எனக்குப் பிடித்த இவ்வாரக் கவிதை....

எழுதியவர் :
நாள் :2013-01-22 20:38:08
Added by :Theetchanyaa
பார்வை :37

உன் உடனிருப்பு
**************************
சுவாசிப்பது போல்
இயல்பாக இருக்கிறது
உன்னை நேசிப்பதும்....

கவன ஈர்ப்பு..
**********************
பிரசவித்த மறுகணமே
கவனிப்பை யாசிக்கும்
குழந்தை-
கவிதை.....

நிழலென நீ....
************************
நிழலைப்போல்
உடன் வருகின்றன
உன் நினைவுகள்-
நீ விடைபெற்ற பின்னும்...

சரி நிகர் சமானம்
****************************
பணிச்சுமையில் வதங்கி
நள்ளிரவில்
வீடு திரும்புகையில்
இயலாமையோடு
அழுதபடி இருக்கும்
குழந்தை...
நேசம் மேலோங்க
இழுத்தணைக்கும் நொடியில்
புகாரோடு அழைக்கும்
தொலைபேசியின் குரல்
அறுத்துபோடும்
இரவின் நிசப்தத்தையும்
என்
தாய்மையின் கண்ணியையும்

மெல்லினம் ??
***********************
புத்தகம் சுமந்தபடி
சிறப்பு வகுப்பு செல்கையில்
அப்பா உரைப்பார் -
"பாத்து போம்மா"
இரவு பணிக்கு
வாசல் தாண்டும்போது
கணவர் சொல்வார்
"பத்திரமா போயிட்டு வா "
கடத்தல் லாரிகளை
பிடித்துவந்து நிற்கையில்
மேலதிகாரி அறிவுரைப்பார்
"கூட யாரையாவது கூட்டிட்டு போ "
சிங்கம் மீதமர்ந்து
சிலிர்த்து செல்லும்
காளியிடம் யார் சொல்வீர்கள்
"பார்த்து போ " என்று?

ஒரு இல்லத்தரசியின் டைரி குறிப்பு
*************************************************
கவிதை எழுத வாங்கியது
இந்த டைரி.....
முழுவதுமாக நிரம்பிவிட்டது
வீட்டு கணக்குகளாலும்
சமையல் குறிப்புகளாலும்..

நிமிர்ந்து நில்????
*************************
நிமிர்ந்த நடையும்
நேர்கொண்ட பார்வையும்
கைவரவே இல்லை......
புத்தக சுமையில்
வளைந்துபோனது
முதுகும் இளமனதும் ......

எழுதியவர் : Theetchanyaa (18-Feb-13, 10:14 am)
பார்வை : 283

மேலே