காடுகள் மலைகள்... தேவன் கலைகள்...!

எதார்த்தமாகத்தான் எல்லாம் நிகழ்ந்து விடுகிறது சொல்லி வைத்தாற் போல.

கனவுகளை எல்லாம் ஏதோ ஒரு காகிதத்தில் எழுத்தாக்கத்தான் என்னால் முடிகிறது. கோபத்தில் ஓவியம் வரையும் சில ஓவியர்கள் எனக்கு நண்பர்களாயிருக்கிறார்கள். நான் கோபத்தில் எழுதுவது கோபத்தைதான் என்று சொல்லும் போது அவர்கள் கோபத்தில் வரைவது அமைதியை என்று என்னிடம் சொன்ன போது எனக்கு ஆச்சர்யமாய் தோன்றவில்லை.

ஓவியம் என்பதே அமைதியின் வெளிப்பாடுதான். ஏதேனும் உக்கிரத்தில் உள்ளுக்குள் இருந்து கோபத்தை எழுத்தாக பிய்த்தெடுத்து வரிகளுக்குள் அடைத்து விடலாம். எழுத்தைப் போல ஓவியத்தை கோபமாய் வெளிப்படுத்த முடியாது. எல்லா உக்கிர ஓவியங்களுக்குள்ளும் ஒரு பேரமைதி இருப்பதை நான் கவனித்திருக்கிறேன்.

எழுத்து அப்படி அல்ல. அது உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கவே செய்கிறது. ஆழமான அமைதியை எழுத்தாக்க அமரும் போது வார்த்தைகள் எல்லாம் தங்களை ஊமையாக்கிக் கொண்டுதான் காகிதத்தில் மெளனமாய் ஊர்ந்து செல்கின்றன. கிளர்ந்தெழுந்த மனோநிலையில் நான் ஒரு அப்ஸ்ட்ராக்ட் ஓவியத்தைப் போல எழுதவேண்டும் என்று சொன்னவுடன், திட்டமிடாமல் வரையும் அப்ஸ்ட்ராக்ட் ஓவியம் பற்றி நிறையவே பேசுவதற்கு நாங்கள் அமர்ந்திருந்த அந்த பின்னிரவின் துணைக்கு முழு பாட்டிலில் அடைபட்டு சிரித்துக் கொண்டிருந்த மது, அந்த சூழலை இன்னும் ரம்யமாக்கி விட்டிருந்தது.

சோடாவோடு கூடி காற்றுக் குமிழிகளாய் சிரித்துக் கொண்டே கோப்பையை நிரப்பிய மதுவின் தலையில் ஐஸ் க்யூப்ஸை விஜய் எடுத்து போட்டான். விஜய் என்று நான் இங்கே குறிப்பிட்ட என் நண்பன் தான் அந்த ஓவியன், ஆர்டிஸ்ட் அல்லது வர்ண வியாபாரி என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உருவத்தை வரைவது அதை ரசிப்பது எல்லாம் பழக்கப்படுத்திக் கொண்ட புத்திகளின் எதிர்பார்ப்பு. உருவமற்ற ஏதேதோ உருவ வடிவுகளை கேன்வாசில் குழைத்து வரைவது கூடலின் உச்சத்திற்கு சமம்....முதல் ஷிப் விஜயின் தொண்டையை அறுத்துக் கொண்டு குடலுக்குள் இறங்கி இரத்ததில் கலக்கத்தொடங்கிய கணத்தில் நானும் ஒரு மிடறு குடித்திருந்தேன்....

விஜய் வீட்டு பால்கனி மிகப்பெரியது. பரபரபான நகரவாழ்க்கையில் இப்படி ஒரு பால்கனியும், பால்கனிக்கு அப்புறமாய் பரந்த வெளியும் இருப்பது ஆசிர்வதிக்கப்பட்ட விசயம் பாஸ்...விஜயின் தோள் தொட்டேன்.... ! அப்ஸ்ட்ராக்ட் பெயிண்டிங்க் பத்தி சொல்லிட்டு இருந்தேன்ல....விஜய் மீண்டும் ஓவியத்துக்குள் குவிக்க நானும் ஓவியத்தைப் பற்றி பேச ஆரம்பித்தேன். விஜய்....அடிப்படையில் நான் ஓவியத்தின் டெக்னிகாலிட்டி எல்லாம் எதுவும் அறியாதவன். உருவமற்ற அப்ஸ்ட்ராக்ட் பெயிண்டிங் எனக்குபிடிக்க ஆரம்பித்தது வெகு சமீபத்தில்தான்...

வேலை செய்யும் நிறுவனம்....கலையோடு தொடர்புடையது என்பதால் ஒரிஜினல் ஆயில் பெயிண்டிங்க்ஸ் எல்லாம் எங்கள் காலரியில் டிஸ்ப்ளே செய்வதற்காய் உலகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் இருந்து பிரபல ஓவியர்களைக் கொண்டு வரையச் சொல்லி வாங்கி வருவோம். பலவற்றை விலைக்கே வாங்கி விடுவோம், இன்னும் சிலவற்றை கன்சைன்மெண்ட் பேசிஸில் வாங்குவதும் உண்டு. விற்றால் ஓவியனுக்கு பாதி எங்களுக்குப் பாதி. விற்காவிட்டால் ஓவியனிடம் பெயிண்டிங்கைத் திருப்பிக் கொடுத்து விடுவோம்.

எதேச்சையாக ஒரு நாள் ராசின் பெர்க் என்னும் ஒரு ஈரானிய ஓவியரின் அப்ஸ்ட்ராக்ட் பெயிண்டிக்கிற்குள் தவறி விழுந்து விட்டேன் பாஸ், ஹா..ஹா... விஜய் சப்தமாய் சிரித்துக் கொண்டே முதல் ரவுண்டை முடித்த வேகத்தில் இரண்டாவது ரவுண்டிற்காய் பாட்டிலை கவிழ்க்க.....நான் முதல் ரவுண்டின் பாதியிலேயே இருந்ததை உணர்ந்தேன். மறுபடி முழு மூச்சாக மதுவை உள்ளுக்குள் இறக்கி விட்டு.....வேகமாய் கொஞ்சம் சிப்ஸை எடுத்து வாய்க்குள் போட்டு ஊறவைத்துக் கொண்டேன்.

நான் கேட்காமலேயே விஜய் மீண்டும் என் கோப்பையை நிறைக்க.....

அப்ஸ்ட்ராக்ட் பெயிண்டிங் என்பது விபரம் புரியாத, இன்னதென்று வரையறுக்க முடியாத இலக்குகளைக் கொண்ட பெரும் காடு பாஸ். திசைகளையும், மனிதர்களையும் தேடி அலைகையில் திடீரென்று பறவைகளின் சப்தமும், அருவியின் சப்தமும், மெல்லிய பூங்காற்று நம் உடை கலைத்துச் செல்வதும்... மரங்கள் எல்லாம் சல சலவென்று அசைவதும், என்று மிகப்பெரிய நிசப்தத்தில் நாம் லயித்து நகரும் போது....

சடாரென்று ஏதேனும் ஒரு மிகப்பெரிய யானை கூரான தந்தங்களுடன் நம் முன் எதிர்ப்பட்டால் தோன்றுமே ஒரு அச்சம், அப்படி திடீரென்று ரம்யமான சூழல் மிரட்சியாய் மாறிப் போகுமே.....அப்படித்தான் ஏதேதோ கதை சொல்லிக் கொண்டிருந்த அந்த ஒரிஜினல் பெயிண்டிங்கிற்குள் நான் நகர்ந்து கொண்டிருக்கையில் இன்னதென்று விவரிக்க முடியாத பல உணர்வுகளும் எனக்குள் விழித்துக் கொண்டன.

ஏதேனும் ஒரு உருவத்தை மையப்படுத்தி ஒரு ஓவியம் வரையப்படும் போது நமது எண்ணங்கள் எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் பெட்டிக்குள் அடைபட்ட மிருகமாய், சொல்லிக் கொடுக்கப்பட்டதை சொல்லும் கிளிப்பிள்ளை போல எந்த எண்ணத்தில் ஓவியன் வரைந்தானோ அதே எண்ணத்தை நமக்கு கொடுத்து விடுகிறது....

இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது விஜய்...? விஜய்....மூன்றாவது ரவுண்டில் முக்கால் வாசியை முடித்து விட்டு தனது ஜீனியஸ் மூக்கு கண்ணாடியை தூக்கி விட்ட படியே...டேய்.......ராஸ்கல் டூ யூ நொ ஹவ் டு ட்ரா ய பெயில்ல்ண்டிங்.....????சிரித்துக் கொண்டே குழறினான்....!உனக்கு ஒன்று தெரியும மாறன்.... எந்த ஒரு ஓவியத்திலும் ஆச்சர்யங்கள் நிரம்பிக் கிடப்பது இல்லை. ஆச்சர்யங்கள் எல்லாமே பார்ப்பவனின் மனதினில் மட்டுமே இருக்கிறது.

மோனலிசாவின் உதடுகள் புன்னகைக்கின்றன என்று நீ நினைக்கிறாயா? ஒரு போதும் மோனலிசா வசீகரப் புன்னகையை சிந்துவதே இல்லை....அங்கே ஓவியத்தில் நாம் காண்பது லியானர்டோவின் புன்னகையைத்தான் மேலும் அந்தப் புன்னகை ஒரு போதும் உனக்குள் புன்னகையைக் கொண்டு வர முடியாது. அங்கே மோனலிசாவும் உதடுகளும், லியானர்டோவும் வெற்றுக் கருவிகளாய் ஒரு ஆப்ஜக்டாக மட்டும் நின்று கொள்ள நிஜமான புன்னகை ரசிப்பவனிடமே பிறக்கிறது..

மூன்று நாள் நீ பட்டினி கிடந்து, விரக்தியான சூழலில் எல்லாமே தோற்றுப்போக, இரவு உரக்கம் இல்லாமல் முகம் வெளிறி, உடல் வலிகளோடு மோனலிசாவைப் பார்த்தால் மோனலிசா கண்டிப்பாய் புன்னகைக்க மாட்டாள். எந்த ஒரு தலை சிறந்த ஓவியமும் ரசிகனை அடைத்துப் போட்டு விடக்கூடாது. அந்த ஓவியம் அவனை கிளர்ச்சியுறச் செய்து வெவ்வேறு திசைகளுக்கு சிறகுகள் கொடுத்துப் பறக்கச் செய்ய வேண்டும்.

நீ அப்ஸ்ட்ராக்ட் பெயிண்டிங் என்றால் எதுன்னு நினைக்கிறடா... ராஸ்கல்..., 4வது ரவுண்ட் கோப்பையை நிறைத்து விட்டு கிளாஸை கையிலெடுத்து ச்ச்ச்ச்ச்சியர்ஸ் சொன்ன விஜயின் உற்சாகத்திற்கு நானும் ச்ச்சியர்ஸ் சொல்லி முடித்திருக்கையில்....முதல் மிடறை விழுங்கி விட்டு விஜய் பேச ஆரம்பித்தான்....அப்ஸ்ட்ராக்ட் என்பது உருவமற்ற வர்ணக்கலவைகளின் கூட்டு மட்டுமல்லடா மாமா......

ஏற்கெனவே கண்டிருக்கும் காட்சிகளையும், உருவங்களையும் யாரும் கண்டிராத கோணத்தில் வரைவதும் கூட அப்ஸ்ட்ராட்ன்னுதான் சொல்லணும்...மாடர்ன் பெயிண்டிங்ஸ் எல்லாமே அப்ஸ்ட்ராக்ட்தான்...எம்.எஃப். ஹுசைன் தாத்தா சரஸ்வதி படத்தை வரைஞ்சு வாங்கிக் கட்டிக்கிட்டாரே...ஹா...ஹா....ஹா... இவுங்க எல்லாம் கடவுளர்களை உடையோட பார்த்தப்ப..அவர் உடையில்லாம அவர் போக்குல வரைஞ்சு பார்த்தாரு....? இதுல என்னடா தப்பு இருக்கு....?

உடுத்தியிருக்கும்
அத்தனை பேரும்...
நிஜத்தில்
உள்ளுக்குள்...அம்மணங்கள்தானே???

***

நீங்கள் வெற்று
நத்தைக் கூட்டினை
ஜடமாய் கடந்து செல்கையில்
ஒரு கலைஞன்
அதை ஒரு ஜீவன் வசித்த
வீடாய் பார்த்துச் செல்கிறான்...!

என் நான்காவது ரவுண்டின் இறுதி டேய் என்று விஜயை கூப்பிட வைத்திருந்தது...! டேய்.....நீ கவிதை எல்லாம் எழுதுவியாடா...இடியட்....விஜயின் தோள் தொட்டேன்...

இலக்குகளற்ற
இலக்குகளை நோக்கி
எப்போதும் பயணிக்கும்
என் தூரிகைகள்...
வேறெதைப் படைக்கின்றன
கவிதைகளின்றி....!

உணர்வுகளைப் பிழிந்து தியான நிலையிலேயே....என் கைகள் இயங்குகின்றன. கருப்பும், சிவப்பும், இளஞ்சிவப்பு, மஞ்சளும், வெள்ளையும், நீல நிறமும், பச்சை நிறமுமென்று....நிறங்கள்தானே எனது மொழி....? என் மொழி எப்போதும் உங்கள் மொழியைப் போன்றது அல்ல...அதற்கு கோபத்தையும் சாந்தமாய்த்தான் சொல்லத் தெரியும்...

இந்தக் கோப்பை நீ ஓவியம் வரைய நான் கவிதை எழுத.....ரெண்டுமே அப்ஸ்ட்ராக்ட்டா இருக்கணும்....என்ன சரியாடா...?... விஜய் கேள்வியாய் என்னைப் பார்த்தபடியே மதுவை கோப்பையில் கவிழ்த்துக் கொண்டிருந்தான்...

சரிடா என்று சொல்லிவிட்டு நான் தூரிகையைக் கையிலெடுத்தேன்...

விஜய் கவிதை எழுத ஆரம்பித்திருக்கையில்...
என் ஓவியமொன்று...
இடவலமாய் சுழன்று....சுழன்று
வர்ணங்களுக்கு நடுவே
உயிர் பெற்றுக் கொண்டிருக்க..

கலைஞர்களை விழுங்கி விட்டு கலை...அங்கே தனது நர்த்தனத்தை தொடங்கி இருந்தது...!

எழுதியவர் : Dheva.S (6-Mar-13, 8:00 pm)
சேர்த்தது : Dheva.S
பார்வை : 244

மேலே