சரித்திரம் படைப்பேன் நான் !

விதிதனை விதித்தவனின்
எனையொழிக்கும் கட்டளை
எனக்கு காட்டப்படவில்லை !
காட்ட வேண்டிய - எந்தவொரு
கட்டாயமும் இல்லையாம்
பத்தாயம் நிறைந்த வலியோடு
பயணப்படும் எனக்கு !
எனது சிதைக்கப்பட்ட
சிறகுகளை - என் கையில்
கொடுத்து புதைக்க
சொல்லி அடிக்கிறார்கள் !
சிறகு சரியாகி
பொருத்துப்படவே
பொறுத்திருக்கிறேன் - வலிகளை
போர்த்திக்கொண்டு !
இரவொத்த இருட்டினுள்
பகலில் பயணிக்கிறேன் !
வழிகள் அறியா விழிகள்
வலியோடு அழுகையிலும்
கண்ணீர் துடைத்துவிட்டு
மீண்டும் விழிக்கிறேன் !
விதியெனும் நரிகளின்
நகங்கள் கீறி - ஒவ்வோர்முறை
விழும்போதும் - பரியாய்
ஏறி வருவேன் - இம்முறை
விழக்கூடாத ஆழத்தில்
விழுந்துவிட்டேன் - எழ
வேண்டுமென்ற ஏக்கமும்
என்னோடே கிடக்கிறது !
விதிகளே...
வலைகளைத் தின்னும்
திமிங்கலம் நான் !
உங்கள் வலைப்பின்னல்
வாய்களுக்கு விருந்தாக
மாட்டேன் - மாறாக அறுத்தெறிந்து
ஆர்ப்பரிப்பேன் - தினமும்
கரைமுட்டும் கடலாக !
உன் அன்றாட பலியாக
பணிய மாட்டேன் நான்,
மாறாக - சீறித் தாவி
குரல்வளையின்
குருதி சுவைப்பேன்
சினந்த புலியாக !
நகங்கள் உளியாக !
இதயக் குடுவையில்
என் கடைசிச் சொட்டு
குருதி காயாத வரை
உறுதியாய் ஓயமாட்டேன் !
சறுகென விழுந்தாலும்
எழுந்து வருவேன் - இறகு
முளைத்த இடியென !
உன் தந்திரங்கள்
பலிக்காது - வலிக்காது !
எரிந்து சாம்பலானாலும்
நம்பி கை கொடுக்க
நம்பிக்கை கொடுக்க
நட்புகள் ஆயிரமுண்டு !
தள்ளி விளையாடி
எள்ளி நகைக்காதே
திரும்பி எழுவேன் தீயாக !
மீண்டு வருவேன் மின்னலாக !
இம்மாமண்ணுருண்டையில்
நான் விழுந்து விழித்தது
சரித்திரம் படிக்க மட்டுமல்ல
சரித்திரம் படைக்கவும் தான் !
தரித்திரம் உடைப்பேன் நான் !
சரித்திரம் படைப்பேன் நான் !