[416] ++++ கவிதை யாகப் பூப்பேன் !...+++++

காலம் கடந்து வாழும்
----கவிஞர் இங்கே இல்லை!
காலம் கடத்திப் போன
----கவிஞர் தாமே அதிகம் !
பாலம் என்றே இருந்தோர்
----பாதத் தின்கீழ் பார்த்தார்,
ஓலம் இட்டே நீரும்
---ஓடிப் போகும் காட்சி!


அண்ட வெளிக்குள் எல்லாம்
----அணையும் கோள்கள் தாமே!
கண்ட கோள்கள் கொஞ்சம்!
----காணா தவையோ கோடி!
அண்டங் காக்கை நானே!
----ஆனால் என்ன தமிழும்
கொண்டாள் என்னை அணைத்துக்
----குழந்தை பொன்குஞ் சானேன்!

செண்டு தருவார் காலில்
----சென்றும் வீழ மாட்டேன்!
சிண்டு முடிவார் தம்மைச்
----சிவந்தும் பார்க்க மாட்டேன்!
தொண்டு செய்வான் போலத்
----தோற்றம் காட்ட மாட்டேன்!
கண்டு கொள்வார் என்னைக்
----காதல் தமிழ்மேல் உள்ளோர்!

பண்டு வாழ்ந்த புலவர்
----பழக்கம் எனக்கு நூலால்!
கொண்டு வந்த தில்லை!
----கொண்டு போவ தில்லை!
துண்டு போடா விட்டால்
----துவண்டு போக மாட்டேன்!
கண்டு போடும் குழியுள்
----கவிதை யாகப் பூப்பேன்!
++++++ ++++++++

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (22-Feb-13, 7:40 pm)
பார்வை : 144

மேலே