நான் என்ற கர்வம்
நான் என்ற கர்வம், அகந்தை எனக்கு எப்போதுமே இருந்ததில்லை
ஆனால் நான் என்ற நினைவு இல்லாவிடில், நான் இல்லை
நான் உலக மக்கள் எனும் சமுத்திரத்தில் ஒரு துளிதான், பெரிதில்லை
ஆயினும், நான் இன்றி இந்த சமுத்திரத்தின் அளவு ஒரு துளி கம்மி, அதிகமில்லை
நான் 145 கோடி இந்தியர்களில் ஒருவன்தான் என்பதில் சந்தேகம் இல்லை
இருப்பினும் என்னைப் போல் இன்னொரு இந்தியன் இருக்க வாய்ப்பில்லை
நான் எனக்கு என்று ஒரு பாதை அமைத்தேன், இல்லை என்று சொல்வதற்கில்லை
ஆனால், அந்தப் பாதையில் அதிகம் கற்களே, முட்களே என்று சொன்னால் தவறில்லை
அந்த கற்களைக் கொண்டு தான் என் கற்பனை எனும் மனவீடு கட்டப்பட்டது, பொய் இல்லை
அந்த முட்களைக் கொண்டு தான் என் சிறிய கலைக் கூடம் அமைக்கப்பட்டது, மிகையில்லை
எனவே, நான் நானாகவே இருக்க, நான் என்ற உணர்வுடன் இருந்தால்தான், நான், நான் என்ற கர்வம் இல்லாமல் வாழமுடியும் என்பதில் சந்தேகம் இல்லை!