மறைநிலவு நாளில் முழுநிலா

உன் சிலநேர
மௌனங்களைக் கொய்தும்
உன் பலநேர
சொற்பூவை நெய்தும்
கவிஎழுதலாம்
என்று நினைத்தால்
உன்னிடமிருந்து
கொட்டும்
உணர்வின் அடர்த்தியை
முழுமையாய் சொல்ல
வார்த்தை இல்லை...
உன்
கண்ணென்னும்
கவித்துவ அகராதியின்
வார்த்தை வளத்தை
புரிந்துகொள்ளாத
மக்குப்பிள்ளை நான்.
வெண்ணிலவு உதிர்ந்த
ஒரு மறைநிலவு(அமாவசை)
நாளில்...
மின்மினிப்பூச்சிகள்
பூத்துக் கொட்டும்
ஒரு பனைமர நிழலில்
ஊருக்குத்தெரியாமல்
ஊர்க்கதைப் பேசினாய்...
முழுநிலவாய் என்னருகில்.
உண்
முகப்புத்தகமும்
இதழ்ப்புத்தகமும்
புரட்ட புரட்ட
உணர்வுகள் சுரக்கும்
அமுதப்பெட்டகமாய்
இன்னும் நீள்கிறது.
உன் வார்த்தை வழித்தடத்தில்
சுகம் வழிந்து நிரம்ப
வானம்பூமி இல்லாத
புதிய இடத்தில்
மிதக்கிறது நம் உரையாடல்...
நீயோ
விண்மீன்களைக் கொண்டுசெய்த
சொல்லெடுத்து வருபவள்
நான் என்செய்வேன்
பத்திரமாகப் பிடித்து
பாதுகாக்கிறேன்
என் மூளை உண்டியலில்.
நான் உணர்ந்துகொள்ளமுடியாத
உணர்ச்சிப்பிழம்புநீ
நான் உருக உருக
நீ
என்னுள் வழிகிறாய்...
பேருந்துநிறுத்தம்
பிள்ளையார்கோயில்
ஆலமரநிழல்
இவற்றையெல்லாம் தாண்டி
வெண்ணிலவில் பேசுகிறோம்
பால்வெளியில் பயணம் செய்கிறோம்
சூரியனின் நிழலில்
முத்தவில்கொண்டு போர் செய்கிறோம்.
என்ன சொல்வதென்றே தெரியவில்லை
நம் காதல் வரவர
பூமியிலே இருப்பதில்லை.
வா பெண்ணே!
வந்து நம்காதலை
இந்த ஊருக்குள்ளும்
பாயவிடேன்.