ஈழம் ஒரு அரசியல் கண்ணோட்டம் பகுதி 4

இனப்படுகொலையும், போர்க்குற்றமும் பற்றிய சங்கதிகளையும் பார்த்து வருகிறோம்.
இனப்படுகொலை என்பது சாதாரண உணர்ச்சிபூர்வ கொந்தளிப்பால் ஏற்படும் ஏதோ ஒரு நிகழ்ச்சி அல்ல. குற்றவியல் கோட்பாடுகளின்படி மேலோட்டமாக பார்த்து, விவாதித்து ஒதுக்கி தள்ள.
அது நிகழ, தொடர் காயம்பட்ட மனமும்,. ஆற்றவொணா வன்மமும், நிறைவேற்ற ஒருமித்த சூழல் கொண்ட கூட்டு மனமும் முயற்சியும், இறுதிவரை மாறாத சூழலும் தேவை.
இந்த கூட்டாளித்தனம் என்பது அழுத்தமான நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே வர இயலும். இந்த அழுத்தமான நம்பிக்கையை கையாளவும் ஒரு தனிக் கூட்டம் தேவைப்படுகிறது.
ஆம்.
மனக்காயங்களை சுமந்து கொண்டு எரியும் இரு நெஞ்சங்கள். அவை கொள்ளும் கூட்டு தொடர்வதற்கான ஒருமித்த சூழல் ஒருபுறம். அதை நிறைவேற்ற தேவையான சூழல் என்பது வேறு சங்கதி. போர் முடிந்த பிறகும் தொடர்ந்த இனப்படுகொலையின் பின் விளைவுகளால் விசனப்பட்டு கூட்டு முறிந்துவிடாமல் இருக்க வேண்டும் எனில் தேவை இன்னொரு சூழல். அதுதான் அந்த கூட்டாளிகளை இணைபிரியாது இருக்க உதவும். அதுதான் அரசியல், பொருள் ஆதாயம்.
குற்றம் செய்து விட்டு, பழிவரும்போது குற்றம் புரிந்த நெஞ்சங்கள் தம் தோல் சிராப்ப்யை தவிர்க்க, பதட்டம் வந்து, ஒருவரையொருவர் காட்டி கொடுக்கும் சூழல் வருவது இயல்புதானே. அந்த சூழல் வராமல் தடுக்க உதவுதான் இந்த அரசியல் மற்றும் பொருள் ஆதாயம்.
கூட்டாளிக்கு கூட்டாளி அதிகாரத்தில் இருப்பது வசதியாக உள்ளது எனும் துணிச்சலில் தான் இந்த இனப்படுகொலை தொடங்கியது மற்றும் தொடர்ந்தது. அந்த நேரத்தில் நடந்த மாநில அரசின் அதிகார மாற்றம் ராஜ பக்சேவை சற்றே கலங்க அடித்தபோது அவசர வருகை தந்து மத்திய அரசை கலந்தாலோசித்தது உண்மைதான்.
அப்போது கொடுக்கப்பட்ட மறு உறுதி மொழிதான் தொடரும் இனப்படுகொலைக்கான உரம் என்பது கண்கூடு. ஆம். முள்ளிவாய்க்கால் ஈழத்தின் "ஜாலியன்வாலா பாக்" தான். இதில் சந்தேகமேயில்லை.
ராஜ பக்சேவுக்குக் கொடுக்கப் பட்ட உறுதிமொழி இதுதான். மாநிலக் கட்சி ஒன்று தம்முடன் இருக்கும் வரை மத்தியில் அரசு ஆட்டம் காணாது. அதையும் மீறி வெளியேறும் துணிச்சல் வந்தால் அதை கைப்பிடியில் பிடித்து வைக்க இருக்கவே இருக்கிறது சிபியை, மத்திய புலனாய்வு எனப்படும் ஓர் எந்திரம் தம்மிடம். எனவே மத்தியில் தம் அரசு உறுதியாய் இருக்கும் வரை, அந்த மாநில கட்சி தம்முடன் தாம் வைத்து கைப்பாவையாக ஆட்டுவிக்கும் வரை இந்த இனப்படுகொலை கவலையின்றி தொடரலாம் என்பதுதான் அந்த உறுதி மொழி.
தொடர்ந்தது வன்மம் இந்த இணைபிரியாத கூட்டு சூழலில்.
இனிதான் உள்நுழைகிறது மாநில அரசியல் இங்கே.
தொடர்ந்த இனப்படுகொலை நாளதுவரை கண்ணுக்கு தெரியாதபோது, இப்போது மட்டும் திடீரென சூடு பிடிப்பது ஏன் என்றுதானே கேள்வி.
சற்றே மாநில அரசியலில் எட்டிப் பார்க்கலாம்.
சட்டசபை தேர்தல் முடிந்தாயிற்று. தோல்வி தெளிவாயிற்று. வெளியில் தலை காட்ட முடியாதபடி நில அபகரிப்பு வழக்குகள், குண்டர் சட்டம், மற்றும் இன்ன பிற வழக்குகள் என அதிமுக அரசின் அடக்குமுறை தொடர்ந்த போது, குறைகள் சொல்லி அரசியல் நடத்தும் முயற்சியும், மத்திய அரசின் துணை காட்டி பயமுறுத்தும் முயற்சியும் பனலளிக்காத சூழலில் என்ன செய்வது? மின்சாரத் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, கட்டணங்கள் உயர்வு அனைத்தையுமே புறந்தள்ளி அடுத்தடுத்து மாநிலத்தேர்தல்கள், அரசியல் ரீதியாக பலவீனத்தையே பறை சாற்றின.
நேரடியான மோதல் அரசியல் அவதூறு வழக்குகளை வரவழைத்தன. எனவே பிழைப்பு நடத்த ஒரு சங்கதி வேண்டுமே. எடு டெசொ எனும் அமைப்பை தூசி தட்டி.. வா வீதிக்கு ஈழத்தமிழர் எனும்போர்வையில் அரசியல் விளையாட்டு விளையாட.
ஏனெனில் வரப்போவது மாநில அரசியலுக்கான தேர்தல் இல்லையே. அது மத்திய அரசியலுக்கான தேர்தல் அல்லவா. அப்படியெனில் உள்மாநில அரசியல் எனும் ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாதே. முல்லைப் பெரியாறு, காவிரிப் பிரச்சினை எல்லாம் எரிந்த கொள்ளிகளாக அல்லவா செய்யப்பட்டு விட்டன இந்த தமிழக அதிமுக அரசால்.
பிறகு என்னதான் செய்வது. மாநில அரசின் கொள்கைகளான புதிய தலைமைச் செயலகக் கட்டடம், அண்ணா நூல்நிலையம் ஆகியவை மற்றும் சொத்துக் குவிப்பு வழக்கு எல்லாம் காலாவதியாகி விட்டன. அதில் இருந்து அதிக அரசியல் அறுவடை செய்யமுடியாத சூழல்தானே.
"வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது" "ஆரியம் திராவிடம்" "பார்ப்பன ஆதிக்க அழுத்தம்" "இந்து வெறியர்களின் பித்தலாட்டம்" எல்லாம் வலுவிழந்த நிலையில் இருக்கின்றன. ஏனெனில் இவை அனைத்தும் கொண்ட படகில்தானே நாம் பயணம் செய்கிறோம். இதுதான் மாநில கட்சியான திமுக வின் நிலை.
அதே நேரத்தில் கட்சிக்கு புத்துணர்வு ஊட்டவும் வேண்டும். அதனால் முதலில் இளைஞர் பாசறை திறந்து, வெள்ளோட்டம் பார்த்து அதில் சதுரங்க ஆட்டத்தில் எங்குமே கட்டம் கட்டப்படாத போது, பிறகு நிதானித்து வீதிக்கு வந்து, அரசியல் செய்யும் சூழல் இருக்கிறது எனும் தைரியம் வரவழைத்துக் கொண்ட பிறகுதான், இயக்கத்திற்கு பங்கம் இல்லை என்று உறுதிபடத் தெரிந்த பிறகே டெசோ மூலம் ஈழத்தமிழர் பிரச்சினை மையப்புள்ளிக்கு கொண்டு வரப்பட்டது.
அரசியல் ரீதியாக ஆராயப்பட்ட சங்கதிகள் இவையே.
முதற்கண் கட்சிக்கு புத்துயிர் ஊட்ட வேண்டும். மாநில அரசியல் அழுத்தத்தில் இருந்து தப்ப வேண்டும். வருங்கால தலைமையை உருவாக்க ஒரு தொடர் இயக்கநிலையைக் கொண்டு வரவேண்டும்.
மத்திய ஆளும் கூட்டணிக்கும் பங்கம் வராத எல்லை வரை செல்ல கால நிர்ணயம் செய்ய வேண்டும், அதாவது இரண்டரை ஆண்டுகள் காலத்தை ஓட்டவேண்டும்,. அதற்கான போரட்டங்கள் நடத்தும் கால அவகாசம் வேண்டும்.
அதாவது கையில் எடுக்கும் சங்கதி காவிரி போல உடனே முடிந்து விட்டால், பிறகு ஏது வயிற்று பிழைப்பு. எனவே அத்தனை மாதங்கள் தொடரும் ஒரு பிரச்சினையாகவும், மத்திய அரசியலை தொடர்பு படுத்தும் ஒரு சங்கதியாகவும் அது இருக்கவேண்டும். அதே நேரத்தில் வருங்கால தலைமைக்கு பயிற்சி அளிப்பதாகவும், கட்சிக்கு எதிர்காலத்தில் வலு சேர்ப்பதாகவும் (அதாவது அதிக உறுப்பினர்களை சேர்ப்பதாகவும்) அது இருக்க வேண்டும். போராட்டம் செய்வதற்கும் அதில் அதிக இடம் இருக்க வேண்டும்.
இவைதான் ஈழப் பிரச்சினையை திமுக தன் கையில் எடுக்க நிர்பந்தித்த காரணங்கள்.
இதில் எங்கிருக்கிறது ஈழத்தமிழரின் நலன்.
திமுகவின் மு.க. விற்கு மிக நன்றாக அழுத்தமாக தெரியும். ஈழப்பிரச்சினை என்றுமே தமது போராட்டம் மூலம் சாத்தியம் இல்லை என்பது.
ஏனெனில் அதிகாரம் தம் கையில் இருக்கும்போதே, மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும்போதே உண்ணாநிலை எனும் மேடை நாடகத்தை தேர்ந்தெடுத்த அற்புத நபர் அல்லவா அவர். பிறகு பதவியில் இல்லாதபோது போராட்டங்கள் மூலம் இடும் கூக்குரலால் எப்படி அதை சாதிக்க முடியும்?
மேலும் அமைதி அரசியல் நடத்தினால், தம் மீது பார்வை விழுந்து, சேர்த்து வத்திருக்கும் ரொக்கத்தின் மீது யார் பார்வையும் பட்டு விட்டால் என்ன செய்வது.? எனவே பரபரப்பை ஏற்படுத்தினால்தானே பார்வைகள் எல்லாம் அந்த பரபரப்பில் சலசலப்பு இருக்கும் பக்கம் திசை திரும்பி, வைத்திருக்கும் ரொக்க பணம் காப்பாற்றப் படும்.
அதிலும் தேர்தல் நேரத்தில் செலவழிக்கும்போது நேரடியாக வரும் தடங்கல்களின் ஆழம் பார்க்க இப்போதே இந்த பரபரப்பில் சற்றே வெள்ளோட்டம் பார்த்தால்தானே முடியும். எனவே போராட்டம், பொதுகூட்டம், பரிசுகள், திருமணங்கள் என்று சிலபல செலவுகளை செய்து துணிச்சலை வரவழைத்துக்கொள்ளலாமே.
மேலும் வருங்கால தலைமைப் பொறுப்பு ஏற்கப்போகும் அடுத்த வாரிசுக்கு, அவசரமாக வெளிநாட்டு பயணங்கள் செய்யவைத்து பார்ப்பதற்கும் ஒரு நல்ல வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கிறதே.
இதில் எங்கே இருக்கிறது ஈழத்தமிழரின் நல வாழ்வு?
சரி இதில் அதிமுகவின் நிலை என்ன?
எல்லாம் பார்த்து கொண்டே இரு. பாட்டி வடை சுடட்டும். காக்கை கவ்விக் கொண்டு செல்லட்டும்,. பிறகு அலுங்காமல், சலிக்காமல், விரித்த கம்பளத்தில் ஒய்யார நடை நடந்து சென்று, சாவகாசமாக, காக்கையிடம் இருந்து வடையை இலகுவாக கைப்பற்றலாம் என்பதுதான் அதன் நோக்கம்.
ஆம்.
ஆட்சியில் இருக்கும்போது போராட்டம் எனும் மேடை நாடகம் நடத்த முடியுமா? எனவே தொடர்ந்து கூர்நோக்கியால் அரசியல் கட்சிகளின் போக்கை புலனாய்வுத் துறையின் மூலம் கண்காணித்து விட்டு, பிறகு ஒரே போடு போட்டு, மொத்த அரசியல் செய்ய வேண்டியதுதானே.
எத்தனை நாட்களுக்குத்தான் போராட்டம், எதிர்ப்பு, புறம்பேசும் சில்லறை அரசியல் செய்து கொண்டிருப்பது?
நோக்கம் என்ன? மத்திய அரசியல் நடத்த மற்ற கட்சியைகளை வலுவிழக்க செய்ய வேண்டும். அதிக எண்ணிக்கையில் இடங்களை தேர்தலில் வெற்றி பெற வேண்டும். ஒரே மூச்சான விவாதப்பொருள் எதிர்கட்சிகளுக்கு இருபதென்னவோ ஈழத்தமிழர் பிரச்சினை. ஆனால் ஆட்சியில் இருக்கும் தமக்கிருப்பதோ, முல்லை பெரியாறு, காவிரி ஆணையம், பெட்ரோல் விலை, மீனவர் பிரச்சினை, மத்திய அரசின் மெத்தனப் போக்கு, இவை எல்லாவற்றோடு கூடுதலாக சேர்ந்து இருப்பதுதானே ஈழத்தமிழர் பிரச்சினை.
அதனால், ஈழத்தமிழர் பிர்ச்சினையை தொடர் போரட்டம் மூலம் வளரவிட்டு, பிறகு தனக்கு சாதகமாக ஒரே வீச்சில், திமுகவின் முதலைக் கண்ணீர், காங்கிரஸின் அக்கறையில்லாப் போக்கு என்று அடுக்கி விட்டால் போதுமே.
மேலும் இந்த ஈழப்பிர்ச்சினை மூலம் எழும் தொடர் போராட்டத்தால், மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிர்ச்சினையை எழுப்பிவிட்டால், அதையும் ஒரு தேர்தல் களப் பொருளாக மாற்றும் திமுக-காங்கிரஸின் மறைமுக நடவடிக்கைகளும் பார்வையில்தான் உள்ளன. அனைத்துக்கும் முத்தாய்ப்பாகத் தானே பொருளாதாரத்தடை எனும் ஒரு கருத்தை சட்டசபை தீர்மானத்தில் துருப்புச் சீட்டாக அதிமுக அரசு வைத்திருக்கிறது.
மாணவர்கள் போரட்டத்தை இந்தி எதிர்பார்ப்பு போரட்டத்தின் சாயலில் கொண்டு செல்லும் முயற்சி இருப்பதாக பட்டால் அது தோல்வியையே தழுவும். அதனால் அரசியல் அறுவடை நிச்சயம் கிடைக்காது என்பதை முக்கியமாக இந்த திமுக உணரவேண்டும். ஏனெனில் அந்த அளவிற்கு ஒரு இயக்கம் செல்லும்போது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை நிச்சயம் ஏற்படும். அதற்கு நிர்வாகத்திறம் வாய்ந்த இந்த அதிமுக அரசு நிச்சயம் இடம் கொடுக்காது.
மொத்தத்தில் கேரள மாநிலத்தின் இடைத்தேர்தலால் வர இருந்த ஒரே ஒரு தொகுதிக்காக இரு மாநிலங்களிலும் ரத்த ஆறு ஓட வைக்க சித்தமாக இருந்த காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கட்சிகள் போலத்தான் மாநில அரசின் இந்த கட்சிகளின் நிலைப்பாடும்.
நாடாளுமன்றத் தொகுதிகளில் அதிக இடம் பிடிக்க வேண்டும் என்பது மட்டுமே முக்கிய குறிக்கோளாக கொள்ளும் இந்த அரசியல் கட்சிகளால் எப்படி ஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என நம்பலாம்?
தேர்தலுக்கு பிறகு ஈழத்தமிழர், ஈழம், டெசோ எனும் ஒலிச் சாரல்கள் கூட கேட்குமோ என்பதுதான் எமது தெளிவான கேள்வி.
தேடி, துருவி பார்த்தாலும். வெளிச்ச வெள்ளம் பாய்ச்சி பார்த்தாலும் கிடைக்க மறுக்கிறதே ஈழத்தமிழர் நலம் எனும் ஒரு சங்கதி ஒரு புள்ளியாகக் கூட, இந்த கட்சிகளின் அரசியல் நாடகத்தில் மற்றும் இவற்றின் மறைமுக நோக்கத்தில் கூட. எங்கேனும் இலை மறை காயாகக் கூட.
மாநிலக் கட்சிகள் ஒவ்வொன்றின் கட்டுப்பாடிலும் ஊடகங்கள் உள்ளன. எந்த ஊடகமாவது தன்னிச்சையாக இனப்படுகொலைகளை, போர்க்குற்றங்களை தமது கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களில் பகிரங்கப்படுத்த துணிந்தனவா இதுவரை? சேனல்4 இற்கு இருக்கும் சிறுதுளி அக்கறையேனும் இந்த ஊடகங்களுக்கு இருந்தனவா? இருக்கின்றனவா?
ஏன் தமிழக ஊடகங்கள் எல்லாம் ஒன்று சேரட்டுமே சிறிது காலத்திற்கேனும் தமது தொடர் ஒளிபரப்பில் அடிக்கடி ஈழத்தமிழர் பிரச்சினைகளை ஒருதரம் காட்டுவோம் எனும் கொள்கை வகுக்கும் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி செயல்படுத்த. நேர்மை இருக்குமா செய்ய வைக்க எந்த அரசியல் கட்சிக்கும்?
பிறகு எப்படி எதிர்பார்க்கலாம் இந்த மாநில அரசியல் கட்சிகள் ஈழத்தமிழர் நலனுக்காக போரடுகின்றன என்றும், எம்இனத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ளன என்றும்?
எதற்கு கொள்ளவேண்டும் ஏமாறும் அப்பாவித்தனம் இவர்களை நம்பி, இவர்களால் ஈழத்தில் ஒரு விடியல் பிறக்கும் என்று?
ஈழத்தமிழர் பெயர் சொல்லி நிதி திரட்டல்தானே நடத்த முடியும் தனது கட்சியின் பலம் சேர்க்க, அரசியல் பிழைப்பு நடத்த.
தனது வாழ்வாதாரம் கேட்டு உயிரை மாய்த்தனர் ஈழத்தமிழர் எம் இனத்தவர் அங்கே. அவர் பெயர் சொல்லி நிதித் திரட்டி பிழைப்பு நடத்தி தம் இனம் வளர்க்கும் ஈனத்தமிழர் இங்கே.
இதை படித்து விட்டும் குருதி கொப்பளிக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஒரு பகிரங்க வேண்டுகோள்.
இந்த வரிகளை பொய்யாக்கட்டும் தங்களின் செயல்களால். பிறகு இதை எழுதியமைக்கு எம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து எம்மை கழுவில் ஏற்றட்டும் இந்த அர்சியல் பிழைப்பாளர்கள். மனதார ஏற்கச் சித்தமாக இருக்கிறோம் எந்த சித்ரவதையும் எம் இனத்தமிழர்களுக்காக.
யாம் அப்படி ஏற்கும் இந்திய தணடனைச் சட்டப்படிக்கான சித்ரவதைகள், எம்குல தமிழர்கள் ஈழப் போராட்டத்தில் அனுபவித்ததை விட, சங்கடத்தில் குறைவாகவே இருக்கும் என்பது எம் உறுதியான எண்ணம்.
இனி உலக அரசிலை எட்டிப் பார்க்க நேரம் ஒதுக்குவோமே.... பிறகு செல்லலாம் ஐ.நா. வின் கையாலாகாத நாடகத்தனத்திற்கும் அதில் இருக்கும் மாமனித போர்வைக்கும், அவைகளையும் களைந்தெடுக்க.
தொடரும்................