திசைமாறிய பயணம்...
தோழா...!
நில்...!
செல்லும் வழி சிறந்ததா ?
சிந்தனை செய்
ஆம், திசை மாறிவிட்டாய் !
இல்லை ! திருப்பிவிட்டனர்...
தோழா...!
எண்ணிப்பார் தொடக்கத்தை
சாதனைகள் புரிய வந்த எம்மை
வேதனையின் விளிம்பில்
விட்டது யாரோ ?
நாகரீகமெனும் பெயரில்
நயவஞ்சகர்கள் உன்னை
அநாகரிகத்தில்
அமிழ்த்தி விட்டனரோ...?
பள்ளிக்கூடம் சென்று
பட்டம் பல பெற வேண்டிய உன்னை
பாதகர்கள் செய்த
பாவமோ திசைமாற வைத்தது...?
தோழா...!
விடுதலையெனும் பெயரில்
வீண் ஆசை காட்டி
விளைச்சலை பெற்றுவிட்டு
வேரறுத்து விட்டதென்ன ?
திசை மாறிய பயணம்
தீர்மானம் உண்டோ
தீர்வுகள் வலியவை
திவலையாய் சிதறாதே...!
தடைகளை உடைத்து
தன்மனதிற் சொல் கேளாது
தன்னந்தனியே நீ
தத்தளிக்கின்றாயே...!
வீரனாய் வாழ்ந்தோம்
வீரமரணம் அடையவோ ?
விதையாய் வீழ்ந்து
விண்ணைத்தாண்டி வருவோம்
விஸ்வரூபம் எடுப்போம்
தோழா...!
வாலிபப் பருவமிது
வாட்டங்கள் நீங்கட்டும்
வார்த்தைகள் வலுப்பெறட்டும் வாழ்வோம் சிறந்து...!
வருந்தியது போதும்
வள்ளுவர் சொல் கேட்பாய்
வானளவு வளர்வோம்
வருவாய் இன்றே...!
தொல்லைகள் நீங்கிவிட்டன
தொந்தரவுகளும் ஏதுமில்லை
தொக்கி நிற்காது
தேடிப்பார் நல்வழியை
தொடர்வாய் அவ்வழியே...!
சாபங்கள் ஏதுமில்லை
தரித்திரம் ஒழித்து
சரித்திரம் படைப்பாய்
இன்றே திரும்புவாய் நல்வழிக்கு
தோழா...!
எண்ணிப்பார் எதிர்காலத்தை
ஏன் முடியாது ?
நம் பயணம்
நம்முடையதே
முடிவுகள் மிளர வேண்டும் - நீ
மடிந்த பின்னும் தான்