என் வாடகை வீடுகள் கவிதையாகின்றது…..
ஒரு சிறையிலிருந்து
இன்னொரு சிறைக்கு
மாறுவது போல்தான்
இருக்கிறது
வாடகை வீடு மாறுதல்…!
*************************************
மாத வாடகையை
வங்கியில் செலுத்தும் வீடுகளில்
கல்வி அதிகாரியின்
ஆய்வினை
வருடமொருமுறை சந்திக்கும்
மாணவன் போல் தான்
எதிர்க் கொள்கிறேன்-
வீட்டு உரிமையாளரை…!
*************************************
என் குழந்தைகளின்
சுவர் தாங்கிய
கோட்டோவிய முகங்களில்…
வண்ணம் என்கிற பெயரில்
இந் நேரம்
கரிபூசப் பட்டிருக்கும்…!
*********************************
அடையாளம் ஏதும்
சூட்டிக் கொள்ளாமல்
விதவையாகவே கிடக்கிறது….
பண்டிகைக் காலங்களிலும்
அலங்கரிக்க முடியா
இவ்வாடகை வீடு…!
*****************************
வாடகை வீட்டில்….
அதிரா நடையும்
அந்தி சாயும் முன் வருகையும்…
குக்கர் பொங்கலும்…
பொட்டுவெடித் தீபாவளியும்…
என… இன்னும்
பள்ளிக்கூடம் போல்தான்
போய்வருகிறேன்…!
*****************************
சொந்தவீடு சென்றபின்
முந்தைய வீட்டின்
உரிமையாளர்களைப்
பார்க்கும் போதெல்லாம்
ஆஆ………வென கத்தியும்
துள்ளிக் குதித்தும்
கூச்சலிடத் தோன்றுகிறது…!