அழகாய் ஒரு கடவுள்....

அழகழகாய்
நீ வரைந்திருந்த
கடவுள்களின் ஓவியங்களை
இரசித்தபடியே.....உன்னைக் கேட்டேன்...
"கடவுள் அழகாய்த்தான் இருக்க வேண்டுமா?...
அம்மை வடுவோடு...ஒன்றரைக் கண்ணோடு...
சப்பை மூக்கோடு இருப்பது....
கடவுள் ஆகாதா?"...என்றேன்.

என் கேள்வியையே ஏற்க மறுத்த நீ...
கடவுள் என்றாலே... அழகுதான்....
என்றாய்.

அம்மைவடு மூஞ்சிதான் உனக்கு.
கொஞ்சம் ஒன்றரைக் கண்ணும்....
சப்பை மூக்கும்கூட.

என்றாலும்-
உன் அன்பும்.... கரிசனமும்....
நீட்டித்துக் கொண்டிருக்கும்
என் அம்மாவின் ஆயுளைப் பார்க்கையில்...

கடவுளுக்கு....
"அழகும் ஒரு விதி"....
என்பதை ஏற்கவே முடிவதில்லை எனக்கு.

எழுதியவர் : rameshalam (23-Feb-13, 6:34 pm)
பார்வை : 141

மேலே