நதிகள் கலந்த சமுத்திரம்!-----(அகன் )

சன்னல் கம்பிகளின் ஊடே
கசிந்துள் நுழைந்த நிலா
படுக்கையில் என்னோடு –
மனைவி ஊரிலில்லை!

வாசலின் ஓரம்
வைகறை ஈரம்
பனித்துளிகளின் கோலம் –
மனைவிஊரிலில்லை!


வயிற்றின் உள்ளே
பசியின் யாகம்
சோர்வின் நிலையம் –
மனைவி ஊரிலில்லை!
!

இருட்டின் வேடம்
இருகிய தேகம்
உறவின் தாகம் –
மனைவி ஊரிலில்லை!


விடிந்து முடிந்தது
வெளிச்சம் படிந்தது
உற்சாகமோ ஒடிந்தது –
மனைவிஊரிலில்லை!


புதிய தண்ணீர் இல்லை
பழைய தண்ணீர் இல்லை
தாகமோ மாபெரும் தொல்லை –
மனைவி ஊரிலில்லை!


வியர்வை வெறுப்பு எனக்கு
பழையத்துணிப் பந்துகளில்
வீசும் மணத்தோடு என் தேகம் –
மனைவி ஊரிலில்லை!


தரையெல்லாம் புழுதி
துடைக்கவில்லை அமிழ்த்தி
உள்ளது அவற்றில் அவளின் காலடி –
மனைவி ஊரிலில்லை!


புதிய பலகாரங்களோடு
சேர்த்து பலமுறை
சுட்டிருப்பாள் வினாக்களை-
“ஏம்யா, எப்படியிருக்கி, சொவை இருக்கா?”
சிலமுறையும்
விடை வெளி வந்ததில்லை, என்னிலிருந்து!
பழைய சோற்றின், குழம்பின்
குழையும் சிநேகிதம் இப்போதெனக்கு –
மனைவி ஊரிலில்லை!

இல்லறம் ஒரு புல்லாங்குழல்
சுயநல காற்றூதல் – அபஸ்சுரம்
இணைந்த இதழ்களின் குவிப்பு – சுகராகம்
குழலிசைத்தேன். காணவில்லை இசை
மனைவி ஊரிலில்லை!


அன்றியும்
அவளும் நானும்
நதிகள் கலந்த சமுத்திரம்!

மனைவி என்னில் உள்ளாள்!

எழுதியவர் : அகன் (26-Mar-13, 9:50 pm)
பார்வை : 87

மேலே