இவனும் மனிதன்

இவன் வாழ்வதற்காய்
இறந்தவர்களுடன்
இன்னல் பட்டுக்கொண்டு இருப்பவன்

எவர் வீட்டு தீபமாவது
அணைந்தால் மட்டுமே
இவன் வீட்டு அடுப்பெரியும்

ஒவ்வொரு விடியலிலும்
அவன் தனது பெயரையும்
பட்டியலில் வைத்து விட்டு
புறப்பட்டு விடுவான்...

முற்றுப் புள்ளியில்
சில வேளைகளில்
தன்னை யாரும் சுடலாம்
இலையேல்...
சுடப்படலாம் .என்று ,

எரித்தலும் புதைத்தலும்
இவன் நாளாந்த
நடவடிக்கையாகிப் போனதால்...

இவன்
கருப்பு சால்வைக்குள்ளும்
துண்டு பீடிக்குள்ளும்
பொலித்தீன் பையில்
பவுத்திரமாய் வாங்கிவந்த
இரு மிடறு கல்லுக்குள்ளும்
பீதியை அடக்கிக் கொள்பவன்

பேய் கதை சொல்லி
இவனும்
தாலாட்டப் பட்டதால்
பேயிட்கும் பயந்தவன்
பாயிட்கும் பயந்தவன்
இவனது வாழ்வே
விசித்திரம் நிறைந்தது தான்
ஆனாலும்
சில விசித்திரங்களையும்
இவன் காணத்தவற வில்லை ..

மரணத்திடம் மனிதன்
பதில் சொல்கிறானோ
இல்லையோ
மரணித்த பின்னரே
ஈருலக விசாரணையும்
துவக்கம்
என்று கண்டு கொண்டவன்


பலமாக
கண்கள் குளமாக
இவன் அழுததில்லை

மற்றவர் பார்வைக்கு
இவனோர் கல்நெஞ்சக் காரன்
ஆனால்
இவனுக்கே தெரியாது
ரகசியமாக அழுதழுதே
கண்ணீர் குழாய் கூட தன்
கண் மூடி விட்டதென்று

ஆனால்
நீலிக் கண்ணீரையும்
நிஜக் கண்ணீரையும்
பிரித்தறியும்
வல்லமை இவனுக்குண்டு

தர்க்க நரம்புகளை
தடவியபடி
கொப்பளிக்கின்ற எண்ணங்களை
பகுத்தறியும் சக்தி உண்டு

சுடர்விடும் பிணத்தோடு
உண்மையும் ,பொய்யும்
அணைந்து போவதும் தெரியும்

கோடிக்குள் புரண்டவனும்
தெருக்கோடியில் தவழ்ந்தவனும்
கடைசி ஐக்கியம்
ஒற்றை ரூபாயில்
என்ற உண்மை தெரிந்தவன்

எல்லாருடைய
முடிவின் முகங்களில் தான்
இவன் விடியலின்
முகவரி ஒளிந்திருக்கிறது

ஏனென்றால்
மற்றவரைப் படிக்கும் இவனை
யாருமே படிக்க மறுத்து விட்டார்கள்.

எழுதியவர் : ஹபீலா ஜலீல் (14-Mar-13, 4:17 pm)
பார்வை : 123

மேலே