வறுமைக்குப் பிறந்தவர்கள் நாங்கள்
வறுமைக்குப் பிறந்தவர்கள்
வாழ வழியின்றிப் போனவர்கள்
உணவு போட்டு நிரப்பும் வயிற்றை
காலிக் குடங்களாய் சுமப்பவர்கள்
வாழ்வை தேடிப் பார்க்கையில்
வறுமை வந்து பிடித்துப் போகிறது
பட்டினிப் போரில் நாளும் நாளுமே
பசி வந்து கிள்ளுது கொல்லுது
மண் தின்னும் உடம்பென்பதால்
மண்ணையா அள்ளித் தின்ன முடியும்?
பாலும் சோறும் உண்டு பார்த்திட
நிச்சயம் நாங்கள் நினைக்கவில்லை
கூழோ கஞ்சியோ கிடைக்காவிடின்
எலியோ பூனையோ எதுவோ எம் உணவு
ஆடாகவோ மாடாகவோ பிறந்திருந்தால்
செடியோ கொடியோ உண்டிருப்போம்
நிலத்தின் மீதுருளும் ஊர்வன ஆனோம்
நிரந்தரத் துன்பத்தில் மூழ்கிப் போனோம்
சத்தியமாய் வறுமை எங்கள் சொத்து
பசி தான் எங்கள் உயிருக்கு வித்து
எலும்பொடு சதை தைத்ததே மனிதக் கூடு
எலும்பை மட்டும் சுமந்த நாங்கள் எலும்புக் கூடு
எந்தையும் தாயும் ஏன் பெற்றார் எம்மை
குடல் பசியை உடல் பசி தின்று தீர்த்ததோ.?
மூன்று வேளையும் உணவு உண்ணுவோரே
உண்டதும் செறிக்க மருந்தும் தின்னுவோரே
ஒற்றைப் பிடி சோற்றுக்கு நாங்கள் படும் பாட்டை
சற்றே நீங்கள் எண்ணுவீரே பின் தின்னுவீரே!
(ஒரு வேளை உணவு கூட இல்லாமல் வாடும்(வாழும்) மனிதர்கள் இப்பூமியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு இறைவன் நல்கிய உணவை வீணடிக்காமலும், இயன்ற வரை இது போன்றவர்களுக்கு பசி போக்கவும் கொடுத்து மகிழ்வோம்)