இயற்கையின் பதில் ??

செக்கச் சிவந்த வானம்,
. .சிறுவெண் பனிநீரோடை
பக்கத் தினிலோர் கோவில்,
. .பாடித்திரியும் குயிலும்
சொக்கும் அழகில் வயல்கள்,
. .சுதந்திரக்காற் றின்வீச்சு
பக்க மடித்திட மெய்யில்
. .படர்ந்தே யின்பமுந் தருமே

தங்கம் போலொரு தோற்றம்
. .தகதகமின்னும் வெய்லோன்
செங்கல் குவித்த சூளை
. .சேரும் செம்மை வானம்
தங்கும் முகிலின் வண்ணம்
. .தானென் றாக்கி மேற்கில்
எங்கோ வீழ்ந்த்திடப் போகும்
. .இரவின் பகையாம் இரவியும்

தெங்கும் பனைவிட்டோலை
. .திடுமென் றதிரிடவீழ
செங்கனி தின்றிடு மணிலும்
. .திகைத்தே அஞ்சியுமோட
எங்கும் பரவிடு மௌனம்
. .இரையும் காற்றின் சரசம்
அங்கம் சிலிர்க்கும் அமைதி
. .அடடா என்றே கண்டேன்

முட்டித் தலையிடி போட்டு
. .மூர்க்கம் பிடிக்கும் ஆடு
திட்டித் தீர்த்திடுங் கிழவி
. .தெளிவற் றொதுக்கும் சிறுபெண்
சட்டெனத் தாவிடும் மீன்கள்
. .சலசல வென்றிடு சுனைநீர்
மொட்டவிழ் மாலைப்பூக்கள்
. .மயங்கும் மனங்களன்றோ

பட்டுச் சுருங்கு மிலைகள்
. .படர்ந்த தொட்டாற் சிணுங்கி
தொட்டாற் தோலினை பற்றி
. .தீயாயெரி காஞ்சோன்றி
முட்களில் பட்டேநோகும்
. .முனையுடன் நாகதாளி
எட்டிக் கொத்திடு மரவம்
. .இயற்கை எத்தனை அழகு

எட்டா ஆழமென்கிணறு
. .இறைக்கு மியந்திரச் சத்தம்
முட்ட வழிந்திடும் தொட்டி
. .மூழ்கி எழுமோர் சிறுவன்
தட்டச் சிதறிடும் தண்ணீர்
. .தரையில் குளிர்மைச் சுகமும்
வெட்டவெளி எதிர்சத்தம்
. .விளைக்கும் இன்பம் பெரிதே

பட்டிலெழிற் பாவாடை
. .பாவை யணிந்தவள் செல்ல
கொட்டவிழித்திடும் கண்கள்
. .குறுநகை சிந்திட நாணம்
மொட்டு மலர்விரி வதனம்
. .மௌன மழைமுகில் குழலும்
தட்டினை ஏந்திய தாயார்
. .தன்கரம் கொண்டுசெல் கோவில்

வட்டக் குளத்திடை பூக்கள்
. .வந்தம ருஞ்சிறு குருவி
வீட்டெறிகல் கவண் சிறுவன்
. .விளையாட்டில் தீதெண்ணம்
பட்டுவிழுந்தால் குருவி படு
. .முயிர்வேதனை சொல்லி
குட்டியவன் பொருள்கொண்டு
. .குரலழ கூட்டிநடந்தாள்

இத்தனை அழகிய வாழ்வில்
. .இருந்தவர் இடிவிழவைத்து
கொத்தென கூட்டியழித்து
. .குரலற கத்தியும் பார்த்து
செத்தனர் என்றுலகன்று
. .சிறுமை கொண்டெதிர் கண்டு
வைத்த நெருப்பதுஎன்று
. .வையகத்தில் தீதழிக்கும்

.

எழுதியவர் : கிரிகாசன் (1-Mar-13, 9:59 am)
பார்வை : 135

மேலே