நம்மைச் சுற்றி(பகுதி 3)

சுத்தம்
நண்பர்களே! இந்தப் பகுதியில் நாம் சுத்தம் பற்றியும் கொஞ்சம் அலசுவோமே!
வீடுகள் சுத்தமாக இருந்தால்தான் ஒரு வீதி சுத்தமாக இருக்க முடியும்.வீதிகள் சுத்தமாக இருந்தால்தான் ஒரு ஊர் சுத்தமாக இருக்க முடியும்.
ஊர்கள் சுத்தமாக இருந்தால்தான் இந்த நாடு சுத்தமாக மாற முடியும்.
நம்மைச் சுற்றிலும் எங்கு பார்த்தாலும் குப்பைகளைப் போட்டு வைத்துக்கொண்டு ,அவற்றுக்கு நடுவே வாழ்ந்து கொண்டிருந்தால்,
நமக்குள் எப்படித் தூய்மையான எண்ணங்கள் வளரும்?
நமது நாட்டில் எங்கு பார்த்தாலும் அலட்சியம்.
யார் எப்படிப் போனால் என்ன? நமது காரியம் ஆனால் போதும் என்கிற மனப்பான்மையே
நமது சுற்றுப் புறங்களைக் கெடுக்கின்றது .
ஏற்கனவே நமது தொழிற்சாலைகள் ,போட்டி போட்டுக்கொண்டு ரசாயனக் கழிவுகளை ,நீர்நிலைகளிலும் ,ஓடைகளிலும் ,ஆறுகளிலும் கொட்டிக் குடிநீர் முதல் நிலத்தடி நீர் வரை கெடுத்து விவசாயத்தையும் பாழடித்து விட்டனர்.
இந்நிலையில் நாமும் கண்ட இடங்களிலும் குப்பைகளைக் கொட்டி நிலத்தைப் பாழடிக்கத்தான் வேண்டுமா?
இந்தக் குப்பைகளைப் போடுவதில் அனைவருக்கும் கொஞ்சமாவது சமூகப் பொறுப்பு தோன்ற வேண்டும் என்பதே இக்கட்டுரையின் எதிர்பார்ப்பு!
படங்களிலும் ,வலைத்தளங்களிலும் பார்க்கும்போது வெளிநாடுகள் எல்லாம் சுத்தம் ,சுகாதாரம் என சென்றுகொண்டிருக்கையில் நம் நாடு மட்டும் ஏன் அசுத்தங்களின் நடுவே குப்பை கொட்ட வேண்டும்?(வாழ வேண்டும்?)
நமது அரசாங்கம் இந்தக் குப்பைகளை ஒழிக்க எவ்வளவோ நவீன முயற்சிகளை மேற்கொண்டும்
இந்தக் குப்பைகள் ஒழியாததற்கு யாரெல்லாம் காரணம்.?
*அரசியல் கட்சிகள் அவ்வப்போது நடத்தும் தேவையில்லாத கூட்டங்களின்போது பிளாஸ்டிக் கொடிகள்,பதாகைகள் ,கொடிக்கம்பங்கள்,கூட்டங்களுக்கு வந்தவர்கள் சாப்பிட்ட உணவுக் கழிவுகள் ,சுவரொட்டிகள் போன்றவை.
*உணவு விடுதிகள் மற்றும் குடிமன்னர்களின் விடுதிகளில் இருந்து வீசப்படும் குடிநீர் பாட்டில்கள் ,தம்ளர்கள்,இலைகள்,மீதமான கெட்டுப் போன உணவுப்பொருட்கள் போன்றவை.
*பொதுமக்களாகிய நாம் உபயோகப் படுத்தும் வீட்டுக் குப்பைகள்,பாலிதீன் பைகள் ,காய்கறிக் கழிவுகள் போன்றவை.
*வீட்டுக்கு வீடு தேவைக்கு அதிகமாக வாங்கி வீணான மின்சாதனப் பொருட்களின் கழிவுகள்
*கோழி,ஆடு,மாடு,மீன் போன்ற இறைச்சிக் கடைகளின் குடலைப் புரட்டும் கழிவுகள்.
அரசாங்கம் ஏறக்குறைய எல்லா வீடுகளுக்கும் இரண்டிரண்டு குப்பைத்தொட்டிகள் கொடுத்து ஒன்றில் மட்கும் குப்பைகளையும் ,மற்றொன்றில் மட்காத குப்பைகளையும் போடசொன்னார்கள்.
நிறைய இடங்களில் அவற்றை மக்கள் தண்ணீர் பிடிக்கவும்,துணிகள் அலசும் வாளிகளாகவும் பயன்படுத்துகின்றனர். அதே போல் தெரு முனைகளில் இரண்டு குப்பைத்தொட்டிகளை வைத்துத் தரம் பிரித்துக் குப்பைகளைப் போடச்சொன்னார்கள். நம் மக்கள் அதையும் கேட்காமல் போகிறபோக்கில் தொட்டியில் பாதியும் தெருவில் மீதியுமாக வீசிவிட்டுச் செல்கிறார்கள்.இவை காற்றில் அலைந்து தெருக்கள் முழுவதும் அசிங்கப் படுத்துகின்றன.
எல்லாம் சரி! என்னதான் தீர்வு என்கிறீர்களா?
"தீதும் நன்றும் பிறர் தர வாரா!"
நம் பிரட்சினைகளுக்கு நாம்தான் மனது வைக்க வேண்டும்.
*இனிமேல் குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் மட்டுமே போடுவோம்!
*தேவையில்லாத் பொருட்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தி அதனால் உண்டாகும் குப்பைகளைத் தவிர்ப்போம்.
*இது நமது வீடு,நமது தெரு,நமது ஊர்,நமது நாடு என்ற பொறுப்புடன் செயல்படுவோம்.
செய்வீர்கள்தானே! நம்பிக்கையுடன் செயல்பட்டால் எதுவும் சாத்தியம்.
இந்தக் குப்பைகளை எப்படிப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவது என்று அடுத்த பகுதியில் சொல்லித் தருகிறேன் ! -------தொடர்வோம்ல---
(கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன)