உழைக்கும் மரங்கள் – கே.எஸ்.கலை

நாடும் வீடும்
அழகாய் இருக்க,
நீள அகலங்கள் கச்சிதமாய்
கத்தரிக்கப் பட்டு
வளர்க்கப் படும்
“குரோட்டன்” மரங்கள்
நாங்கள் !

இதயத்துக்குள்
நீரூற்றி, பசளையிட்டு
வெளியே தெரியாமல்
அடங்கியே வளர்ந்துக்
கொண்டிருக்கும்
“போன்சாய்” மரங்கள்
எங்கள் கனவுகள் !

வியர்வைச் சிந்தினால் தான்
உழைப்பாளி என்பதால் –
குளிராக்கிகள்
உறிஞ்சிக் கொள்ளும்
வியர்வை - எங்களை
வருத்தமில்லா,வறுமையில்லா
வாலிபர்களாய்க்
காட்டிக் கொண்டிருக்கிறது !

நிரந்தரத் தூக்குக் கயிறாய்
கழுத்தில் இறுக்கிக் கொண்டிருக்கும்
கழுத்துப் பட்டிகளும்,
நீள கை, கால் சட்டைகளும்
நவீன ஆயுள் கைதிகளின்
சீருடை என்பது
யாருக்கும் தெரியாது !

ஆங்கில கையெழுத்துடன்
அழைத்து வரப்பட்டு-
கணினிகளாலும், கோப்புகளாலும்
கழுத்து நெரிக்கப் பட்டு,
யாருக்கும் தெரியாமல்
உள்ளுக்குள் திணறும்-
உள்நாட்டு “பரதேசிகளாய்”
உருளும் வாழ்க்கை !

வினைத்திறன் மிக்க
தைலங்களும், மாத்திரைகளும்
நோய்களை விழுங்க,
தைலம் தடவ
கைக்கெட்டா தூரங்கள்-
கன்னங்களில்
கண்ணீர்த் தடவிப் போகும்
அம்மாவை நினைத்து !

எங்களுக்கு
நிறுவனங்களிடமிருந்து
நிறையவே கிடைக்கிறது-
காசு பணம் உட்பட
காலாண்டு, அரையாண்டு
சுற்றுலாக்கள் எல்லாமே !
எங்காவது-
நிம்மதி, சந்தோசம்,
ஆரோக்கியம் விற்கும்
சந்தை உண்டா ?

எழுதியவர் : கே.எஸ்.கலை (22-Mar-13, 8:57 am)
பார்வை : 544

மேலே