ஏங்கும் நெஞ்சம் !

நில்லாது ஆறோடும் நில்லாதே என்றதனை
சொல்லாத போதுமது சுற்றியோடும்
செல்லாத இடமெங்கும் சுற்றிவரும் பூங்காற்று
சேறோடு சாக்கடையின் நாற்றம் கொள்ளும்
கல்லாத மதிபோலும் கர்வமெனும் விஷம்பூசிக்
காடையரின் அரசோங்கும் கண்கள் தோண்டி
கொல்லாது கொல்பவரும் கூடியமை இராச்சியத்தில்
இல்லாத பதவிக்கு ஏங்கும் நெஞ்சம் !

வெல்லாது அறம்தேய, விடியாது இருள்சூழ
விளக்கொன்றாய் புயல்காற்றில் வைதததீபம்
செல்லாத காசுக்கு சென்றுமனம் தடுமாறும்
சீரான பொய்மைக்கு சிரசும்தாளும்
வல்லாதி வல்லரென வம்சங்கள் என்று மகா
வாள்கொண்டு அகிம்சைதனை வளர்போம் என்றார்
இல்லாத நாற்காலி அறிந்துமோர் நிழலாக
இருக்குமா சனத்திற்கு ஏங்கும் உள்ளம்!

பல்லாதி மன்னர்களில் பசுவுக்கு நீதிசொலப்
பிள்ளை யினைத்தேரிட்டும், பாசம்கொண்டு
முல்லைக்குத் தேரீந்தோன், மூதாட்டி ஔவைக்கு
மேலும்வாழ் வென்றெண்ணி தானும் கொண்ட
நெல்லிக்கனி யீந்தவரும் நீதிதனைக் காணுமென
நிகழ்த்திநல் கதைபடித்தும் நெஞ்சம்தன்னை
இல்லாது நீதிக்கு இழுக்கேற்று நாற்காலி
இருந்தாலே போதுமென இச்சை கொண்டார்

நெல்லுயர கோனுயர்வன் நீதிபல நெறிகளையும்
நிச்சமா யிவர்கற்ற நெறிகளாயின்
கல்லாலே மாங்காயைக் கனிவீழ அடிப்பர்செங்
கோல்கொண்டு சிரசுதனை குறித்துவீசி
நில்லாது கழுத்திருந்து நீக்குஎன ஆட்சிவிதி
நேரெழுதி தமிழ்சாய்த்து நிற்போர்பக்கம்
பொல்லாத ஆசையுடன் புறத்தோடி இரந்தவரை
போடுவரோ எலும்பென்று பார்த்தல் நன்றோ

எழுதியவர் : கிரிகாசன் (10-Mar-13, 6:24 am)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 114

மேலே