அந்தி சாயும் நேரம் ................

ஒரு அதிகாலை நேரம் சொன்ன நேரத்தில் கிரவுண்டில் நின்றிருந்தான் ஜாகிர் தன் கூட்டாளிகளுக்காக காத்திருந்தான். “லே ... சீக்கிரம் வாயம்ல” ...தூரத்தில் வந்துகொண்டிருந்த சாகுலை அழைத்தான் ...
ஒருகையில் அலி ஸ்டோர் பையில் குரானையும் மறுகையில் மாட்டுக்கறி ஜாகிர்பாய் கடையில் இருந்து பொறுக்கிய இறைச்சி கழிவுகளையும் சுமந்து கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட ..சாரம் கால் தட்ட வந்துகொண்டிருந்தான்
சாகுல் . “லே.. அப்பா ஓதுற பள்ளியிலே லேட்டக்கிட்டர்ல”... சொன்னபடியே கையில் கொண்டுவந்த இறைச்சியை ஜாகிரிடம் கொடுக்க .
பள்ளி மைதானத்தின் வடமேற்கில் உள்ள ஓடைமர புதருக்குள் நகர்ந்தனர்
ஓடைமுட்களை வளைத்து முடிந்து ஆற்று மணல் பரப்பி அழகாக காட்சி தந்த கூடாரத்தில் காத்திருந்த மொகைதீன் மற்றும் அமீருடன் சேர்ந்தனர் .
ஜிம்மி- அவர்கள் கூடாரத்தில் வளர்க்கப்படும் நாயிற்கு இறைச்சி இட்டுகொண்டிருந்தான் அமீர் . கூடாரத்தில் ஜிம்மிக்கு நிரந்தரமாய் இடம் உண்டு.ஜிம்மிதான் தினம் தினம் ஒரு முகத்துடன் காட்சி அளிக்கும். ஆம் தங்காமல் ஓடிபோகும் நாய் குட்டிகளை பற்றி கவலை படாமல் தினம் ஒரு நாய் குட்டியை தூக்கிக் கொண்டுவந்துவிடுவான் அமீர்.
பிறகு “லே.. சாயந்திரம் .. ஒழுங்கா வேட்டைக்கு வந்திரனும்லே” ... கட்டளையிட்டான் ஜாகிர். அனைவரும் வீட்டிற்க்கு கலைந்தனர் .
அசருக்கு பின் ஓதுற பள்ளிக் கூடத்தை விட்டு நேராககூடாரத்தில் ஆஜராயினர் அந்த வேட்டை வீரர்கள் வழக்கம் போல் சாகுலின் அலி ஸ்டோர் பையில்சாரத்தை மடித்து வைத்து விட்டு டவுசருடன் வேட்டைக்கு கிளம்பினர் ஜிம்மி யுடன் –
வேட்டை உப்பு ஓடையின் மறுகரையில் உள்ள இடுகாடு தாண்டி உடைந்த செல்வம் தியேட்டர்வரை உள்ள புதர்களில் லட்ட்சியமற்ற பயணமே வேட்டை.. கவுட்ட வில்லுக்கு சிக்காமல் மரத்தில் மறையும் ஓணானையும்
அமீரால் லாவகமாக பிடிக்க படும் பச்சை பாம்புகளையும் தவிர வேறொன்றும் இருக்காது அவர்கள் வேட்டையில் .”லே .. நில்லுல ..ஏதோ சத்தம் கேட்கு...”பேச்சில் இருந்த மொகைதீனை அமைதிபடுத்தினான் ஜாகிர்
“ஆமல ... குட்டி நாய் சத்தம் கேக்கு” ஆமோதித்தான் அமீர். சத்தத்தை பின்தொடர்ந்து வந்து காளியாப்பன் கிணற்று முகட்டில் வந்து நின்றனர் ..
பாழடைந்து பாதி நிரப்ப பட்ட கிணற்றில் .... ஒரு நாய்க்குட்டி விழுந்து கிடந்தது .....வெள்ளையில் பழுப்பு கலந்த குட்டி நாயினை எட்டிப்பார்த்த முஹைதீன் ....”பாவம...... ல ....என்றான் ஒரு வரை ஒருவர் பார்க்க.....
“எப்படில மேல தூக்குறது” ......இறங்க முயற்சித்த முஹைதினை தடுத்தான் அமீர்.....”லே ..மாப்ள பிடிமான கல்லு சரியில்லல ...மண்ட கிண்ட ஒடன்ஜிரும்” ஓடைப்பட்டிருந்த பிடிகல்லை காட்டினான் .
அவர்களின் வேட்டை கவனம் எல்லாம் நாய்க்குட்டினை காப்பாற்றும் எண்ணத்தில் கரைந்து போயிருந்தது .சாகுல் தன் பையிலிருந்த சாரங்களை ஒன்றோடு ஒன்றாய் முடிச்சி போட்டு கயிறு போலாக்கினான் ..
மொகைதீன் நீ இந்த சாரத்த புடிச்சிகிட்டு கீழ இறங்கு .. நாங்க புடிச்சிகிறோம்” என்றான் அமீர் . போல முடிச்சி அவுந்துட்டுனா ... மறுத்தான் மொகைதீன் ...
காணாமல் போயிருந்த ஜாகீர் அப்பாவின் கம்பை எடுத்து வந்தான் ...
கைப்பிடி வளைந்த கம்பை சாரத்துடன் சேர்த்து கட்டி முயற்சித்தனர்
அமீர் நேக்காக கம்பின் வளைவினை நாயின் கால்களுக்குள் மாட்டி மெதுவாக மேலே தூக்கினான் ... சிறுது உயரம் வந்து நாய் வழுவி கீழே விழ
லே.. கோட்டியாள புடுச்சிருக்கு .. மேல வர வந்து கீழ விழுந்து இருந்தா நாய் செத்திருக்கும்ல ... அமீரின் மண்டையை தட்டினான்.. மொகைதீன்
லே மண்டைய தட்டுற வேலையெல்லாம் வைக்காத எங்க வாப்பா இப்பதான் அராபிய போயிருக்காங்க “ ஏதோ கெட்ட சகுனம் போல் முனகினான் அமீர்...
லே.. அமைதியா இருங்கள ... ரெண்டாந் தெரு பள்ளில நவரா அடிக்கிது பாங்கு சொல்ல போது ஓரமா நில்லு .. இப்ப சைத்தான்லாம்...உப்பாத்தோடைக்கு..ஓடிவரும் “ அமைதி படுத்தினான் ஜாகிர்
பைத்துசலாம் பள்ளியில் பெருக்கோல்அப்பா பாங்கு சத்தம் கேட்டது ....
லே... நான் மக்ரிப் தொழ போறேன் ... அசரத் அடிப்பாரு இன்னிக்கு கஸ்து நாள் வேற ..பயான் வேற இருக்கும் ... சொல்லிகொண்டே நகர்ந்த சாகுலை பார்த்து
போல ... போ.. நாளைக்கு கூடாரத்துக்கு வந்துராத... அசரத் என்கலமட்டும் கொஞ்சுவாங்களாக்கும்...அடிவாங்குனா.... ஒண்ணா வாங்குவோம் .... என்று முறைத்தான் அமீர் .
சில நேர முயற்சிகளில் ...நின்ற அமீரின் கண்கள் சாகுலை பார்த்தது
லே... என்கயிருந்துல எடுத்துட்டு வருற .... தூரத்தில் சாகுல் கையில் வாலியுடன் திரும்பி வந்து கொண்டிருந்தான் ...........
சத்தம் போடாதல.... சர்ச்சில இருந்துதான் ....
கிரவுண்டுக்கு அருகில் உள்ள சர்ச் மதிலை தாண்டி குதிப்பது மிக சாதரணமான விஷயம் சாகுலுக்கு....
சாரத்தினால் செய்திருந்த கயிறின் ஒருமுனையை வாளியில் கட்டி இறுதியில் தண்ணீர் கோருவதுபோல் நாயை கிணற்றில் இருந்து கோரினர் ...
வாளியில் குட்டிநாய் ... மேல நோக்கி வந்திருந்தது ....
அமீரும் மொகைதீனும் குட்டிநாயை நெஞ்சோடு அணைத்தனர் . ஆரவாரத்துடன் ஜிம்மியுடன் குட்டிநாயை சேர்த்து கூடாரத்தில் விட்டு விட்டு அந்தி சாயும் வேளையிலே .... ஆரவாரத்துடன் ... பள்ளிவாசல் நோக்கி நடந்தனர் ...
கடைசியில் சாரத்தை மடித்து வைத்திருந்த சாகுல் “லே.. சாரத்த உடுக்குவோம்லே.”....என்றான்
“போல...பள்ளிலே போயி உடுக்கலாம்லே “....சிரித்தபடி அமீர் சொல்லிகொண்டிருந்த அதே நேரத்தில் தொழுகைக்கு பின் உள்ள பயானில்
தன் ஆடையை நீரில் முக்கி நாயின் தாகம் தீர்த்த விபச்சாரியும் சுவர்க்கம் செல்வாள் என்ற பொருள் பதிந்த ஹதீஸை ...சொல்லிகொண்டிருந்தார் அசரத்...
நிச்சயமாக அந்த சமயம் அவர்கள் அந்த ஹதீஸை கேட்டிருக்க வில்லை ...
கருக்கல்..காத்திருந்த வெளிச்சம் தன் கடைசி புன்னகையை அவர்கள் மேல் வீசி மறைந்திருந்தது ...........

எழுதியவர் : சிந்தா (24-Feb-13, 1:33 pm)
பார்வை : 350

மேலே