இது "பொஸ்பரஸ்" யுகம் !-கே.எஸ்.கலை

போராட்டங்கள் தப்பில்லை.....
போர் வேண்டாம் !
நேற்றே ஆரம்பித்துவிட்டது
"பொஸ்பரஸ்" யுகம் !

ஆயுதம் ரத்தம் குடித்தாலும்
நீதி தந்திருக்கும் –
அது எப்போதோ !
ஆயுதம் ரத்தம் மட்டுமே குடிக்கும்
இனி எப்போதும் !!!

நீதி தேவதையின்
கண்கள் க(று)ருப்பால்
கட்டி இருக்கிறது
காணொளி பார்க்க
எப்படி முடியும் ?
அவிழுங்கள் !!!

மொழி உணர்வு கூட
போதையாக வேண்டாமே-
அது தான்
இன்னொருவனுக்குள்ளும்
இருந்து எரிகிறது !
அப்பாவிகளை
எரிக்கிறது !
---நியாயத்தை மட்டும்
---கேட்போம் !!!

போருக்கு எதிரானவன்
துரோகியல்ல – கோழையுமல்ல
நம்புங்கள் !

துப்பாக்கிகளால்
துர்ப்பாக்கிகளானவர்கள்
நாங்கள் - எங்களுக்கு
துப்பாக்கிகள் தான்
துரோகிகள்....
தூக்கத் துடிக்கும் நீங்களல்ல !

எறிந்தவனுக்கு ஈரமில்லை
எரிந்தவனுக்கு எதுவுமில்லை !
காமச்சதை வெறியனுக்கு
ஈமச்சிதையும் பேதமில்லை !

உணர்ந்து துடிக்கிறீர்கள் !
உயிரையும் துச்சமாக்கி
உணவு தவிர்க்கிறீர்கள் !
உடலையே எரிக்கிறீர்கள் !
----------- இன்று
சுத்தமான சத்தம்
உங்கள் மொழி !
சத்தமான மௌனம்
எங்கள் விதி !

வேண்டாம்....
பத்திரிக்கைச் செய்தியாக,
தொலைக்காட்சி தொகுப்பாக,
புதிய தலைமுறையின்
இன்னுமொரு அத்தியாய
ஆவணப் படங்களாக-
மீதமிருக்கும் எங்களின்
மீதியான எச்சங்கள் !

போர் குற்றம்
நேற்றைக்கு மட்டுமல்ல
நாளைக்கும் நிச்சயமானது
அதனால்....
போர் வேண்டாம் !
நேற்றே ஆரம்பித்துவிட்டது
"பொஸ்பரஸ்" யுகம் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (17-Mar-13, 10:09 pm)
பார்வை : 211

மேலே