உயிர்த்தேடல்

மரவுடலின் கிளைநரம்புகளில்
முளைத்திருக்கும் இலைமுடிச்சுகளினூடே
பிரவகிக்கும் வெப்பநாளங்களில்
ரத்தவோட்டத்தைப் பீய்ச்சியடிக்கும்
இதயப்பழத்தின் எவ்வணுவில்
உயிர்த்திருக்கும் எனக்கான
உனதுயிர்?


ஒட்டல்களில் கடத்தப்படும் சுகங்களிலும்
எச்சில் முத்தங்களிலும்
உச்சவுரசல்களில் உதிர்ந்துவிழும் உயிர்களிலும்
தேடக் கிடைக்கவில்லை

வலியில் விரல்நொருக்குகையில்
துளிர்த்த கண்ணீர்த்துளிகளின்
உப்புக்கரைசல்களில் காய்ந்துபோன
அவ்வுயிரின் அடையாளம்
உனக்கு நினைவிருக்கிறதா?

அது உன்னிடம்தான் இருக்கிறதா?

எழுதியவர் : சுபத்ரா (9-Mar-13, 8:26 pm)
சேர்த்தது : சுபத்ரா
பார்வை : 148

மேலே