மார்ச் 8 - (புள்ளிவிவரம்)
(இது கவிதையில்லை)
(நிஜ நிகழ்வுகளின் உண்மை புள்ளி விவரம்...)
இப்போதெல்லாம் கணவனை இழந்த பெண்கள் மொட்டையடிக்கப்பட்டு மூலையில் ஒடுக்கப்படுவதில்லை. போட்டு வைப்பதும் பூ சூடுவதும் சகஜமாகியிருக்கிறது. பெண்கள் அதிகம் பேர் படிக்கிறார்கள். அதிகம் பேர் வேலைக்குப் போகிறார்கள். வீட்டு வேலை, குழ்ந்தை வளர்ப்பு என அனைத்தையும் ஆண்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். தன் வருமானத்தை பெண் தனி வங்கிக் கணக்கில் வைப்பது கூட இயல்பாகியிருக்கிறது. பெரிதாக சொல்ல குறையென்று ஒன்றுமில்லை.
இருந்தும்....
மனதை உலுக்கும் ஒரு புள்ளி விவரம்... (ஆதாரம்: நேஷனல் க்ரைம் ரெகார்ட்ஸ் பீரோ)
இந்திய தேசத்தில்....
26 நிமிடங்களுக்கு ஒரு பெண், மானபங்கப்படுத்தப்படுகிறாள்...
34 நிமிடங்களுக்கு ஒரு பெண், கற்பழிக்கப்படுகிறாள்...
42 நிமிடங்களுக்கு ஒரு பாலியல் துன்புறுத்தல் விபத்து நிகழ்கிறது....
43 நிமிடங்களுக்கு ஒரு பெண், கடத்தப்படுகிறாள்...
90 நிமிடங்களுக்கு ஒரு மணப்பெண், எரிக்கப்படுகிறாள்...
93 நிமிடங்களுக்கு ஒரு பெண், கொல்லப்படுகிறாள்...
10 வருஷத்தில் 8 மில்லியன் பெண் சிசுக்கள் கொலை செய்யப்டுகின்றன..
புகார் கொடுக்கப்பட்டு கணக்கில் வந்தவை இவை. கணக்கில் வராதவை, கணக்கற்றவை...
நட்ட நடு நிசியில் பெண் தைரியமாய் நடக்க முடிகிற நாள் உண்மை சுதந்திரம்..
நட்ட நடு நிசி கூட வேண்டாம். பட்டப் பகலில் பெண் பத்திரமாக வீதி சென்று வீடு திரும்ப, பெரியார், பாரதியின் வாரிசுகளாய், இக் களத்தில் நான் காணும் உங்களின் பேனாக்கள் உதவி செய்யட்டும். இத்தனை காலத்தில் எத்தனையோ மாறிவிட்டாள் பெண். ஏறியும் விட்டாள். இன்னும் கொஞ்ச தூரம்... ஏறிவிடுவாள். ஏற்றிவிடட்டும் உங்கள் பேனா.
மகளிருக்கு மார்ச் 8 வாழ்த்துக்கள். வாழ்த்திய நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
- வர்ஷா.