பெரும்புலவர் அரசஞ்சண்முகனார்
பெரும்புலவர் அரசஞ்சண்முகனார் எங்கள் ஊர் சோழவந்தானில் 1868ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பிறந்தார். அவ்வூர்த் திண்ணைப் பள்ளியில் கல்வி கற்றார். எழுத்திலக்கணம், நிகண்டு, அந்தாதி ஆகியன கற்றுத்தேர்ந்தார். பின்னர், அவ்வூரிலுள்ள பேட்டை, கிண்ணிமங்கல மடம் என்ற இடத்திலிருந்த சிவப்பிரகாச சுவாமிகளிடம் சங்க நூல்கள், இலக்கண, இலக்கியங்கள், தருக்கம், ஜோதிடம் ஆகியன கற்றுப் புலமை பெற்றார்.
இவர் எழுதிய நூல்கள்:
சிதம்பர விநாயகர் மாலை
மாலை மாற்று மாலை
ஏகபாத நூற்றந்தாதி
இன்னிசை இருநூறு
மதுரை மீனாட்சியம்மை சந்தத் திருவடிமாலை
திருவடிப்பத்து
நவமணிக்காரிகை நிகண்டு
வள்ளுவர் நேரிசை
இசை நுணுக்கச் சிற்றுரை
தொல்காப்பியப் பாயிர விருத்தி
திருக்குறளாராய்ச்சி
திருக்குறட்சண்முகவிருத்தி
எனப் பலவாகும்.
சண்முகனார் மதுரை சேதுபதி உயர்பள்ளியில் தமிழாசிரியராகப் பன்னிரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். பள்ளித் தலைமையாசிரியர் 1902 ஆம் ஆண்டில் ஒருநாள் மாணவர்க்குரிய பாட அட்டவணையில் தமிழ்ப்பாட நேரத்தைக் குறைத்திருந்தார்.
அங்கு தலைமைத் தமிழாசிரியராகப் பணியிலிருந்த சண்முகனார் தமிழுக்கு உரிய பாட நேரத்தை ஒதுக்கித்தர வேண்டும் என்று கேட்டார். தமிழ்தானே! அதனால் பயன் என்ன?" என்று தலைமையாசிரியர் மறுத்துவிட்டார். எனவே, அன்றே வேலையில் இருந்து விலகிக் கொள்வதாக எழுதிக் கொடுத்துவிட்டு, பள்ளியை விட்டு வெளியேறினார்.
இவரது எளிய தோற்றம் நாட்டுப்புறங்களில் வேலை செய்யும் உழவனை நினைவுபடுத்தும். உடம்பை மறைக்க நான்குமுழம் வேட்டி; மேலே ஒரு துண்டு; தலையிலே சிறு குடுமி; வெற்றிலைக் காவி படிந்த மீசை; அடிக்கடி நோயினால் மெலிந்து காணப்படும் உடம்பு; இறைவனை என்றும் நினைவுபடுத்தும் நீறு.
எனவே, ‘ஏகபாத அந்தாதி’ என்று முப்பது வெண்பாக்கள் எழுதி, மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றச் சென்றபோது, பார்த்த அறிஞர்கள் இவர்தாம் இப்பாக்களை இயற்றினாரா என்ற சந்தேகம் கொண்டு அவர்தம் பாக்களுக்கு பொருள் சொல்லுமாறு வேண்டினார்களாம்.
சண்முகனாரும் ஊரிலிருந்து மதுரைக்குச் சென்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடலுக்குப் பொருள் சொன்னாராம். இன்னும் சந்தேகம் விலகாத தமிழ்ச் சங்க சான்றோர்கள், முப்பது பாக்களை நூறு பாக்களாக்கும்படி பணித்தார்களாம். மீண்டும் தினமும் ஒரு பாடலாக இயற்றி நூறு பாடல்களைப் பாடி, பொருள் விளக்கமும் அளித்து ‘ஏகபாத நூற்றந்தாதி’ ஆக்கினாராம்.
மதுரைத் தமிழ்ச்சங்கம், 14.09.1901 இல் தொடங்கப்பட்டது. அதன் பயனாய் உருவாகிய சேதுபதி செந்தமிழ்க் கலாசாலையில் 1902 முதல் 1906 வரை அரசஞ் சண்முகனார் ஆசிரியர் பணியில் நான்கு ஆண்டுகள் பணி புரிந்தார்.
மதுரைத் தமிழ்ச்சங்கம் தொடங்கிய காலம் முதல் இறுதிக்காலம் வரை உ.வே.சா, மறைமலையடிகள், மு.இராகவையங்கார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், இரா.இராகவையங்கார், மு.ரா. அருணாசலக் கவிராயர் ஆகிய பலரிடம் நட்பு கொண்டிருந்தார்.
ஆராய்ச்சியாலும், தொண்டினாலும் தமிழ் அறிஞர்களின் மனதில் என்றும் வாழ்ந்து வரும் சண்முகனார் அவரது 47 ஆம் வயதில் 11.01.1915 ல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.