[406] கண்ணீர் எதற்கு ? தண்ணீர் இருக்கு! ( அறுசீர் விருத்தப் பா வகை)

மானா வாரி நிலங்களிலே
-மழையும் பொய்த்தால் கலங்காதீர்!
தானே கைகள் பிசைந்தவராய்த்
-தண்ணீர் வேண்டி அலையாதீர்!

சவரி யார்தம் பட்டினத்தைச்
-சார்ந்த விவசா யக்குடிகள்
விவர மான செயல்செய்தார்!
-விளக்கு கின்றேன் கேளுங்கள்:

பண்ணைக் குட்டைகள் அவர்செய்தார்!
-பதிலுக்கு நிலத்தடி நீர்வளர்த்தார்!
எண்ணப் புதிதாம் இதையவர்கள்
-இருக்கும் தத்தம் நிலத்திட்டார்!
கண்மாய் பற்றிக் கவலையிலை!
-கால்வாய் தடுத்தோர் பொருட்டில்லை!
உண்மை உழைப்பும் உம்நிலமும்
-உதவும் பயிர்கள் கருகாது!

நிலத்தில் நல்ல மூலையிலே
-நீரே செவ்வகக் குழியெடுப்பீர்!
கலத்தில் எடுத்த நீர்போலக்
-கண்ட முதலாம் மழைநீரை
நிலத்தி னுள்ளே சேமிப்பீர்!
-நேரம் கண்டு பாய்ச்சிடுவீர்!
உலர்ந்து பயிரும் காயாமல்
-உபயோ கித்துப் பயன்பெறுவீர்!

நன்றாய் மழையும் பெய்நாளில்
-நமது குட்டை பயனில்லை
என்றே எண்ண வேண்டாம்நீர்!
-இருக்கும் நீரில் மீன்வளர்ப்பீர்!
அன்றி, பருத்தி போன்றவையும்
-அதிலே உபரிப் பயிர்செய்து
குன்றா விருத்தி காண,முது
-குளத்தூர் பகுதி சென்றறிவீர்!

---நன்றி: நீர்நிலைகளைக் காப்போம் கண்ணீர் எதற்கு? தண்ணீர் இருக்கு! -கட்டுரையாளர்
எம்.செந்தில்குமார்.---புதிய தலைமுறை

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (16-Feb-13, 1:22 pm)
பார்வை : 132

மேலே