[405] ஏன் தோன்றினேனே ! (அறுசீர் விருத்தப் பா வகை)
கன்றிய காம நெஞ்சக்
==கள்ளராய்த் தனித்த பெண்டிர்
குன்றிடக் கற்பு போக்கிக்
==கொலையுமே செய்கின் றோர்மேற்
சென்றுமே ஒறுத்தி டாமல்
==செய்வதொன் றின்றி வாழ்வேன்!
நன்றியோ எனது வாழ்வும் ?
==நானுமேன் தோன்றி னேனே! ====01
தேசுற்ற மின்,ஆர் மோகத்
==தேகத்தில் பற்று வைத்தே
மாசுற்ற பலதா ரத்து
==மாயமாம் வாழ்க்கை வாழ்ந்து
எசுற்ற பேர்கள் கண்டும்
==ஏதுமே செய்ய மாட்டேன்!
நீசற்குப் பொறுத்து வாழும்
==நிலத்திலேன் தோன்றி னேனே! ====02
வன்கணன் ஆக நெஞ்சில்
==வஞ்சனை வளர்த்தும் ஏழை
புன்கணீர் நினைத்துப் பாராப்
==புலையனென்று ஊழல் செய்வார்
முன்வரும் போதும் பாரா
==முகத்தனாய் வாழு வேனே !
என்கொலோ! பிறந்து வாழ்வேன்?
==ஏனிங்கு தோன்றினேனே! ==== 03