாலாட்டுகளை தயாரித்துவிடு.
உலகசாதனைகள் உன்மகனின் வரவுக்காக
தவம் கிடக்கின்றன.
அருளும் பொருளும் அவனுள் வாழ
ஆசை மிகக் கொண்டது.
புவியே மகிழ்ந்து கவியவன்
வரவுக்காக காத்திருக்கிறது.
மலர்மொட்டுக்கள் அவன்பிறந்தநாள் வாழ்த்தாக
தன்புதுமணத்தைப் பரப்புதற்கே
மலராமல் காத்திருக்கின்றன.
காய்கள் இனியவன் பிறப்பன்றுதான்
கனிவேன் என்று அந்த
இனிய பொழுதைத் தொழுது நின்றன.
உலகஅமைதி தனக்குத் தகுந்த
பாதுகாவலன் வருகிறான் என
பரவசப் பட்டது.
அப்பாவின் கனவெல்லாம்
தப்பாமல் நிறைவேற்ற
எப்போது வருவான்என
என்உள்ளம் ஏங்குகிறது.
ஐயோ! இப்படி ஆரம்பித்து விட்டீர்களே.... என்று எண்ணுகிறாயா?
எண்ணமும் செயலும் இலக்கியமாகிவிட்டால்,
எப்போதும் வாழ்க்கை இனிதாகும் என்பது
எனது முடிவு.
உனக்கு விஷயம் தெரியுமா?
[உனது பிரசவம் பற்றிய கவலையில்]
கவலைத் தேனீக்கள்,
கலாரசனையுடன்...
என் தாடையில்,
ஒரு தேன்கூடு கட்டிஉள்ளன! [தாடி]
அவைகள்,
தேனாக...உன் நினைவையே
அங்கு சேகரித்தன!!!
பின்குறிப்பு: இத்தனை எதிர்பார்ப்புகளுக்குப்
பின் பிறந்ததோ இரட்டைப் பெண் குழந்தைகள்!!!!!
பாலு குருசுவாமி.