செத்தாற் சிரிப்பாயோ?

செத்தேனாம் என்றாற் சிரித்திடவோ யன்னைநீ
சித்தங் கொண்டாய்
எத்தேனும் பாகுடனே இனிப்புங் கலந்துன்னை
இரந்துகொள்வேன்
வித்தேனோ என்னில் விரும்பித் தமிழூன்றி
விளைத்தா யின்றோ
கத்தேனோ ஒவென்று கத்திக் கதறுமுயிர்
காவாயோ சொல்

உற்றேனோ உள்ளத்தே யுருகித் தமிழ்சொல்லும்
உணர்வையீந்தாய்
சற்றேனும் நெஞ்சத் தழல் தனை ஆற்றென்னச்
சஞ்சலத்தில்
பற்றேனோ என்றேதீ பற்றவே கூற்றுவன்
பாதாளத்தில்
நிற்போனைக் கொண்டுடல் நீறாக்கி நீரிடவோ
நெஞ்சங்கொண்டாய்

கற்றேனோ யின்பங்கொள் கவிசெய்யும்
சொற்கூட்டக் கலையைஎங்கும்
சொற்தேனோ கொள்ளச் சுவைமிக்க பாமலர்கள்
செய்யும் வண்ணம்
பற்றேனோ கொண்டென்னில் பரவச வுணர்வீந்து
பாடவைத்தாய்
முற்றேனோ வைத்திடவும் முடிவுசெய்தாயின்று
மூலப் பொருளே

சொல்லுஞ் சுவைக்கரும்பில் சுற்றிமலர்
பூந்தமிழின் சோலைப்பூக்கள்
வில்லுங் கணையென்றே வித்தகனாய்
வைத்துமங் கதன்போ லென்னை
அல்லும் பகற்கணைகள் அள்ளியெறி என்றுவிதி
யாக்கிப் பின்னே
சொல்லுன் தூயமனம் தீயெண்ணங் கொள்ளெனச்
செய்தவர் யார்?

எள்ளு மிவன் என்றே யெண்ணியுன் திருப்பாதம்
கொண் டுதைத்து
தெள்ளென் சுவைப்பாவைத் தீட்டிய நல்லோவியம் திங்கள்வானில்
உள்ளதெனப் பிரகாச ஒளிசெய்தாற் போலென்னை
உணரவைத்துக்
கொள்ளக் குறையாகித் தேயென்று கொடும்
வரத்தைக் கொடுத்ததேனோ

அள்ளித்தா எனதன்பின் அன்னையிலும் மேலான
அருட்சுடரே
கொள்ளத் தணல்மீது குற்றுயிராய் கிடவென்று
கூறல்விட்டு
வெள்ளி தாரகையாய் வானத்தின் கதிரெறிக்கும்
வீச்சாய்சக்தி
துள்ளித்தான் கொண்டோடிச் சுந்தரமாய் தூயதமிழ்
செய்யென்றாக்காய்

--------------------

எழுதியவர் : கிரிகாசன் (28-Feb-13, 12:02 am)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 100

மேலே