மீண்டும் உன் மீள் வருகை காண ..

காலையின் விடியல்
என்
கதவை தட்டியதாய்
உணர்ந்தேன்
தூக்கங்களை
போர்வைக்குள் மூட்டைகட்டிவிட்டு
எழுந்து சென்று
கண்களை கசக்கி
கதவைத் திறந்தேன்
வானம் என் முன்
வடிந்த வாறு நின்றிருந்தது

இன்னும் நிலவு
இரவின் மடியில்
இனிமை கீதம் பாடி
உல்லாசமாய்
ஊர்வலம் வந்ததை
உணர்த்தியது சில்லுச்
சில்லாய் சிதறிக் கிடந்த
பனித் துளிகள்

சிதறிய நிலவுக்கு
பாய் விரித்திருந்தது
நீண்டு வளர்ந்த புற் தரைகள்
இரவுக்குள் இமை தழுவி இருந்தது
இன்னும் அந்த
நிலாக் காலங்கள்

மீண்டும் உன் மீள் வருகை
காண
நாளும் நான் பார்த்திருக்கிறேன்
நீ வருவாயென காத்திருக்கிறேன்

உன் பாதம் பட்ட மறு கணம்
என் வானமும் - இருள்
விலக்கி ஒளி துலக்கும்
என பார்த்திருக்கிறேன்
அந்த நாளுக்காய்
காத்திருக்கிறேன்

அன்றேனும்
என் தேசம் எல்லாம்
வாசம் கொள்ளும்
அன்றேனும்
என் பூக்கள் எல்லாம்
புன்னகைக்கும்

அன்றேனும்
என் இரவுகள் நிலவுடன்
விழித்திருக்கும்
அன்றேனும்
நான் எனும் நான்
நீயாய் இருப்பேன்

துடித்துக் கொண்டிருக்கின்றன
என் இமைகள்
விழித்துக் கொண்டிருக்கின்றன
என் விழிகள்
மீண்டும் உன்
மீள் வருகை காண .......

எழுதியவர் : ரொசானா ஜிப்ரி (4-Mar-13, 10:14 am)
பார்வை : 165

மேலே