மாட்டுச்சந்தையில் மன்னார்சாமி

நமது நாயகன் மன்னார் சாமி மாட்டு சந்தைக்கு மாடு வாங்கும் நோக்கில் வந்து சேர்ந்தார்.

ஒவ்வொரு மாடாக பேரம் பேசிப்பார்த்து பேரம் படியாததால், சற்றே ஓரமாக நின்று யோசித்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் தன் இருமாடுகளில் ஒரு மாட்டையாவது எப்படியாவது விற்று விடவேண்டும் எனும் நோக்கில் இவரை அணுகினார்.

விலை பேச ஆரம்பித்தனர்.

முப்பதாயிரம் தொடங்கி, பதினைந்தாயிரம் சொல்லி, ஏழாயிரத்தூ ஐநூறு என்றாகி,

மூவாயிரத்து எழுநூத்து ஐம்பது என்று பேசி, ஆயிரத்தி. எண்ணூற்றி எழுபத்தி ஐந்து என்று முடிந்தவுடன் மன்னார் சாமி யோசனையில் ஆழ்ந்தார்.

இவரின் யோசனை பலமாக இருப்பதை பார்த்த அந்த நபர் ஆயாசத்துடன் இந்த விலையும் படியவில்லை என்றால் மாட்டை

இலவசமாகத்தான் தர வேண்டும் என்றார் வெறுப்புடன்.

உடனே மன்னார்சாமி உற்சாகத்துடன், அப்படி என்றால், எனக்கு இரண்டு மாடுகள் வேண்டும் என்றார்.

மாடுகளை விற்க வந்தவர் மாடுகளை ஓட்டிக்கொண்டு ஓடியே போனார்.

நான் கேட்டேன் மன்னார்சாமியிடம் “ஏங்க மாடு வாங்க வந்திட்டு இப்பிடி சும்மா வெறுங்கையோட போகப்போரீங்களா? மாடு வாங்கலியா? என்றேன்.

அதற்கு மன்னார்சாமி” இல்லீங்க, என்னோட ஃப்ரெண்டு எனக்கு சொல்லி அனுப்புச்சாருங்க. இங்கே வெலை எல்லாம் ரொம்ப ஏத்தமா சொல்லுவாங்கன்னு. அதே மாதிரி தாங் ஆயிப்போயிருச்சு. பாருங்களேன். முப்பதாயிரம் சொன்ன அந்த ஆளு ஆயிரத்தி எண்ணூற்றி எழுபத்தி ஐந்து ரூபாய்க்கு இறங்கி வந்துட்டானே.” என்றார்.
நான் உடனே "சரிங்க அவ்வளவு குறைந்த விலைக்கு வாங்கிட வேண்டியதுதானே. அதுல என்ன தயக்கம்” என்றேன்.

மன்னர்சாமியோ, "என் ஃப்ரெண்டு சொல்லி அனுப்புச்சபடிதானே செஞ்சேன். என்றார்.

நான் “அவர் என்ன சொல்லி அனுப்பினார்” என்றேன்.

அதற்கு மன்னார்சாமி “இந்த சந்தையில என்ன வெலை சொன்னாலும் அதுக்கு பாதியா விலை கேளுங்க ன்னு சொல்லி அனுப்புச்சாரு. அதாங்க அவரு எந்த வெலைய சொன்னாலும் பாதி வெலைக்கு கேட்டேன்” என்றார்.

நானும் “சரிங்க அவருதான் இலவசமாத்தாங் கொடுக்கணும்னு சொல்லிப்புட்டாரே” என்றேன்.

உடனே மன்னார்சாமி “அதாங்க உடனே எனக்கு ரெண்டு மாடு வேணும்னு கேட்டேன்”. என்றாரே பார்க்கலாம்.

மன்னர்சாமியின் எச்சரிக்கை உணர்வு அதி அற்புதம் தானே?

எழுதியவர் : மங்காத்தா (15-Feb-13, 3:59 am)
பார்வை : 300

மேலே