இழி கருமம் நிறுத்திடுவீர்

கற்கண்டுத் தமிழுக்கும்
கற்புண்டு அறியாதார்
இன்னாத சொல்லுரைத்தே
இன்தமிழைச் சாய்த்திடுவார் ..!

ஆழக்கடல் என் தமிழின்
கரை இன்னும் காணாதார்
முத்தெடுத்து வந்தவர் போல்
இங்கே பாவனைகள் பல செய்திடுவார் ..!

கன்னித் தமிழ் மேல்
காதல் கொண்ட பித்தரெல்லாம்
எத்தன் என்று பேசியவர்
எக்காளம் முழங்கி நிற்பார் ..!

செந்தமிழின் காவலென்று
செருக்கோடு பொய்யுரைத்தே
கயமை நெஞ்சத்தின்
வன்மமது தீர்த்திடுவார் ..!

கனிகள் உள்ள மரம் கண்டால்
கல்லடித்து வீழ்த்தத்தோன்றும்
புறம் பேசும் நெஞ்சத்தீர்
புலமையோடு புரிந்திடுவீர் ..!

வானரச்சிந்தை கொண்டு
வழக்காடி என் தமிழை
வானுயர்த்த முடிந்திடுமோ ?
இலக்கியமும் பிறந்திடுமோ ?

மல்யுத்தம் தாரா துன்பம்
சொல் யுத்தம் தந்துவிடும்
வனப்பான என் தமிழும்
வடிவிழந்தே வாடி விடும் ..!

தமிழென்னும் உயிர்கொன்று
பகைமைக்குப்பசியாற்றும்
பண்பற்ற மானிடரே
இழி கருமம் நிறுத்திடுவீர் ..!

எழுதியவர் : ஹேயேந்தினி ப்ரியா (12-Mar-13, 4:32 pm)
பார்வை : 249

மேலே