ஊமைக்குயில்

எங்கள் தேசத்துக்
குயிலொன்று
அந்நிய தேசத்தில் ..

உழைத்துக் களைத்துப்போய்
அது நாள் வரை
பூண்டிருந்த துறவரம்
களைந்து
தன் துணைதேடி
முதன்முறையாக
கூவுகிறது .

தனக்கென்று
கூடுகட்டத் தெரியாத
குயிலல்ல இது .

பிறர் கூடு கட்டவே
தன் உடற்கூடு
மறந்த குயிலிது
மொத்தத்தில் இது ..

அண்டங் காக்கையினால்
அடாவடியில் வளர்க்கப்பட்ட
ஒரு அப்பாவிக் குயிலது ..

அந்தக்குயில்
இராகங்கள்
சொல்லிக்கொடுக்காமலே
பாடக்கற்றுக் கொண்டது

வாழ்வினை
விதியென்று விலக்காமல்
மதி கொண்டு
சதி முறிக்கப் பழகியது

கண்ணீரின் கோடுகளை
காற்று உலர்த்தி விட்டுப் போனாலும்
ரணங்களின் வழியகற்றி
மயிலிறகின் வருடலை
எதிர்பார்த்தும் நிற்கிறது

அந்தக் குயிலின்
புன்னகையில்
கண்ணீர் கலக்க
நாட்டம் இல்லை எனக்கு

விரித்து பறக்கும் சிறகை
கூண்டிலடைக்க
ஆசையில்லை எனக்கு

தீண்ட வந்த விரலை
எரித்து விடும்
எண்ணமில்லை எனக்கு

இத்துப் போன
என்னிதயத்தில்
மரித்துப் விட்ட
கனவுகளை
என்றும் போல்
இன்றும் மறைத்துக் கொள்கிறேன்

அக்குயிலுக்கு
இரகங்கள் அறிந்த
ராஜ குயிலொன்று
துணையாய்
கிடைக்கும் வரை .

எழுதியவர் : ஹபீலா ஜலீல் (21-Mar-13, 3:10 pm)
பார்வை : 151

மேலே